Published:Updated:

` உலகின் மிகப் பழைமையான நாகரிகம் இது!' - கீழடிக்குத் தனி அருங்காட்சியகம் கோரும் தமிழக எம்.பி-க்கள்

கீழடி
News
கீழடி

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலிடம் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள் சேர்ந்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக தொல்லியல்துறை, கீழடியில் நடந்த நான்காம்கட்ட ஆய்வு முடிவுகளை கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டது. இது பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழைமையான நாகரிகம் என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தநிலையில், கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் பிரகலாத் சிங்கிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.

Karthi chidambaram
Karthi chidambaram

``தமிழர்களின் சங்க காலம் 2,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்கிற அரிய கண்டுபிடிப்பை, கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் அறிந்துகொண்டோம். இது கலாசார வரலாற்றில், மிகப்பெரும் திருப்புமுனை என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. தமிழக தொல்லியல் துறை, `கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக அமைந்துள்ளது. கீழடி அகழாய்வில் தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பது, மறுக்கமுடியாத சான்றாகத் தெரியவந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழைமையான நாகரிகம் என்பதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. இந்திய வரலாற்றையே, இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்துதான், முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அகழாய்வின் கண்டுபிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவை, அமெரிக்காவிலும் இத்தாலியிலும் உள்ள புகழ்வாய்ந்த சோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் - மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளன.

Keezhadi
Keezhadi

ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் கலாசார பாரம்பர்ய நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதற்குத் தேவையான அனைத்துச் சான்றுகளும் இருந்ததாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டவற்றை வைப்பதற்காக, உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து மாநிலங்களவையிலும் தற்போது மக்களவையிலும் கனிமொழி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடத்தைப் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப்போல கீழடி அகழாய்வுப் பகுதியும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்துக்காக மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

Keeladi
Keeladi

குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும். கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உதவிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மதுரையில் தொல்லியல் துறையின் சார்பில் கிளை அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். கீழடியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.