Election bannerElection banner
Published:Updated:

`எந்த மாநிலத்துக்கும் மூன்று தலைநகரங்கள் இருந்தது இல்லை!’ - ஜெகன் ஆந்திராவின் நீரோவா.. ஹீரோவா?

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர அரசின் 3 தலைநகர் திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றதிலிருந்தே அங்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. வழக்கமான அரசியல் ஸ்டண்டுகள் என்றாலும் அதிலும் அதிரடி காட்டுகிறார் ஜெகன். முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்திய ஜெகன், புதிய திட்டங்களை அறிவித்தார்.

சட்டசபையில் பெரும்பான்மை இருப்பதால் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார். மூத்த குடிமக்களுக்கான ஓய்வுதிய திட்டத்தில் சில மாற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் ஸ்கோர் செய்தார். ஆனால் சமீபகாலமாக அவரின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது ஜெகன் அரசு. விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும் கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் மாற்றுவதே அந்தத் திட்டம். இந்தத் திட்டத்துக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்தபோது அமராவதியை தலைநகராக மாற்றுவது என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளையும் மேற்கொண்டது. கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்தது. அதன் பின்னர், அங்கு காட்சிகள் மாறின. ஜெகனின் அதிரடியான நடவடிக்கைகள் சந்திரபாபு நாயுடுவை ஆத்திரமடையச் செய்தது. `ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தானாம் மன்னன் நீரோ. ஆந்திர மாநிலத்தின் நீரோவாக ஜெகன் மோகன் ரெட்டி இருக்கிறார். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஜெகன் போன்று ஒரு நபரை நான் பார்த்ததில்லை’ எனக் கொதிக்கிறார் சந்திரபாபு நாயுடு.

மூன்று தலைநகர் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி பொதுமக்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அமராவதியைத் தலைநகராக மாற்றுவதாகக் கூறி அப்போதைய தெலுங்கு தேச அரசு பொதுமக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றியது. இப்போது ஜெகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமராவதி பகுதியில் கடந்த சில நாள்களாகப் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

இந்நிலையில் ஆந்திர சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடக்கும் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தலைநகர் தொடர்பாக மசோதா நிறைவேற்றப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவை, சட்டசபையில் நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் தாக்கல் செய்தார்.

மசோதா குறித்த முதல்வரின் உரையின்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேச எம்.எல்.ஏ-க்கள் 17 பேரையும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ-க்களும் சட்டசபையை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். இதையடுத்து அவைக் காவலர்கள் மூலம் எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டனர். `ஜெய் அமராவதி’ எனக் கோஷம் எழுப்பியவாறே அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

3 தலைநகரத் திட்டத்துக்கு ஒப்புதல்; வீட்டுக்காவலில் 800 தலைவர்கள்!- காவல்துறை கட்டுப்பாட்டில் ஆந்திரா

175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 151 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறியது. அப்போது பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ``அமராவதியுடன் எந்தப் பிரச்னையும் இல்லை. மாநிலத்த்கு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் தேவை. தலைநகருக்காக மட்டும் மில்லியன் கணக்கில் செலவு செய்ய முடியாது. எல்லா சமூகத்தின் ஆதரவுடன் நான் 151 இடங்களை வென்றுள்ளேன். எனக்கு எல்லோரும் சமம். எல்லா பகுதிகளின் வளர்ச்சியையும் விரும்புகிறேன்’ என்றார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இந்நிலையில் நேற்று இரவு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்ற வளாகத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணாவில் ஈடுபட்டார். அதன்பின்னர் அங்கிருந்து பேரணியாக செல்ல முற்பட்ட சந்திரபாபு நாயுடுவையும் அவருடன் இருந்த 17 எம்.எல்.ஏ-க்களையும் கைது செய்த போலீஸார் மங்கலகிரி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

``உலகத்தில் எங்கும் ஒரு மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் இல்லை. இன்று ஒரு கறுப்பு நாள். நாங்கள் அமராவதியையும், ஆந்திராவையும் காப்பாற்ற விரும்பினோம். நான் மட்டுமல்ல மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் சாலைகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரசு கைது செய்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது” எனச் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

முன்னதாக ஆந்திர சட்டசபையில் இந்த மசோதா தாக்கலானதையடுத்து எதிர்க்கட்சியினர், விவசாயிகள் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டமன்ற வளாகத்துக்குள் பின்பக்கமாக உள்ளே நுழைய முயன்றனர். இதன்காரணமாக போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச எம்.பி ஜெயதேவ் கல்லா கைது செய்யப்பட்டார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அமராவதி பாதுகாப்பு கூட்டுக்குழுவினர் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 29 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஆந்திர சட்டப்பேரவையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் இங்கு மசோதா எளிதில் நிறைவேறியது. ஆனால், ஆந்திர சட்டமேலவையில் ஜெகனுக்கு சிக்கல் உள்ளது. 58 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமேலவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் இந்த மசோதா உடனடியாக நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும். சட்டமேலவை நிராகரித்தால் மீண்டும் சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு மேலவைக்கு அனுப்பப்படும். இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டாலும் மசோதா நிறைவேறியதாகவே கருதப்படும். எனவே, தெலுங்கு தேசம் கட்சியால் காலதாமதம் செய்ய முடியுமே தவிர, மசோதாவை நிராகரிக்க முடியாது.

`ஆந்திர மாநிலம் முழுவதும் மூன்று தலைநகர விவகாரம் பற்றி எரியும் நிலையில், ஆளும் அரசின் நடவடிக்கையை மக்கள் கவனித்து வருகிறார்கள். மக்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் போராடுபவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். மாநிலத்தில் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதும் மாநில முதல்வர் என்ற முறையில் ஜெகனின் கடமைதான். சந்திரபாபு நாயுடு சொல்வதுபோல் ஜெகன் நீரோவா, ஹீரோவா என்பதை அவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம்தான் தெரியவரும் என்கிறார்கள் பொது மக்கள்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு