Published:Updated:

``கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணி இதுதான்!" - கொதிக்கும் `தன்னாட்சி' சரவணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிராம சபை மீட்பு வாரத்தில் நடைபெற்ற கூட்டம்
கிராம சபை மீட்பு வாரத்தில் நடைபெற்ற கூட்டம்

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவை காரணம் காட்டி இந்த வருடம் ஜனவரி 26-ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடத்த அனுமதியில்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி, உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி, காந்தி ஜயந்தியான அக்டோபர் 2-ம் தேதி ஆகிய நான்கு நாள்களில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு கொரோனா காரணமாக கிராம சபைக் கூட்டம் நடக்கவே இல்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவை காரணம் காட்டி இந்த வருடம் ஜனவரி 26-ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

க.சரவணன்
க.சரவணன்

தன்னாட்சி அமைப்பின் தலைவர் க.சரவணனிடம் பேசினோம், ``கிராம சபைக் கூட்டம் நடந்து சரியாக ஒரு வருடம் கடந்துவிட்டது. 2020 ஜனவரி 26-ம் தேதிதான் இறுதியாக கிராம சபைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு, கொரோனா பெருந்தொற்று காரணமாக மே 1-ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டமும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டமும் நடக்கவில்லை. கொரோனா தாக்கம் ஓரளவுக்கு குறைந்த சூழலில், 2020 அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று ஊராட்சி இயக்குநரகத்திலிருந்து அறிவிப்பு வந்தது.

இந்தச் சூழலில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து கிராமங்களிலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தி.மு.க-வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தயாராகின. அப்படியான தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்பதற்காகத்தான் அக்டோபர் 2-ம் தேதி நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி இரவு ரத்து செய்தார்கள்.

கிராமசபை
கிராமசபை
கிராம சபையைக் கூட்ட வலியுறுத்தி `கிராம சபை மீட்பு வாரம்'... கைகோக்கும் அமைப்புகள்!

அதையடுத்து, தன்னாட்சி, அறப்போர், சட்டப் பஞ்சாயத்து, வாய்ஸ் ஆஃப் பீப்பிள், தோழன் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து கிராம சபை மீட்பு வாரம் என்று நடத்தினோம். பசுமை விகடன் மீடியா பார்ட்னராக இணைந்து எங்களது குரலுக்கு வலுசேர்த்தது. அதன் மூலம் `கிராம சபை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு கொரோனாவை காரணம் காட்டாமல் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்' என வலியுறுத்தினோம். ஆனால், அரசு அதற்கு அசைந்துகொடுக்கவில்லை. இதற்கிடையில் தி.மு.க மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சென்ற வாரம் விசாரணைக்கு வந்தது. வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜனவரி 26-ம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராம சபைக் கூட்டம் குறித்த முடிவுகள் எதையும் எடுக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ஜனவரி 23-ம் தேதி அன்று ஊராட்சி இயக்குநரகத்திலிருந்து ஜனவரி 26-ம் தேதி நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்யச் சொல்லி அறிவிப்பு வெளியானது. இதுவரை தொடர்ந்து நான்கு கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. வருகிற மே 1-ம் தேதி நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டமும் நடக்குமா என்று தெரியவில்லை. தேர்தல் நெருங்கி வந்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்பட்சத்தில் அந்தக் கிராம சபைக் கூட்டமும் நடக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலில் இருப்பதால் கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவைப்படுகிறது. இல்லையெனில் 7 நாள்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்துவிட்டு பஞ்சாயத்து தலைவரே கிராம சபையைக் கூட்டலாம் விவாதப் பொருள் என்ன என்பதை மட்டும் மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தினால் போதுமானது.

பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலில் இருப்பதால்தான் அதைச் செய்ய முடியவில்லை. சட்டத்துக்குட்பட்டு நடக்க நினைக்கும் மக்களை இந்த அரசு பொருட்படுத்தவே இல்லை. அவர்களது உரிமைகளை வழங்க மறுக்கிறது. பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்களே எச்சரித்தபோதும் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கியவர்கள், ஜெயலலிதா நினைவு மண்டம் திறப்பதற்கு அவ்வளவு கூட்டத்தைக் கூட்டியிருப்பவர்கள் கிராம சபைக் கூட்டத்தை மட்டும் கொரோனாவைக் காட்டி ரத்து செய்வது மிகவும் அபத்தம்.

கிராம சபை கூட்டம் - கோப்பு படம்
கிராம சபை கூட்டம் - கோப்பு படம்

மக்களைப் பார்த்து இந்த அரசு அஞ்சுகிறது. விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிடக் கூடாது என்பதற்காக கடந்த அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்த இவர்கள்... தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்போது கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டினால் ஆட்சியின் ஊழல் குறித்து மக்கள் விவாதிப்பார்கள், கேள்வி கேட்பார்கள். அது தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் இந்த ஜனவரி 26-ம்தேதி கூட்டத்தையும் ரத்து செய்திருக்கின்றனர். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்" என்றார் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு