Published:Updated:

``எனக்கு இன்னும் தகவல் வரலையே!'' காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்... வேளாண் அமைச்சரின் பதில்!

காவிரி ஆறு
காவிரி ஆறு

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் மத்திய அரசின் இந்த முடிவு, தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

``ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. தமிழக அரசு அமைதி காக்காமல், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய நீர்வள அமைச்சகம் கையப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும்'' எனக் காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பாக நேற்றிலிருந்து கடும் கண்டனப் பதிவுகளும் அறிக்கைகளும் பறந்துகொண்டிருக்கின்றன.

மத்திய நீர்வளத்துறையின் நிர்வாக விதிமுறைகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தத் திருத்த விதிகளை இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் வழியே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நீர் மேலாண்மை ஆணையங்களை, நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்களாக இணைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் மத்திய அரசின் இந்த முடிவு, தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும், ஆற்றுநீர் பாதுகாப்பு இயக்கங்களும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.

ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற செயல்'' எனத் தன் கண்டனத்தைத் பதிவு செய்துள்ளார். மேலும், ``இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்றும் எச்சரித்துள்ளார். மேலும், ``தமிழக முதல்வர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினைக் கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்" எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான, பெ.மணியரசனிடம் பேசினோம்:

``காவிரி, கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நீர் மேலாண்மை ஆணையங்களை, நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக இணைத்துள்ளனர். இதற்காக, 33E என்ற புதிய பிரிவைச் சேர்த்துள்ளனர். நீர் மேலாண்மை ஆணையம் என்பது தேர்தல் கமிஷன் போல ஒரு தன்னாட்சி அதிகாரம் உடையது. அதை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவது சட்ட விரோதமாகும். நீர் மேலாண்மை ஆணையத்தை நிறுவுவது மட்டும்தான் மத்திய அரசின் வேலை. அதற்கடுத்து ஆணையத்தின் எந்தவித நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிட முடியாது. ஆனால், தற்போது செய்துள்ள திருத்தத்தின் மூலம் அதைச் செய்யலாம். உதாரணமாக, ஆறுகளுக்கிடையே, அணை கட்டுவதாக இருந்தால் மத்திய அரசின் வழிகாட்டுதலில் அதைச் செய்யமுடியும்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

அதேபோல, 7A என்கிற புதிய பிரிவின் மூலம், இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மை சீர்கேட்டை தடுப்பது ஆகிய அதிகாரங்கள் இந்திய நீர்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் இந்திய அரசு பறித்துக் கொள்ள சட்ட விரோதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய பிரிவைப் பற்றித் தெரிந்துகொண்டாலே, எதற்கு நதிநீர் மேலாண்மை ஆணையங்கள் நீர்வளத்துறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆறுகள் அனைத்தும் மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. அதை, மத்திய அரசின் அதிகாரமாக மாற்றுவதற்கான வேலைதான் இது'' என்றவரிடம்,

ஆறுகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால், நம் கிடைக்குக் கிடைக்கவேண்டிய நீர் முறையாகக் கிடைக்கும்தானே எனக் கேட்க,

``இதுநாள் வரை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் இருந்ததே மத்தியில் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ், பா,ஜ.க அரசுகள்தான். ஒருவேளை மத்தியில் நடுநிலையான ஒரு அரசாங்கம் வந்தால், நமக்குக் கிடைக்கவேண்டிய நீர் சரியாகக் கிடைக்கலாம். ஆனால், இது மாநிலங்களுக்கிடையேயான நீர்ப்பிரச்னை குறித்த விஷயம் மட்டுமல்ல, ஆற்று நீரை தனியாருக்குக் கையளிப்பதற்கான ஏற்பாடே இது. ஆற்று நீர், கி.மீ வாரியாக தனியாருக்குக் கான்ட்ராக்ட் விடப்படும். அதற்குப் பிறகு, தண்ணீரை மீட்டர் வைத்து அளந்து, விவசாயிகளிடம் பணம் வசூலிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களும், உலக வர்த்தக நிறுவனமும் பல நாள்களாக இந்தக் கோரிக்கையை இந்திய அரசிடம் முன்வைத்து வருகின்றன.

அரசிதழ்
அரசிதழ்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே, தேசிய தண்ணீர்க் கொள்கை என்கிற பெயரில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு அது கைவிடப்பட்டது. அதேபோல, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகும் அது தொடர்பாக புதிதான சட்டம் இயற்றினர். அதைச் செயல்படுத்துவதற்கான நேரமாக, இந்த கொரோனா காலகட்டத்தை எடுத்துக்கொள்கின்றனர். காவிரி மட்டுமல்ல, இந்தியாவில் எந்த ஆற்றையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வது சரியல்ல. தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, அரசிதழை திரும்பப் பெறச் செய்யவேண்டும்'' என்கிறார் பெ.மணியரசன்.

`வட கொரியாவில் சுதந்திரமாக இருந்த ஒரே நபர்..!’ -றெக்கை கட்டும் அடுத்த அதிபருக்கான பேச்சு?

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசனிடம் பேசினோம்,

``நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதில் எந்தத் தவறும் இல்லையே. சி.பி.ஐ தன்னாட்சி அமைப்புதான், ஆனால், அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தானே இருக்கிறது. அதுபோலத்தான் இதுவும். இது ஒரு நல்ல முடிவுதான். இதன் மூலம், இவ்வளவு நாள்கள் இருந்த நீர் பங்கீட்டுப் பிரச்னைகள் எல்லாம் சரியாகும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு இது கூடுதல் பலனளிக்கும். இனி காவிரி நீருக்காக கோர்ட், கேஸ் என அலைய வேண்டியதில்லை. நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியில் நமக்கான நீர் உரிமை இனி சரியாக நிலைநாட்டப்படும்'' என்றவரிடம், ஆறுகளின் உரிமைகளை, மத்திய அரசின் அதிகாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்துக் கேட்டோம்:

``உரிமைகளை விடுங்கள், அனைத்து ஆறுகளையும் எடுத்துப் பராமரிக்க மத்திய அரசிடம் எங்கிருக்கிறது நிதி... ஏற்கெனவே, தமிழகத்தின் கோயில்களை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கொள்ளப் போகிறது என ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். அது போலத்தான் இதுவும்'' என மறுக்கிறார் சீனிவாசன்.

சீனிவாசன்
சீனிவாசன்

தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவது குறித்துக் கேட்டோம்:

``அப்படி எந்தவொரு தகவலும் இன்னும் என் கவனத்துக்கு வரவில்லை. நாங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், நலத்திட்ட உதவிகள் கொடுப்பதில் பிஸியாக இருக்கிறோம். உங்களுக்கு வேண்டுமானால் முதல்வர் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்'' என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு