Published:Updated:

`ஜேசிபி-யை விலைக்கு வாங்கித் தூர்வாரினாலே ரூ.11 கோடி செலவாகாதே..!'- முறைகேட்டில் வேலூர் மாநகராட்சி?

வேலூர் கோட்டை அகழியைத் தூர்வார மட்டுமே ரூ.11 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். இதில், முறைகேடு நடந்திருப்பதாக வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.

தூர்வாரப்படும் கோட்டை அகழி
தூர்வாரப்படும் கோட்டை அகழி

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்பட்ட வேலூர் மாநகரில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வளர்ச்சிப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் புகழ்மிக்க வேலூர் கோட்டையின் அழகை மெருகேற்ற ரூ.33 கோடியை ஒதுக்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர். 

வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை

இவ்வளவு பெரிய நிதியை வைத்து கோட்டைக்குள் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தப்போகிறார்கள் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கோட்டையைச் சுற்றியுள்ள அகழியின் ஒரு பகுதியைத் தூர்வாருவதற்கே 11 கோடி ரூபாயை முதற்கட்டமாக ஒதுக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

நுழைவு வாயிலில் பிரியும் வலதுபக்க அகழியில் நீர் நிறைந்து அழகாகக் காட்சியளிக்கிறது. இடதுபக்க அகழி, செடி கொடிகளால் அடர்ந்து தூர்ந்துகிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்தி, தண்ணீரை பளிச்சிட வைக்க சென்னையிலிருந்து 50 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட நான்கு மிதவைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

தூர்வாரப்படும் அகழி
தூர்வாரப்படும் அகழி

இந்த அகழியில், தற்கொலை செய்துகொண்டும், தவறி விழுந்தும் பலர் உயிரிழந்திருப்பதால், அருகில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்துவிட்டு பணியைத் தொடங்கினர். மிதவைகளின் மேல் பொக்லைன் இயந்திரங்களை நிலைநிறுத்தி, சேற்று மண்ணைத் தூர்வாரி, லாரிகள் மூலம் கொண்டுசென்று மாநகராட்சியில் உள்ள பள்ளமான இடங்களில் கொட்டுகிறார்கள். 

இந்த நிலையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முறைகேடு நடப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. ‘‘அகழி தூர்வாரப்படுவது வரவேற்கத்தக்கதுதான். சொந்தமாக பொக்லைன் இயந்திரங்களையும் மிதவைகளையும் விலைக்கு வாங்கித் தூர்வாரினாலே ரூ.11 கோடி செலவாகாதே... இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறது; முழு பூசணியை சோற்றில் மறைக்கிறார்கள்; காதில் பூ சுற்றுகிறார்கள்’’ என்று வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.

தூர்வாரப்படும் அகழி
தூர்வாரப்படும் அகழி

புகார் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியனிடம் கேட்டதற்கு, ‘‘ரூ.11 கோடி நிதியில் அகழியைத் தூர்வாருவதோடு, அங்குள்ள காவலர் மைதானத்தில் பூங்கா அமைக்கிறோம். வேலை நடந்தாலும் சரி... நடக்காமல் போனாலும் சரி... யாராவது எதையாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். திட்ட மதிப்பீடு போட்டுத்தான் பணிகளைச் செய்கிறோம். இதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. தவறு நடக்க வாய்ப்பே இல்லை’’ என்றார்.