Published:Updated:

திருவாரூர்: தொடர் கனமழை, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள 24 மணி நேர காவல் மீட்புக்குழுக்கள்!

`எந்தப் பகுதியில், எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் இரவு, பகல் பாராமல் எல்லா நேரங்களில் காவல்குழுக்கள் தயார்நிலையில் இருக்கின்றன.’

தமிழ்நாட்டில் தொடர் கனமழை மற்றும் புயல் காலங்களில் மற்ற மாவட்டங்களைவிட டெல்டா மாவட்டங்களில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால் இங்கு மீட்புப் பணிகள் மிகவும் மெத்தனமாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுவதும் வழக்கமாகவே இருந்துவருகிறது. இந்தக் குறையைப் போக்கும்விதமாக, தற்போது திருவாரூர் மாவட்ட காவல்துறை 24 × 7 காவல் மீட்புக்குழுக்களை உருவாக்கி, சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

மீட்புக்குழு
மீட்புக்குழு

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால், திருவாரூர் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடனுக்குடன் மீட்புப் பணிகளை [24 × 7 ] மேற்கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஐந்து காவல் மீட்புக்குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விடாது பெய்யும் தொடர் மழை... தத்தளிக்கும் தமிழகம்!

இது குறித்துப் பேசிய திருவாரூர் காவல்துறையினர், ``கனமழை மற்றும் புயலால் திருவாரூர் மாவட்டத்தில் எந்தப் பகுதியில், எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் இரவு, பகல் பாராமல் எல்லா நேரங்களிலும் காவல்குழுக்கள் தயார்நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள், ஒரு எய்ச்சர் வாகனம் என மொத்தம் ஐந்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்கள் தனித்தனி வாகனங்கள், மீட்புப்பணி உபகரணங்களுடன் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய உள்கோட்ட தலைமையிடங்களில் தயார்நிலையில் உள்ளனர்.

மீட்புக்குழுக்கள்
மீட்புக்குழுக்கள்

இந்தக் குழுவிலுள்ள காவல் அலுவலர்கள் அனைவரும் `SDRF’ என அழைக்கப்படும் பேரிடர் மேலாண்மை மீட்புப் பயிற்சி முடித்தவர்கள். ஐந்து காவல் மீட்புக்குழுக்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடிப் பார்வையில் இயங்கிவருகின்றன’’ எனத் தெரிவித்தார்கள். இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்து ஐந்து காவல் மீட்புக்குழுவினரையும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஒன்று திரட்டி மீட்புப்பணி உபகரணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீட்புப்பணி காவல் அலுவலர்களுக்கு கனமழை மற்றும் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது குறித்தும், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு