Published:Updated:

நாடாளுமன்றத்தில் மீண்டும் சீறிய மஹூவா மொய்த்ரா! - பேசியது என்ன?

நாடாளுமன்றத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மேற்கு வங்கத்தின் குரலாய் மீண்டும் நாடாளுமன்றத்தில் கர்ஜித்துள்ளார், மஹூவா மொய்த்ரா. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான இவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பெடுத்துப் பேசிய மொய்த்ரா, இந்த அரசு மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகச் சாடினார். `வாக்களித்த மக்களின் குடியுரிமையை சந்தேகப்படுவது எத்தகைய அபத்தமான செயல்' எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மோடி
மோடி

நாடாளுமன்றத்தில் பேசிய மஹூவா மொய்த்ரா, ``இந்துக்களின் வாக்குகள் மட்டும் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. இந்த நாட்டில் உள்ள ஏராளமான மக்களின் வாக்குகளினால்தான் நீங்கள் இந்த அதிகாரத்தில் அமர்ந்துள்ளீர்கள். `சப்கா சாத், சப்கா விகாஸ்’ இந்த வார்த்தைகள் ஒருங்கிணைந்த இந்தியாவின் வளர்ச்சியைக் குறிக்கிறது. ஆனால் நீங்களோ, இளம் வாக்காளர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறீர்கள். தங்களுடைய முதல் வேலையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அந்த இளைஞர்களை ஏமாற்றுகிறீர்கள்.

பணமதிப்பிழப்பு எனும் முட்டாள்தனமான உங்களின் முடிவுகளால் சிறு வணிகர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டீர்கள். அவர்களது சந்தையை அழித்துவிட்டீர்கள். எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களது வணிகத்தை அழித்துவிட்டீர்கள். குஜராத்தில் சிலையை நிறுவுவதற்காக ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களின் நிலங்களை எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு கழிவறையைச் சுத்தம்செய்யும் பணியைத்தான் உங்களால் வழங்கமுடிந்தது. உங்களுக்கு வாக்கு அளித்து, உங்களை அதிகாரத்தில் அமர்த்திய மக்களின் குடியுரிமையை நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்” என்றார் காட்டமாக.

 மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா

யூதர்களைக் கொல்வதற்காக தெற்கு போலந்தில் ஜெர்மனி அமைத்த மிகப்பெரிய அவுஷ்விட்ஸ் வதைமுகாமைக் குறிப்பிட்டு மஹூவா மொய்த்ரா பேசினார். ஹாலோகாஸ்ட் படுகொலை நடவடிக்கைகளின்போது, யூதர்களைக் கொடுமைப்படுத்திக் கொலை செய்வதற்காகப் பல வதை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில், அவுஷ்விட்ஸ் வதைமுகாம் மிகப்பெரியது. ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் அமைந்திருந்தது. ஐரோப்பா முழுவதிலுமிருந்து பிடித்துவரப்பட்ட யூதர்களை இங்கு அடைத்து சித்திரவதை செய்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஹாலோகாஸ்ட்டில் உயிர் பிழைத்தவர்களுக்கான கூட்டம் கடந்த வாரம் போலாந்தில் நடந்தது. அவர்கள் அனைவரும் அவுஷ்விட்ஸ் வதை முகாமிலிருந்து மீட்கப்பட்டவர்கள். அவர்களில் 200 நபர்கள்கூட இப்போது உயிரோடு இல்லை. அவுஷ்விட்ஸ் ஒன்றும் வானத்திலிருந்து விழவில்லை. அங்கு நடந்தது என்ன? மாற்று நம்பிக்கையை வெளிப்படுத்திய மக்களின் அவலநிலையைக் கண்டு வேடிக்கை பார்த்ததால் இது ஏற்பட்டது. ஹாலோகாஸ்ட் நினைவிடங்கள், நடந்ததை நமக்கு நினைவுபடுத்த அமைக்கப்பட்டவை என்பதைவிட, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடும் என்றே நம்மை எச்சரிக்கை செய்கின்றன.

நாஜிக்கள் முகாம்களில் யூதர்கள் மீது எரிவாயு பிரயோகிக்கப்பட்டபோது, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் மட்டுமே அந்தக் கொடூரம் நடக்கவில்லை. தங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தவர்களைக் குறிவைத்து இழுத்துச்சென்றபோது வேடிக்கைபார்த்த மக்களாலும் இந்தக் கொடூரம் நடந்தது. இந்த NPR, NRC மற்றும் CAA ஆகியவை முதலில் குறிவைக்கும், பின்னர் குடியுரிமையைப் பறிக்கும். அதன்பின்னர் அழித்துவிடும். எங்கள் மூதாதையர்களைத் தீவிரவாதிகள் என்றும் எங்கள் குழந்தைகளை தேசத்துரோகிகள் என்றும் தவறாக சித்திரிக்கிறார்கள். ஆனால், இந்தியக் குடிமக்கள் அந்தக் கொடுமைக்காரர்களுக்குத்தான் துணை நிற்கிறார்கள். அவர்களின் பேச்சில் உள்ள நஞ்சு யாருக்கும் தெரிவதில்லை” என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு