Published:Updated:

`உள்நோக்கத்தோடு செயல்படுகிறது தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆணையம்!’ - குற்றம்சாட்டும் லாரி உரிமையாளர்கள்

சரக்கு லாரிகள்
சரக்கு லாரிகள் ( எம். விஜயகுமார் )

``வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜி.பி.எஸ் கருவிகளை வாங்க அங்கீகரிக்கப்பட்ட பல கம்பெனிகள் இருந்தும், குறிப்பிட்ட சில கம்பெனிகளில் மட்டும் வாங்கச் சொல்வதில் உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறோம்.''

``லாரிகள் எஃப்.சி புதுப்பிப்பதற்கு பல புதிய விதிமுறைகள் போடப்பட்டிருக்கின்றன. அந்த விதிமுறைகளால் லாரி வர்த்தகமே முற்றிலுமாக முடங்கும் அபாயம் இருக்கிறது. அதனால் அந்த விதிமுறைகளை நீக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு முழுவதும் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்போம்” என்கிறார்கள் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்.

வாங்கிலி
வாங்கிலி

இது பற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் மாநிலச் செயலாளரும், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான வாங்கிலி, ''லாரிகள் மணிக்கு 80 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும்போது மட்டுமே ஓட்டுநர்கள் சீட் பெல்ட் போட வேண்டும். ஆனால், தற்போது லாரியை எவ்வளவு வேகத்தில் சென்றாலும் கட்டாயம் லாரி ஓட்டுநர்கள் சீட் பெல்ட் போட வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

லாரிகளுக்கு தரச்சான்று புதுப்பிக்கும்போது வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும். இந்தியாவில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை அரசு அங்கீகரம் பெற்ற 49 கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 14 கம்பெனிகளில் மட்டுமே வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை வாங்க அனுமதிக்கிறது. அந்த 14 கம்பெனிகளுக்கு ஏழு உரிமையாளர்கள்தான் இருகிறார்கள். நாங்கள் அனைத்து கம்பெனிகளிலும் வாங்க அனுமதிக்க வேண்டும் என்கிறோம்.

அதேபோல இந்தியாவில் ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிக்கும் கம்பெனிகள் 11 இருக்கின்றன. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இரண்டு கம்பெனிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்கிறது. முன்பு லாரிகளில் 2 1/2 இன்ச் இடைவெளிவிட்டு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவோம். அதற்கு 750 ரூபாய் செலவாகும். ஆனால் தற்போது இவர்கள் சொல்லும் கம்பெனியில் ஸ்டிக்கர் வாங்கினால் ரூ. 4,000 முதல் 6,000 வரை செலவாகிறது.

லாரிகள்
லாரிகள்

இந்தியாவில் ஜி.பி.எஸ் கருவி தயாரிக்கும் கம்பெனிகள் 140 இருக்கின்றன. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் எட்டு கம்பெனிகளில் மட்டுமே வாங்கச் சொல்லுகிறது. இப்படி லாரிகளுக்குப் பொருத்தப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜி.பி.எஸ் கருவிகளை வாங்க அங்கீகரிக்கப்பட்ட பல கம்பெனிகள் இருந்தும், அவற்றில் வாங்க அனுமதிக்காமல் குறிப்பிட்ட சில கம்பெனிகளில் மட்டும் வாங்கச் சொல்வதில் உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறோம்.

லாரிகளை நிறுத்தி சோதனைச் செய்யாமல், நம்பர் பிளேட்டைப் பார்த்து போக்குவரத்து போலீஸார் ஆன்லைன் மூலம் வழக்குகள் போடுகிறார்கள். இப்படிப் பல காரணங்களால் லாரி உரிமையாளர்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இந்த விதிமுறைகளை நீக்கவில்லையென்றால், விரைவில் தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்ட்ரைக் செய்வோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு