அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

தடுப்பூசி போடக்கூட ஆள் இல்லை... தவிக்கும் மக்கள்... போராட்டத்தில் செவிலியர்கள்!

செவிலியர்கள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
செவிலியர்கள் போராட்டம்

செவிலியர்கள் பற்றாக்குறை, தலைமை மருத்துவமனைகளில் மட்டுமல்ல.... ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

தமிழ்நாட்டில் கொரோனா பேரிடரின்போது தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், கடந்த 2 ஆண்டுகள், 7 மாதங்கள் பணியாற்றிய நிலையில், கடந்த டிசம்பர் 31-ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் ஒப்பந்தச் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்துவருவதாகப் புகார்கள் குவிகின்றன.

தடுப்பூசி போடக்கூட ஆள் இல்லை... தவிக்கும் மக்கள்... போராட்டத்தில் செவிலியர்கள்!

இது குறித்து, நமக்கு நாமே நர்ஸுகள் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் செந்தில் நாதன் பேசும்போது, “மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) விதிகளின்படி, 500 படுக்கைகளுக்கு, 350 செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். இந்திய பொது சுகாதார (IPH) விதிகளின்படி 500 படுக்கைகளுக்கு, 225 செவிலியர்கள் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்திய பொது சுகாதார விதிகளையே பின்பற்றுகிறது. ஆனாலும், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் அளவுக்கு ஏற்ப செவிலியர்கள் நியமனம் நடைபெறுவதில்லை.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 1,661 படுக்கைகளுக்கு 747 செவிலியர்களுக்குப் பதிலாக 334 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். 3,162 படுக்கைகள்கொண்ட சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 1,423 செவிலியர்களுக்கு பதில் 700 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். இப்படி, தமிழ்நாடு முழுக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 21,600 செவிலியர் காலிப் பணியிடங்களும், அரசுத் தலைமை மருத்துவமனைகளில் சுமார் 9,000 செவிலியர் காலிப் பணியிடங்களும் இருக்கின்றன. போதிய அளவிலான செவிலியர்களை நியமிக்காமல் இருப்பதும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் சேர்ந்தவர்களை விரட்டுவதும் நியாயமற்றது” என்றார் காட்டமாக.

தடுப்பூசி போடக்கூட ஆள் இல்லை... தவிக்கும் மக்கள்... போராட்டத்தில் செவிலியர்கள்!

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.இந்திரா, “செவிலியர்கள் பற்றாக்குறை, தலைமை மருத்துவமனைகளில் மட்டுமல்ல.... ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பணியிடமாற்ற உத்தரவைப் பெற்றவர்கள்கூட இன்னும் மாற்றப்படவில்லை. அரசு, தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமிக்கவே தீவிரம் காட்டிவருகிறது. மனஉளைச்சலில்தான் வேலை செய்கிறோம். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடவே இங்கு செவிலியர்கள் இல்லை” என்றார்.

செந்தில்நாதன், இந்திரா
செந்தில்நாதன், இந்திரா

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். “அரசு மருத்துவமனைகளில் 3,000 காலிப் பணியிடங்கள்தான் இருக்கின்றன. அதை நிரப்புவதற்கான வேலையை எம்.ஆர்.பி தொடங்கியிருக்கிறது. செவிலியர்களுக்கு எந்தவிதப் பணி பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம். எது செய்தாலும் விதிமுறைகளின்படிதான் செய்ய முடியும்” என்றார் சுருக்கமாக.

கொரோனா காலகட்டத்தில் உயிரைப் பணயம்வைத்து பணிபுரிந்த செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.