Published:Updated:

சட்டப்பேரவைக்குள் செல்போன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டி.ஆர்.பி.ராஜா

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

ஏற்கெனவே பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பதவிவகித்து, நன்கு அனுபவம் பெற்ற இவர், கண்ணியம் தவறி நடந்துகொள்ளலாமா என அதிமுக-வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜா, சட்டப்பேரவைக்குள் செல்போனைக் கொண்டு சென்று பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய முதல் நாளிலேயே டி.ஆர்.பி.ராஜா விதிமுறைக்குப் புறம்பாக, இப்படி நடந்துகொள்ளலாமா... ஏற்கெனவே பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து, நன்கு அனுபவம் பெற்ற இவர், கண்ணியம் தவறி நடந்துகொள்ளலாமா என அதிமுக-வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

எம்.எல்.ஏ  டி.ஆர்.பி ராஜா
எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 31 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

இந்தநிலையில்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டிருந்தபோது, மன்னார்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, தனது இருக்கையில் இருந்தவாறு, செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியாகி சர்ச்சை கிளப்பியுள்ளது. சட்டப்பேரவை நடைபெறும் இடத்தில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலேயே, மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற வளாகத்திலுள்ள அலமாரியில் செல்போன்களை வைத்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் டி.ஆர்.பி.ராஜா மட்டும் செல்போனைக் கொண்டு சென்று பயன்படுத்தியிருப்பது விதிமுறைக்குப் புறம்பானது என்கிறார்கள்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

2011-16 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் டி.ஆர்.பி.ராஜா சட்டசபைக்குள் செல்போன் கொண்டு சென்று பயன்படுத்திய குற்றச்சாட்டில், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர் 10 நாள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இப்படி நடந்துகொள்ளலாமா என சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு