Published:Updated:

`தளர்வுகள் என்னென்ன... எந்தெந்தக் கடைகள் திறக்கலாம்?’ விளக்கம் சொன்ன மத்திய அரசு அதிகாரிகள்

ஊரடங்கு
ஊரடங்கு

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத பகுதிகளில் சில விதிகளுடன் மத்திய அரசு தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 14 நாள்களில் இந்தியா முழுவதும் 80 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்ற தகவலை தெரிவித்தனர். இந்நிலையில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத பகுதிகளில் சில விதிகளுடன் மத்திய அரசு தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து பிற வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. நோய் பரவலைத் தடுக்கும் விதமாக அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே இயங்க மாநில அரசு அனுமதித்தது.

பிரதமர் மோடி முதலில் ஏப்ரல் 14-ம் தேதி வரைதான் ஊரடங்கு உத்தரவு அறிவித்திருந்தார். அதன்பின்னர் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது மத்திய அரசு. இதற்கிடையில் ஏப்ரல் 20-ம் தேதிக்கு பின்னர் சிலர் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் மேலும் சில அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மோடி
மோடி

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக சில கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களில் கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து கடைகளும் மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் கடைகள், நகராட்சியில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் முகக்கவசம் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்து திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் திறக்கலாம். ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதியில்லை.

கிராமப்புறங்களில் வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து கடைகளும் திறந்திருக்க இந்த அறிவிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைன் நிறுவனங்கள் தொடர்ந்து அத்தியாவசிய பொருள்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் சிகரெட் மற்றும் குட்கா பொருள்கள் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்த அறிவிப்பு தொடர்பாகவும், முடிதிருத்து கடைகள் திறக்கப்படுமா என்பது குறித்து உள்துறை இணை செயலாளர் புண்யா சலிலாவிடம் செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர் . அதற்கு பதிலளித்தவர், ``முடிதிருத்தும் கடைகளைத் திறக்க தற்போதைக்கு அனுமதி இல்லை. அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்கக் கூடாது” என்றார்.ரெட் ஸ்பாட் பகுதிகள் எந்த கடைகளும் திறக்க அனுமதியில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு