Published:Updated:

கொரோனா: முஸ்லிம் தன்னார்வலர்களைக் குற்றம்சாட்டிய பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா - வலுக்கும் எதிர்ப்பு

தேஜஸ்வி சூர்யா
தேஜஸ்வி சூர்யா

நோயாளிகளுக்குப் படுக்கைகளை ஒதுக்குவதில் நடக்கும் முறைகேடுகளுக்கு 'கொரோனா வார் ரூமில்' பணிபுரிந்துவரும் 17 இஸ்லாமிய ஊழியர்கள்தான் காரணம் என்பதுபோல் அவர்களை மையப்படுத்தி பாஜக எம்.பி தேஜஸ்வி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெங்களூரு மாநகராட்சியில் கடுமையாகப் பேசியிருந்தார்.

கர்நாடகாவில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தினமும் உச்சம் தொட்டுவருகிறது. நேற்றைய தினம் மட்டும் அங்கு ஒரே நாளில் புதிதாக 50,112 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகள் படுக்கைகள் கிடைக்காமல் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மாநில தலைநகர் பெங்களூரில் கடும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குப் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் தவித்துவருகின்றனர்.

பெங்களூரூல் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு பெங்களூரு மாநகராட்சி `கொரோனா வார் ரூம்' என்ற பெயரில் பிரத்யேக கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைத்து மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வுகளையும், நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளையும் செய்துவருகிறது. குறிப்பாக, மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப் படுக்கைகள் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் இந்தக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து உதவி கேட்டால் மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்கி உதவுவார்கள்.

கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையின்போது தொடங்கப்பட்ட இந்த கொரோனா வார் ரூமுக்கு பெங்களூரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து, தற்போது இரண்டாம் அலையிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில், பெங்களூரூவில் இயங்கிவரும் மாநகராட்சியின் 'கொரோனா வார் ரூமில்' நோயாளிகளுக்குப் படுக்கைகளை ஒதுக்குவதில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்துவருவதாகப் பெங்களூரு தெற்குத் தொகுதி பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்கள் மத்தியில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

வாக்குவாதத்தில் ஈடுபடும் தேஜஸ்வி சூர்யா
வாக்குவாதத்தில் ஈடுபடும் தேஜஸ்வி சூர்யா

பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி மாநிலத்தில் நடைபெற்றுவரும் நிலையில் பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா மாநகராட்சியில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் மாநில பா.ஜ.க-வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பெங்களூரூ மாநகராட்சியின் கொரோனா வார் ரூமை மூன்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் சென்று ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி, ``மாநகராட்சியில் கொரோனா பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுவருகின்றனர். கொரோனா காலத்தில் மக்கள் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் பரிதவித்துக்கொண்டிருக்கும் வேளையில், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு இல்லையென்று கூறிவிட்டு, பணம் படைத்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு படுக்கைகளை ஒதுக்கிவருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் இருந்தும் தர மறுக்கிறார்கள்" என்று மாநகராட்சி மீது குற்றம்சாட்டினார்.

மேலும் தேஜஸ்வி சூர்யா, வார் ரூமிலுள்ள அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், நோயாளிகளுக்குப் படுக்கைகளை ஒதுக்குவதில் நடக்கும் முறைகேடுகளுக்கு `கொரோனா வார் ரூமில்' பணிபுரிந்துவரும் 17 இஸ்லாமிய ஊழியர்கள்தான் காரணம் என்பதுபோல் அவர்களை மையப்படுத்தி விமர்சித்திருந்தார். 17 பேரின் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு சத்தமாக வாசித்துவிட்டு, ``இந்த இஸ்லாமியர்கள் யார்... எதற்காக இங்கே இருக்கிறார்கள்... இவர்களை யார் பணிக்கு அமர்த்தியது... இவர்களை எதன் அடிப்படையில் பணிக்கு எடுத்தீர்கள்... கார்ப்பரேஷனுக்கு வேலை செய்ய ஆள் எடுத்தீர்களா மதராஸாவுக்கு வேலை செய்ய ஆள் எடுத்தீர்களா?’’ என்று மாநகராட்சி உயரதிகாரிகளிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். தேஜஸ்வியின் பேச்சு மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. தேஜஸ்வியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், ``பெங்களூரு கொரோனா வார் ரூமில் பணிபுரியும் 200-க்கும் அதிகமான ஊழியர்களில், குறிப்பாக 17 இஸ்லாமிய ஊழியர்களின் பெயர்களை மட்டும் பட்டியலிட்டு அவர்கள் மீது பழி சுமத்தி மத அரசியல் செய்வது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி கொரோனா காலத்தில்கூட மக்கள் மத்தியில் மதரீதியான மோதல்களை ஏற்படுத்த முயன்றுகொண்டிருக்கிறார்" என்று விமர்சித்துவருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்
காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், ``பெங்களூரூ மாநகராட்சியில் ஊழியர்களை நியமித்தது பா.ஜ.க அரசுதான். அந்த அலுவலகத்தில் பா.ஜ.க-தான் பெரும்பான்மை வகிக்கிறது. இந்தச் சூழலில், தற்போது முறைகேடு நடந்துள்ளதாக தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளது பா.ஜ.க-வினர் மூலமாகத்தான் நடந்துள்ளது என்பததை உறுதிப்படுத்தியிருக்கிறது. மத மோதலை உண்டாக்கும் முயற்சியில் தேஜஸ்வி உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டார். இதைப் பற்றி முறையாக விசாரிக்க வேண்டும்" என்று மாநில அரசை வலியுறுத்தினார்.

இதற்கிடையில், தேஜஸ்வியின் புகார் தொடர்பாக விசாரிக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்றைய தினம் மாநில குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீஸார் பெங்களூரு மாநகராட்சியில் லஞ்சம் பெற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகளை ஒதுக்கியதாக ஒரு பெண் உட்பட நான்கு ஊழியர்களைக் கைதுசெய்துள்ளனர்.

100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவரும் இடத்தில் 17 இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிட்டு இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பேசியதாக பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு