Published:Updated:

ஹெச்.ராஜா வருகைக்கு எதிர்ப்பு! அ.தி.மு.க - தி.மு.க இணைந்து ஒட்டிய போஸ்டர்; திட்டக்குடியில் பரபரப்பு

ஜி.சதாசிவம்

`மத ரீதியாக பிளவுபடுத்தும் ராஜா எங்கள் ஊருக்கு வரக்கூடாது' என்று அனைத்து தி.மு.க, அ.தி.மு.க உட்பட அனைத்துக் கட்சியினரும் ஊர் முழுக்கச் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்

poster
poster

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா திட்டக்குடி அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள இன்று வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மற்றும் தி.மு.க கிளைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

H Raja
H Raja
``ரஜினி அல்ல; நான்தான் ரியல் அண்ணாமலை!"- ஹெச்.ராஜா

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கட்டடங்கள் சேதமடைந்து இருப்பதால், ஒரு தரப்பினர் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

Vikatan

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலையை பிரதிஷ்டை செய்ய அரியநாச்சி கிராமத்துக்கு பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வருவதாக அறிவிக்கப்பட்டது. அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்முழுக்கச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. `மத ரீதியாக பிளவுபடுத்தும் ராஜா, எங்கள் ஊருக்கு வரக்கூடாது' என்று கிராம மக்களும் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க உட்பட அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து ஊர் முழுக்கச் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

poster
poster

``கோயில் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்தநிலையில், ஹெச்.ராஜா இங்கு வந்தால் கிராம மக்களிடையே மோதல் ஏற்படும். அதனால் அவர் வரக்கூடாது'' என்று கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதைமீறி ஹெச்.ராஜா இந்த ஊருக்கு வந்தால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று ஊர்மக்கள் அறிவித்திருக்கிறார்கள். இதனால், அரியநாச்சி கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.