Published:Updated:

`வைஃபை முதல் பேட்டரி கார் வரை..!' - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பளபளக்கும் பாண்டி பஜார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னையில் புதுப்பொலிவு பெற்றுள்ள பாண்டி பஜார் சாலையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.

பாண்டி பஜார்
பாண்டி பஜார்

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்விதமாக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்கீழ் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், தூக்குத்துகுடி, சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

பாண்டி பஜார்
பாண்டி பஜார்

இதன்மூலம் சாலை சீரமைப்பு, வர்த்தக மையங்கள், பொருளாதார கட்டமைப்புகள் மூலம் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா 1,000 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னையில் முதல்கட்டமாக தி.நகர் பகுதியில் உள்ள பாண்டி பஜார் சீரமைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய வணிகப் பகுதிகளில் தியாகராய நகரில் இருக்கும் பாண்டி பஜாரும் ஒன்று. இங்கு கிடைக்காத பொருள்களே இல்லை என்றுதான் கூற வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்துப் பொருள்களும் இங்கு கிடைக்கும் என்பதால் எப்போதும் இப்பகுதி பரபரப்பாகவே காணப்படும்.

பாண்டி பஜார்
பாண்டி பஜார்

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பாண்டி பஜார் பகுதி மேலும் பொலிவடைந்துள்ளது. நடைபாதையின் இரு புறங்களிலும் எல்.இ.டி விளக்குகள், சுவர் ஓவியங்கள், வண்ண வண்ண இருக்கைகள், சீர்மிகு சாலைகள், நடைபாதைகள், வணிக வளாகம் என சுமார் 19.11 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கண்ணைக் கவரும் மின் விளக்குகள், வைஃபை வசதி, சைக்கிள், பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிள், முதியவர்களுக்கான பேட்டரி கார், குழந்தைகள் விளையாடும் வசதி மற்றும் போலீஸாருக்கு உதவும் வகையில் ‘பிரிகோ’ என்ற இருசக்கர வண்டி போன்ற சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பாண்டி பஜார்
பாண்டி பஜார்

முன்னதாக, இருவழிச் சாலையாக இருந்த பாண்டி பஜார் பகுதி இன்று முதல் ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா சாலையிலிருந்து பனகல் பார்க் நோக்கிச் செல்லும் வாகனங்கள், தணிகாசலம் சாலை வரை செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தணிகாசலம் சாலையில் இடதுபுறம் திரும்பி வெங்கடநாராயணா சாலை வழியாக பனகல் பார்க் செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பனகல் பார்க்கில் இருந்து அண்ணாசாலை மற்றும் எல்டாம்ஸ் சாலைக்குச் செல்ல ஜி.என்.செட்டி சாலை, பிரகாசம் சாலையில் சென்று அங்கிருந்து ம.பொ.சிவஞானம் சிலை சந்திப்பு வழியாகப் பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.