Published:Updated:

`வந்தே பாரத்'... வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் என்னென்ன?

#VandeBharatMission
#VandeBharatMission ( Twitter / COVIDNewsByMIB )

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில், நோய் பரவும் ரிஸ்க் குறைவாக இருப்பவர்களையும் கூட வீடுகளில் தனிமைப்படுத்தாமல், ஹோட்டல்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். 1990-ம் ஆண்டு ஈராக்- அமெரிக்கா போரின் போது, செய்தது போல `வந்தேபாரத்' என்கிற பெயரில் மிகப் பெரிய மீட்புப்பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. வந்தேபாரத் திட்டத்தின்படி, கடந்த மே 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 31 நாடுகளிலிருந்து 12,000 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். மே 16-ம் தேதி முதல் மே 22-ம் தேதி வரை ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான் உள்ளிட்ட மேலும் 18 நாடுகளிலிருந்து 149 விமானங்கள் மூலம் 32,000 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட இருக்கின்றனர். தற்போது, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு விமானப்பயணம் தொடங்கியிருப்பதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது அரசுக்கு சவாலானதாக மாறியிருக்கிறது. கொரேனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்ட விமான நிலையங்களில் உலகளவில் பீஜிங், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் விமான நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் டெல்லி விமான நிலையம் அதிக தொற்று ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறது.

corona virus
corona virus

அடுத்தபடியாக மும்பை, பெங்களுரு, சென்னை விமான நிலையங்கள் உள்ளன. உலகளவில் கொரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 11- வது இடத்தில் உள்ளது. இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் இந்தியர்களால் கொரோனா மேலும் பரவிவிடக் கூடாது என்பதால் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்புபவர்கள் அனைவரும் முறையான பரிசோதனைக்குப் பிறகு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே, வெளிநாட்டிலிருந்து வரும் அவர்கள் சொந்தச் செலவில் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில், லண்டனிலிருந்து டெல்லிக்கு 326 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர்இந்தியா விமானம் வந்தது. இதில், தாயகம் திரும்பிய பயணிகள் அனைவரும் டெல்லியிலுள்ள உயர்தர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களிடத்தில், விமானக்கட்டணமாக தலா ரூ.49,000 வசூலிக்கப்பட்டது. அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தன் மனைவியுடன் இந்த விமானத்தில் டெல்லி திரும்பியுள்ளார். இவர், விமானக்கட்டணத்துக்காக ஒரு லட்சம் வரை செலவழித்துள்ளார். இதுதவிர, ஹோட்டலில் தனிமைப்படுத்தி வைத்ததற்காக ஹோட்டல் பில் ரூ.84,000 தனியாகச் செலுத்துமாறு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. `எங்கள் பணத்தில்தான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம். எங்கள் பணத்திலேயே தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் தங்க வைப்பது எந்தவிதத்தில் நியாயம்?' என்று அந்த முதியவர் பரிதாபமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இரு மாத காலமாக வெளிநாடுகளில் தவித்து வந்த தங்களுக்கு, தாய்நாடு திரும்பிய பிறகும், இது போன்று செலவுகள் மேலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீற முடியாமல் பலரும் பண நெருக்கடிக்கிடையில் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.

Representational Image
Representational Image

வெளிநாட்டிலிருந்து மும்பை வருபவர்களை தங்கவைக்க மும்பை மாநகராட்சி பல ஹோட்டல்களுடன் எழுதப்படாத ஒப்பந்தத்தையே செய்துள்ளது. மும்பை விமான நிலையம் அமைந்துள்ள சாந்தாகுரூஸ் பகுதியில் பல ஹோட்டல்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விமானத்திலிருந்து இறங்கியதும் முதற்கட்ட சோதனைக்குப் பிறகு, நேரடியாக அவர்கள் ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கொரோனா நோய் பாதிப்பு இருப்பர்கள் மட்டுமே, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். லண்டனிலிருந்து மும்பை வந்த தானே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குச் சிறுநீரக நோய் இருக்கிறது. அவரின் பெற்றோர் இதய நோயாளிகள். கொரோனா பாதிப்பு அந்த இளைஞருக்கு இல்லை. இருந்தாலும், ஹோட்டலில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டதற்கு, ரூ.63,000 ஹோட்டல் பில் செலுத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில், நோய் பரவும் ரிஸ்க் குறைவாக இருப்பவர்களையும் கூட வீடுகளில் தனிமைப்படுத்தாமல், ஹோட்டல்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையில் உள்ள 10 ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவுடன் ரூ.4,000 வாடகை வாங்கிக் கொண்டு பயணிகளை தங்கவைக்க ஒப்புக் கொண்டுள்ளன. அதே வேளையில், ஒரே தவணையாக 14 நாள்களுக்கும் முழுத் தொகையையும் செலுத்தக் கூறுவதால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பெரிய தொகையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, மும்பை மாநகராட்சி, `பயணிகளிடத்தில் நான்கு தவணையாக கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று மும்பை ஹோட்டல் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் எண்ணிக்கை, ஊரடங்கு, உச்சநிலை... தமிழகத்தின் உண்மை நிலை என்ன?

வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதில், மாநிலங்களுக்கு மாநிலம் பாகுபாடு காட்டப்படுவதாக மேற்கு வங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்க மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, ``ஜார்ஜியாவிலிருந்து கூட குஜராத்துக்குப் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். கிர்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து மக்கள் பீகாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தவர்களை அழைத்து வருவதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகுபாடு காட்டுகிறது'' என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், ``வெளிநாடுகளிலிருந்து தாய்நாடு திரும்ப 3,700 மேற்குவங்கத்தவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை தனிமைப்படுத்துவதற்கு அந்த மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஏற்பட்ட குழப்பத்தால்தான் மேற்குவங்கத்தவர்களை கொல்கத்தாவுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளது.

Evacuation flight for Ahmedabad took off from London
Evacuation flight for Ahmedabad took off from London
Twitter / HCI_London

ஹைதரபாத் நகருக்கு அமெரிக்கா, பிரிட்டன், அமீரகம், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்தேபாரத் திட்டத்தில் 8 விமானங்கள் 1,200 இந்தியர்களை சுமந்து வந்துள்ளன. ஹைதரபாத் வந்திறங்கிய இவர்கள் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவுதான். தற்போது, வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் திரும்பியுள்ளதால் ஆந்திர, தெலங்கானா மாநில அரசுகள் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவு வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் மலையாள மக்களில் 90 சதவிகிதம் பேர் வளைகுடா நாடுகளில்தான் உள்ளனர். வளைகுடா நாடுகளிலும் கொரோனா வேகமெடுத்திருப்பதால், வந்தேபாரத் திட்டத்தின் கீழ் கேரளத்தவர்கள் கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு விமான நிலையங்களில் வந்திறங்கியுள்ளனர். இதனால், கேரள அரசு கூடுதல் விழிப்புணர்வுடன் உள்ளது. ஆனாலும், வெளிநாட்டிலிருந்து வந்த பலருக்கும் கொரோனா தொற்று இருப்பதால், கேரளாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு