Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அமீராவின் கன்னத்தில் வடிந்த ரத்தம்’ | பகுதி- 8

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )

அமீரா இந்த முகாமுக்கு வந்த நாள் முதல், தனது உடையில் சுதந்திரம் அடைந்தவளாக, விரும்பியதை அணிந்தாள். மதத்தாலும், சமூகக் கட்டுப்பாடுகளாலும் ஆஸ்திரேலியா தனக்கு விடுதலை தந்துவிட்டதாக உணர்ந்தாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அமீராவின் கன்னத்தில் வடிந்த ரத்தம்’ | பகுதி- 8

அமீரா இந்த முகாமுக்கு வந்த நாள் முதல், தனது உடையில் சுதந்திரம் அடைந்தவளாக, விரும்பியதை அணிந்தாள். மதத்தாலும், சமூகக் கட்டுப்பாடுகளாலும் ஆஸ்திரேலியா தனக்கு விடுதலை தந்துவிட்டதாக உணர்ந்தாள்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

விடியும்வரை காத்திருந்த வெளிச்சம், இருளின் கதிர்களை பத்திரமாகக் கவ்விக்கொண்டு மறைந்தது. ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டேயிருந்த கம்பிவேலிகளுக்கு மத்தியில் மீண்டும் பகல் வந்து குந்திக்கொண்டது.

குயிலனின் குழந்தைக்கு எட்டுச்செலவு செய்வதற்காக தமிழ் அகதிகள் அதிகாலையிலேயே எழுந்து சமைத்தார்கள். முகாம் சமையலறையைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை, குடிவரவு அமைச்சு, அன்றைக்கு மாத்திரம் வழங்கியிருந்தது. சமையலுக்கு கத்தியோ, எந்தவிதமான கூரான பொருளோ பயன்படுத்த அனுமதியில்லை என்று முன் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தேவையான காய்கறிகளை முதல்நாளே பட்டியல் போட்டுக் கொடுக்க, முகாம் சமையல்காரர்கள் வெட்டிக்கொடுத்திருந்தார்கள்.

அகதிச் சமையல்காரர்களை மேற்பார்வையிடுவதற்கு நான்கு பிரத்யேக உத்தியோகத்தர்கள் சமையலறையில் பணியிலிருந்தார்கள்.

முகாமின் தென்மூலையிலிருக்கும் விசாலமான சாப்பாட்டு மண்டபத்துக்கென்று தனியான வரலாறு உள்ளது. இந்த முகாமில் அகதிகள் அனுபவித்த அதே காயங்களையும் கலவரங்களையும், சாப்பாட்டு மண்டபமும் சந்தித்திருக்கிறது.

பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த முகாமில், சமையலென்பது அநேக நாள்களில் பொதுவானதாகவே தயாரிக்கப்பட்டது. எந்த நாளும் சோறு இருக்கும். அதில் பிரச்னையில்லை. வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றோடு சத்தான குழைகளின்மீது உப்புநீர் தெளித்து பெரிய தட்டில் வைத்திருப்பர். கடலை அல்லது கத்திரிக்காய்க் கறி. சிலவேளைகளில் இரண்டையும் சேர்த்து குழம்பு என்ற பெயரில் ஒரு திரண்ட சிவப்புத் திரவத்தை அலுமினியக்குழியில் வார்த்து வைத்திருப்பர்.

ஆஸ்திரேலிய பொதுச்சமையலறைகளில் குழம்பு தயாரிப்பது என்று முடிவெடுத்துவிட்டால்,

தகர புட்டிகளில் அடைத்து விற்கப்படும் தக்காளிக் குழையலை இஷ்டத்துக்கு கவிழ்த்துக் கொட்டிவிடுவது இங்குள்ள பரிதாபமான பாரம்பர்யம்.

உறைப்பு, புளிப்பு சகலத்தையும் அந்தத் தகரத் தக்காளியே பொறுப்பேற்று ஒப்பேற்றித்தரும் என்று சமையல்பிரியர்கள் நம்புகிறார்கள். தாளிதங்களைக் கொட்டி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டால், அது குழம்பு என்று திருப்திகொள்கிறார்கள். ஆசியச் சமையல் பாரம்பர்யங்களின் அடிப்படையிலான எந்த உபரியான வஸ்துகளும் இந்தக் குழம்பு கறிகளில் இருக்காது.

இப்படிப்பட்ட கறிகளில் எதிர்ப்பார்த்த சுவை கிடைக்காது என்பதற்கு அப்பால், குறிப்பிட்ட நேரத்துக்கு சமிபாடு அடைவதற்கும் இந்தவகை சமையல்கள் பெருந்தடை என்பது அடுத்த பெரும் சோகம்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

முகாமின் மதிய நேரச் சாப்பாட்டிலிருக்கிற ஒரே நம்பிக்கை, வதக்கிய கோழி அல்லது உருளைக்கிழக்கு வறுவல். கூடவே, சிலவேளைகளில் அவித்த முட்டை கொடுப்பார்கள்.

சாப்பாட்டு நேரம் வரைக்கும் மண்டபம் பூட்டியே கிடைக்கும். உள்ளே ``தயார்” என்று அறிவித்ததும், உத்தியோகத்தர்கள் பிரதான கதவைத் திறந்துவிடுவார்கள். அதுவரைக்கும் வெளியில் காத்திருந்த பசியின் நீண்ட வரிசை உள்ளே புனலெனப் பாயும்.

எல்லோருக்கும் முதல் தடவை பரிமாறிய பிறகு, இரண்டாவது தடவை வேண்டுமானவர்கள் மீண்டும் வரிசையில் நின்று கேட்டுண்ணலாம்.

இரவுச் சாப்பாட்டுக்கும், கிட்டத்தட்ட இதேமாதிரியான சாப்பாடுகள்தான். சமையலறையின் ஒரு மூலையில், பான் - பட்டர் போன்றவற்றை எப்போதும், எத்தனை தடவையும் எடுத்துச் சாப்பிடலாம் என்ற வசதியுள்ளது.

இந்த ஒட்டுமொத்தச் சாப்பாட்டு மண்டப ஒழுங்குகளைக் கண்காணிப்பதற்கு, மதிய, இரவு உணவு வேளைகளில் ஆறேழு உத்தியோகத்தர்கள், அத்தனை அகதிகளையும் கண்காணித்தபடியிருப்பர். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

எனது அனுபவத்தில் இந்தச் சாப்பாட்டு மண்டபத்தில் வாரத்துக்கு இரண்டு மூன்று தடவையாவது கடும் சண்டைகள் நடைபெறும்.

இந்த சம்பூர்ண கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பத்து, பதினைந்து உத்தியோகத்தர்களாவது தேவைப்படுவர். கதிரைகள் உடையும், தட்டுக்குள் பறக்கும், பெண்கள் குழறுவர், குழந்தைகள் வீறிடுவர். சாப்பாடு கழுவாத கைகளோடு, குழப்பவாதிகள் வெளியே இழுத்துச் செல்லப்படுவர்.

இதற்கெல்லாம் சாப்பாடு மட்டும் காரணமாவதில்லை. சாப்பாட்டு வேளையில், முகாமிலுள்ள எல்லோரும் அங்கு கூடவேண்டியது கட்டாயமென்பதால், தங்களுக்குள் பிரச்னையானவர்களும் ஆளையாள் சந்திக்கவேண்டியிருக்கும். எவ்வளவுதான் கோழி வதக்கலும், உருளைக்கிழங்கு வறுவலும் கண்முன்னே கிடந்தாலும், மதியமோ, இரவோ ஒரு சண்டை போட்டால்தான் சோறு செமிக்கும் என்று முடிவோடு எவனாவது சாப்பாட்டு மண்டபத்துக்குள் நுழைந்துவிடுகிறபோது, உத்தியோகத்தர்கள் மருந்துப் பையோடு ஓடித்திரியவேண்டியது அங்கு நிர்பந்தமாகிவிடும்.

`சார்ளி’ கம்பவுண்டில் பஸ்னா பேகம் என்ற ஐம்பதுகளில் மதிக்கத்தக்க தாயும், அமீரா என்ற அவள் மகளும் தங்கியிருந்தார்கள். இந்தோனேசியத் தகப்பனுக்கும், இராக் தாயாருக்கும் பிறந்த அமீரா, பதினேழு வயதில் தாயோடு படகேறி ஆஸ்திரேலியா வந்தாள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

இராக்கிலிருந்து இந்தோனேசியாவுக்கு அகதியாக வந்த பஸ்னா பேகம், இந்தோனேசிய வாகன ஓட்டியொருவரை செமன்யாக் சுற்றுலா நகரில் கண்டு, காதலித்துத் திருமணம் செய்தாள். திருமணத்தின் பின்னர், இந்தோனேசியாவைப் புகுந்த நாடாகக் காதலித்து வாழ்க்கை நடத்தினாள். ஒருநாள், செமன்யாக் பகுதியில் குரங்குகளை ஏற்றிச்செல்லும் லொறியொன்றுடன் இடம்பெற்ற விபத்தில், பஸ்னா பேகத்தின் கணவன் பலியானான்.

கணவரின் ஜனாஸாவை அடக்கம் செய்த அன்றைக்கே, தனது வாழ்க்கையை வேகமாகச் சிந்தித்தாள் பஸ்னா பேகம். ஆஸ்திரேலியாவை நோக்கிய தனது ஓட்டத்தில் இந்தோனேசியா ஓர் இடைத்தங்கல் நாடு என்பதுபோலத்தான் தன்னுடைய கணவரின் மரணம் நிகழ்ந்திருப்பதாக உணர்ந்தாள்.

அகதிகளின் கால்கள் தங்களைவிட்டு ஓடிக்கொண்டிருக்கம் உலகின் எல்லா எல்லைகளையும் தாண்டுவதற்கான மூன்றாம் பாதத்துடன் பிறந்தவை.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அன்று இந்தோனேசியாவில் லெபரோன் பண்டிகை விடுமுறை. இரண்டு நாள்களுக்கு நாடு முழுவதும் கொண்டாடித் தீர்க்கும் இந்தப் பெருநாளில் அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுபவர்கள், மிக நேர்த்தியாகத் தொழில் செய்யத் தொடங்கிவிடுவது வழக்கம். ஏனெனில், பண்டிகை நாள்களில் இந்தோனேசியக் கடற்படையினர் கடல் கண்காணிப்புகளை பெரிதுபடுத்துவதில்லை. அந்தரித்து அகதிகளாக ஓடுபவர்களை நடுக்கடலில்வைத்துப் பிடித்து, அவர்களது சாபத்தைப் பெற்றுவிடக் கூடாது என்று, ஆண்டவரின் பெயரால், படையினர் கடலில் இறங்க மாட்டார்கள். அப்படியே யாரையாவது கடலில் பிடித்தாலும் விடுதலை செய்துவிடுவார்கள். அது தமக்கொரு பாவமாக அமைந்துவிடும் என்ற நம்பிக்கைகொண்டவர்கள். இந்த நம்பிக்கையைப் படகு விடுகிறவர்கள் செழிப்பாகப் பயன்படுத்துவார்கள்.

லெபரோன் விடுமுறையிரவு புறப்பட்ட படகொன்றில் ஏறி, பஸ்னா பேகமும் மகளும் நான்கு நாள்களில் கிறிஸ்மஸ் தீவு வந்தடைந்தவர்கள்,

அங்கிருந்து மெல்போர்ன் முகாமுக்கு இடமாற்றப்பட்டார்கள்.

மெல்போர்ன் முகாமிலிருந்த தனிப்பெடியன்களுக்கு அமீரா ஒவ்வொரு நாளும் இரண்டாம் சூரியனாக உதித்தாள். இரவில் இன்னொரு நிலவாக ஜொலித்தாள். அமீரா ஒரு தேசத்தின் மகள் அல்ல. இரண்டு நாடுகளின் கூட்டுருவாக்கம்.இராக்கின் ஒளிபொருந்திய கண்களும், இந்தோனேசிய வெண்கல வண்ணமும் நிறைந்த பருவப் பறவை. பதின்மத்தின் பாதியிலிருந்து வெடித்துப் புலர்ந்த தனது எழிலை, உடலெங்கும் தோகைபோலப் படரவிட்டிருந்தாள். உலக அகதிகளின் பெருமைக்குரிய பேரழகியாக அவள், முகாம் கண்கள் அனைத்திலும் நிறைந்து வழிந்தாள்.

அமீரா இந்த முகாமுக்கு வந்த நாள் முதல் தனது உடையில் சுதந்திரம் அடைந்தவளாக, விரும்பியதை அணிந்தாள்.

மதத்தாலும், சமூகக் கட்டுப்பாடுகளாலும் ஆஸ்திரேலியா தனக்கு விடுதலை தந்துவிட்டதாக உணர்ந்தாள்.

பல வருடங்களாக தனியன்களாகவே தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்வாசிகள் பலருக்கு, அமீராவின் வருகை, தடுப்பு வேலிக்குள் ஒரு பேரதிசயம் நுழைந்துகொண்டதுபோலிருந்தது.

முகாமுக்கு வெளியில்கூட ஆஸ்திரேலியா இப்படியோர் அழகியைக் கண்டிராது என்று அகதிகள் தீர்க்கமாக நம்பினார்கள்.

`அல்பா’ கம்பவுண்டிலிருந்து பலர் காலையிலேயே எழுந்து நடு மைதானத்தில் பயிற்சி செய்தார்கள். `சார்ளி’ கம்பவுண்டிலிருந்து இரண்டாம் சூரியனின் கதிர் மிதக்கும் நேரத்துக்காகக் காத்திருந்தார்கள். அமீராவைப் பற்றிய விவரங்களை ஆஸ்திரேலியக் குடிவரவு அலுவலகத்தைவிட, `அல்பா’ கம்பவுண்ட் பெடியன்கள் அதிகம் அறிந்திருந்தார்கள்.

இங்குதான் பிரச்னையே எழுந்தது.

முகாமில் ஆங்கிலம் கற்க விரும்புகிறவர்களுக்கு கமரன் என்ற இராக் அகதி இளைஞன் `அல்பா’ கம்பவுண்டில் ஒவ்வொரு நாளும் வகுப்பெடுத்தான். கமரன் யார் சோலிக்கும் போகாதவன். முகாமின் நீண்டகால அகதி. ஒராக் அகதிகளோடு வந்த படகில், திசைகாட்டி இயக்கியவன், செய்மதித் தொலைபேசியுடன் வந்தவன் என்று ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல்களால், ஆள்கடத்தல்காரர்களோடு தொடர்புடையவன் என்ற சந்தேகத்தில் விசா மறுக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்தான்.

மூன்று வருடங்களுக்கு முன்னர், கமரன் இந்த முகாமுக்கு வந்தபோது, அவனின் நாக்கை எத்தனை தடவை வழித்தெடுத்தாலும் ஓர் ஆங்கிலச்சொல் வராது. கமரன் படிப்படியாக ஆங்கிலத்தைப் பயின்றான். இரவு நேரத்தை, அதிகம் வாசிப்பில் செலவு செய்தான். வாரமொரு தடவை முகாமுக்கு வருகிற ஆங்கில ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்டான். உச்சரிப்புகளைச் சரிசெய்துகொண்டு, பேச்சுத்துணிவை அப்பியாசம் செய்வதற்கு, முகாம் உத்தியோகத்தர்களோடு ஆங்கிலத்தில் பேசினான். தன்னை ஆங்கிலத்தோடு தொடர்ந்து பிணைத்துவைத்திருப்பதற்கு, முகாமிலுள்ளவர்களுக்கு வகுப்பெடுத்தான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | வகுப்பு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | வகுப்பு

`அல்பா’ கம்பவுண்டிலிருந்த கமரனின் ஆங்கில வகுப்புக்கு அமீரா வந்து போனது பலருக்கு அனுகூலமாக அமைந்தது. அமீரா நன்றாக ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில், அமீராவைவிட பலருக்குக் கரிசனையிருந்தது. திடீரென்று கமரனின் ஆங்கில வகுப்பில் மாணவர்கள் அதிகரித்தார்கள்.

இது ஒருவித பித்துநிலைக் கூத்தாக பலருக்குக் களிப்பூட்டியது. அமீராவுக்குப் பின்னால் பலர் ஓடித்திரிந்தாலும், பங்களாதேஷ் இளைஞன் ரஹீம், அவளது பெயரைக் கையில் வெட்டிவைத்திருந்தான். இது தொடர்பான அறிக்கையொன்று உடனடியாகக் குடிவரவு அமைச்சின் அலுவலகத்துக்குப் பறக்க, அவர்களே அவனை அழைத்து விசாரித்தார்கள். ரஹீம் உன்மத்தச் சிரிப்போடு திரும்பி வந்துவிட்டான்.

தனக்குள் தவித்துக்கிடந்த வாலிபத்தின் வெறுமையையும் தனிமையையும் அமீரா தளும்பத் தளும்ப நிறைப்பதாக ரஹீம் உணர்ந்தான். உடற்பயிற்சி செய்யும்போது அவன் நெஞ்சிலும் அமீராவின் பெயரை வெட்டிவைத்திருப்பதாக, கண்ட சிலர் சொன்னபோதும், அந்த முறைப்பாடு குடிவரவு அமைச்சு வரை போகவில்லை.

அமீரா யாரையும் காதலோடு பார்க்காவிட்டாலும், கனிவோடு மலர்ந்து சிரித்தாள். ஆங்கில வகுப்பு தொடங்கும் வரைக்கும் `அல்பா’ கம்பவுண்ட்டிலுள்ள தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருப்பாள். அப்போது ஒரு சில தமிழ் அகதிப்பெடியளும், அவளுக்கு வேக வேகமாகத் தேநீர் தயாரித்துக் கொடுத்தார்கள். பொங்கிய நுரை அடங்கும் முன்னரே, தன்னிடம் நீட்டுகிற தேநீருக்கு, அமீரா சிவந்த இதழ் வெடித்து `மிக்க நன்றி’ என்பாள். தேவதைகளின் பிரகாசங்களில் ஒன்றான எழில்சிந்தும் புன்னகையைத் தங்கள் கண்களில் சேமிப்பதற்காகப் பலர் தங்களுக்குள் பலம் பார்த்தார்கள்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

அமீரா ஆங்கில வகுப்பில் லயித்தாள். அதை அவள் எப்போதும் தவறவிட்டதில்லை. வகுப்பு முடிந்த பின்னரும், கமரனிடம் கேள்விகளைக் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வதில் ஆர்வத்தோடிருந்தாள்.

அமீராவுக்கு இவ்வளவு ஆர்வத்துடன் கமரன் ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பது ரஹீமுக்குள் ஆத்திரக் கண்ணிகளைப் புதைக்கத் தொடங்கியது. அவள் வகுப்பிலிருக்கும் நேரம் முழுவதும், எதையோ இழந்துகொண்டிருப்பவனைப்போல வெளியில் அலைந்தான். போகிற போக்கில் சிலவேளைகளில் வகுப்பறைக் கதவில் யாருக்கும் தெரியாமல் உதைத்துவிட்டுப் போனான். ஆஸ்திரேலியாபோலவே, அமீராவும் தனக்குக் கைக்கெட்டியும் கிடையாமல் போகக்கூடும் என்று சினந்தான்.

எல்லாக் கண்ணிகளும் ஒரு நாள் சாப்பாட்டு மண்டபத்தில் வெடித்தன.

மதியச் சாப்பாட்டுக்கு ரஹீம் வந்தான். ஒரு கையில் தட்டையும் மறு கையில் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு, அமீராவோடிருந்து சாப்பிடுவதற்குப் போய்க்கொண்டிருந்த கமரனை அங்கு கண்டான். அதைப் பார்த்ததும் ரஹீமுக்குள் வலுசர்ப்பம் தீண்டிய வலியெழுந்து பின்தலையில் கொதித்து உடைந்தது.

சாப்பாட்டுத் தட்டுகளை நோக்கி வேகமாகப் போனான். ஓன்றைப் பிடுங்கி கமரனை நோக்கி எறிந்தான். கோபத்தில் எறிந்த இலக்கென்றாலும், குறி பிசகாது கமரனின் கன்னத்தில் அடித்தது. அருகிலிருந்த அமீராவின் மேல் எகிறி விழுந்தது.

அமீராவுக்குப் பின்னால் ரஹீம் சுழன்றுகொண்டு திரிகிறான் என்பது கமரனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், அவன் தனது சக அகதி என்ற மதிப்பு எப்போதுமிருந்தது.

ஒரு சாப்பாட்டு கூடத்தில் தன்னோடு இவ்வாறு நடந்துகொள்வான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

ஒரு நொடியில் கமரனின் கண்களுக்கு முன்னால் நட்சத்திரங்கள் பறந்தன. ரஹீம் நிறுத்தவில்லை. காலியாகவிருந்த பிளாஸ்டிக் கதிரையொன்றை எடுத்து கமரனை நோக்கி எறிந்தான். அதற்குமேல் நிதானிக்க முடியாமல், கமரன் பின்பக்கமாக சாப்பாட்டின் மீது சரிந்து விழுந்தான்.

ஓடி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள், ரஹீமைப் பின்பக்கமாகப் பிடித்து, தரையில் குப்புறப்போட்டார்கள். கைகளை மடக்கி வெளியில் இழுத்துப்போனார்கள்.

பசியோடு வந்திருந்தவர்கள் பதகளித்துப்போனார்கள். சிதறியோடினார்கள். பெண்கள், குழந்தைகள் குழறினார்கள். சிலர் சாப்பாட்டையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினார்கள். சிலர் ஓடும்போது விழுந்தார்கள். கதிரைகள் இடறியும் சிலர் புரண்டு எழுந்தார்கள்.

அமீராவின் கன்னத்தில் ரத்தம் வடிந்தது.

(தொடரும்)