Published:Updated:

`எங்கள் மண்ணில் எங்கள் ஆட்சியே'- சீமானைப் பின்பற்றுகிறதா தமிழக அரசு?!

தமிழக அரசு நடத்தும் `தமிழ்நாடு நாள் விழா'வில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கையைத் தூக்கிப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க.

சீமான்
சீமான்

நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு உருவான தினம். அதனையொட்டி 'தமிழ்நாடு நாள் விழா' என்ற பெயரில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விழா எடுக்கிறது. சென்னைக் கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

விழா அழைப்பிதழ்
விழா அழைப்பிதழ்

கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு. இதற்காக வெளியிடப்பட்ட அழைப்பிதழில் நிறைய குளறுபடிகள்.

அ.தி.மு.க நடத்தும் `நமது அம்மா' பத்திரிகையின் ஆசிரியர் மருது அழகு ராஜைக் கவியரங்கத்துக்குத் தலைமை வகிப்பவராகப் போட்டிருக்கிறார்கள். கவியரங்கத்தின் தலைப்பு 'செயல் செய்வாய்... தமிழுக்குத் துறைதோறும்... துறைதோறும்'. பாரதிதாசன் எழுதிய 'தொண்டு செய்வாய் தமிழுக்கு, துறை தோறும் துறைதோறும், துடித்தெழுந்தே' என்பதைத் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்களா? இல்லை 'தொண்டு' என்பதை 'செயல்' என மாற்றியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

'அன்பு பதிந்த இடம் - எங்கள் ஆட்சி சிறந்த இடம்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இந்தத் தலைப்பு மறைமுகமாக பி.ஜே.பி-க்கு சவால் விட்டிருப்பது போலவே இருக்கிறது. மத்தியில் ஆளும் பி.ஜே.பி ஆட்சியை அ.தி.மு.க துதி பாடிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி-யோடு அ.தி.மு.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ``தமிழகத்துக்கு எடப்பாடி. மத்தியில் மோடி. பி.ஜே.பி-யினர் தமிழகத்தை ஆள நினைக்க வேண்டாம்'' எனச் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில்தான் 'தமிழ்நாடு நாள் விழா'வில் 'அன்பு பதிந்த இடம் - எங்கள் ஆட்சி சிறந்த இடம்' என்கிற தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

`எங்கள் மண்ணில் எங்கள் ஆட்சியே' என்ற தலைப்பில் இளையோர் அரங்கமும் நடைபெறுகிறது. இந்தக் கருத்தும் பி.ஜே.பி-க்குச் சவால் விடும் வகையில்தான் இருக்கிறது. திராவிடக் கட்சிகள்தான் தமிழ், திராவிடம் போன்ற கொள்கைகளை முழுங்குவார்கள். ''பி.ஜே.பி எங்களுக்கு ஆதரவு தரட்டும். ஆனால், தமிழகத்தை ஆள நினைக்க வேண்டாம்'' என்பதுதான் அ.தி.மு.க-வின் இன்றைய நிலையாக இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் வகையில்தான் `தமிழ்நாடு நாள் விழா'வை நடத்துகிறார்கள் எனப் பேச்சு எழுந்திருக்கிறது.

தினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி! - டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி

இதில், இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. 'எங்கள் மண்ணில் எங்கள் ஆட்சியே' என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை. 'எங்கள் மண்ணில் எங்கள் ஆட்சியே' என்கிற கோஷத்தை சீமான் அடிக்கடி சொல்லியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியினர் பயன்படுத்தும் இந்த வார்த்தையை அ.தி.மு.க அரசும் பயன்படுத்துவதுதான் ஆச்சர்யம்.