கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... ஒரு புதிய ஆரம்பம்!

தனியார் ராக்கெட்
பிரீமியம் ஸ்டோரி
News
தனியார் ராக்கெட்

வெற்றிக்கு எல்லையில்லை என்று கூறுவார்கள். எங்களின் இத்தனை ஆண்டு உழைப்புக்கு முதல் முயற்சியிலேயே, அதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி

நவம்பர் 18, பகல் 11.30... இந்திய விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வானில் சீறிப்பாய்ந்த 20 மீட்டர் உயரம்கொண்ட Vikram-S ராக்கெட், 89.5 கி.மீ மேலே சென்ற அந்த நொடி `Mission Prarambh வெற்றி’ என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முழுவதுமாக ஒரு தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்நிகழ்வு, இந்திய விண்வெளித் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்.

தொழில்நுட்பத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. அதற்கேற்ப செயற்கைக்கோள்களின் அலைவரிசைகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக 2020-ல் விண்வெளித்துறையில் தனியாரின் பங்களிப்புக்கு அனுமதியளித்தது மத்திய அரசு. அரசு நிறுவனமான இஸ்ரோவுக்கு தனியார் நிறுவனங்கள் பலவும் முன்பே துணைபுரிந்து வரும் நிலையில், நேரடிப் பங்களிப்பாக தனியார் ராக்கெட் ஒன்று தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதன்முறை.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... ஒரு புதிய ஆரம்பம்!

இதைத் தன் முதல் முயற்சியிலேயே சாத்தியமாக்கியிருக்கிறது ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘Skyroot Aerospace' நிறுவனம். இஸ்ரோவில் பணியாற்றிய பவன்குமார் சந்தனா, நாகபரத் டாக்கா ஆகிய இரு விஞ்ஞானிகளால் விண்வெளி சார்ந்த எதிர்காலத் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நோக்கில் 2018-ல் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இதன் முதன்மை ஆராய்ச்சி யாளர்களில் ஒருவரான டாக்டர் C.V.S. கிரணுக்கு வாழ்த்துகள் கூறி உரையாடினேன்.

‘‘வெற்றிக்கு எல்லையில்லை என்று கூறுவார்கள். எங்களின் இத்தனை ஆண்டு உழைப்புக்கு முதல் முயற்சியிலேயே, அதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. வானம் வசப்பட்டிருக்கிறது” என உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் கிரண்.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... ஒரு புதிய ஆரம்பம்!

‘‘குறைந்த பொருட்செலவில் ராக்கெட்களைத் தயாரித்து சிறிய ரக செயற்கோள்களை விண்ணில் செலுத்துவதுதான் எங்கள் நோக்கம். நிறுவனம் தொடங்கிய நான்கு ஆண்டுகளில், சுமார் 800 கிலோ எடை கொண்ட ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை மூன்று நாள்களுக்குள் அசெம்பிள் செய்து விண்ணில் செலுத்தும் வகையில் நாங்கள் வளர்ந்துள்ளோம். இன்னொரு முக்கிய இலக்கையும் தொட்டிருக்கிறோம். ஒன்றுக்கும் மேற்பட்ட ‘Propulsion System’ எனப்படும் ராக்கெட்டின் உந்துவிசைக்கு உதவிடும் அமைப்பைக் கொண்டு சோதனை ஓட்டம் நடத்திய முதல் தனியார் நிறுவனமும் எங்களுடையதே. SpaceKidz India, N-space, BlazoomQ Armenia ஆகிய மூன்று நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் Vikram-S ராக்கெட்டில் செலுத்தப்பட்டன. இது எங்கள் இலக்கல்ல... 2023-ம் ஆண்டின் பிற்பகுதியில் நாங்கள் திட்டமிட்டிருக்கும் Vikram-1 ராக்கெட்டுக்கான மாதிரி ஓட்டம்தான் தற்போதைய நிகழ்வு. அந்த வகையில் எங்களின் Mission Prarambh வெறும் ஆரம்பம்தான்.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... ஒரு புதிய ஆரம்பம்!

தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (INSPACe) எங்களுக்கு மிகப்பெரும் ஆதரவை வழங்கியது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எங்கள் மொத்தக் குழுவினரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தனியார் நிறுவனங்களின் வரவு எந்த ஒரு துறைக்கும் புதுப் பாய்ச்சலை அளிக்கும். அந்த வகையில் பல்வேறு கனவுத் திட்டங்களைக் கொண்ட எங்களுக்கு இந்த வெற்றி மிகுந்த உத்வேகத்தைக் கொடுத் துள்ளது. அரசின் துணை கொண்டு நிச்சயம் சாதிப்போம்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் கிரண்.

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு என்பது இந்தியாவுக்குத்தான் புதிது. பல நாடுகளில் அரசு நிறுவனங்களுக்கு இணையாக தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்காவின் Space X நிறுவனம் நாசாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் சுமார் 350 தனியார் நிறுவனங்கள், விண்வெளி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. விண்வெளி தொடர்பான வணிகச்சந்தையில் இந்தியா கணிசமான இடத்தைப் பிடிக்க இதுபோன்ற முயற்சிகள் உதவும். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பணிகளில் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும்.

கிரண்
கிரண்

குறைந்த செலவிலான ராக்கெட் தயாரிப்பு, Reuse செய்யக்கூடிய ராக்கெட்கள், அளவில் பெரிய Capsule-களை வடிவமைத்தல் என தனியார் மேற்கொள்ளும் பணிகளைப் பெரிதாகப் பட்டியலிடலாம். அதே நேரத்தில் விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு கற்பனை செய்யவியலாத ஆபத்துகளை உருவாக்கும் என்ற கவலைக்குரலும் இன்னொரு பக்கம் ஒலிக்கிறது.

‘எவ்வளவு கவனத்தோடும் சிந்தனையோடும் அடிப்படை சமூக, பொருளாதார மாற்றங்களைச் செயல்படுத்துகிறோமோ, அவை அவ்வளவு நிரந்தரமாக இருக்கும்' என்கிறார் இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தையான விக்ரம் சாராபாய். அவரின் பெயரில் விண்ணில் பறந்திருக்கிறது Vikram-S ராக்கெட். விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வை உலகமே ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது!