Published:Updated:

குடும்ப வன்முறை, உடல்நலக் கோளாறுகள்... பெருந்துயரில் புலம்பெயர் பெண் தொழிலாளர்கள்!

Migrant workers in Jammu
Migrant workers in Jammu ( AP / Channi Anand )

தற்போதைய இயலாமையை இங்குள்ள பெண் தொழிலாளர்கள் மீது அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சுமத்துகிறார்கள். நிறைய பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளியான சகுந்தலா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். நிறைமாத கர்ப்பிணியான இவர், தன் கணவருடன் மகாராஷ்டிராவில் வேலை செய்துவந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக் டௌன் அமலானதால் தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சகுந்தலாவின் குடும்பமும் அப்படி முடங்க நேர்ந்தது. சாப்பாடே இல்லாமல் தவித்துவந்த நிலையில் குழந்தை பிறந்தால் நிலை மோசமாகும் என்று கருதி சகுந்தலாவும், கணவரும் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தை நோக்கி பயணப்பட்டனர். கிட்டத்தட்ட 70 கி.மீ தூரம் சகுந்தலா சென்ற நிலையில், அவருக்கு பிரசவவலி தொடங்கியது.

Migrant worker
Migrant worker
AP / Mahesh Kumar A

பிரசவ வலியால் நடுவழியிலேயே துடித்தவரைக் கண்டு அந்தப் பகுதியில் இருந்த பெண்கள், பிரசவம் பார்த்தார்கள். சகுந்தலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஓரிரு நாள்கள் அந்தப்பகுதியிலேயே தங்கிய சகுந்தலா, மீண்டும் தனது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினார். குழந்தை பிறந்த பச்சை உடம்போடு 160 கி.மீ தூரம் நடந்து சென்ற அவருடைய கடுமையான துயரத்தைக் கண்ட போலீஸார் தங்கள் வாகனத்திலேயே அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

மத்திய மாநில அரசுகள், சரியாகத் திட்டமிட்டு, போதிய நடவடிக்கைகளை எடுக்காததால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக, பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

பிழைக்கவந்த ஊரில் எந்த ஆதரவும் கிடைக்காததால், தங்கள் சொந்த மாநிலத்துக்குப் பயணமான பத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் நடுவழியிலேயே குழந்தை பெற்றிருக்கிறார்கள். சிலர், வழியிலேயே இறந்திருக்கிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றும் தொண்டு நிறுவன நிர்வாகி வியாகுலமேரி இதுகுறித்து பேசினார். ``திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 30,000-க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கடந்த இரண்டு மாதமாகச் சந்தித்து வருகிறேன். முகாம்களில் உள்ள பெண்கள், `என்னுடைய குழந்தைக்கும், கணவருக்கும் சாப்பாடு கொடுத்தாலே போதும். நான் எப்படினாலும் சாப்பிட்டுக்குவேன்' என்கிறார்கள்.

வியாகுலமேரி . தன்னார்வ தொண்டு நிறுவனம்
வியாகுலமேரி . தன்னார்வ தொண்டு நிறுவனம்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு இன்னல்கள்? - ஓர் அலசல்!

அவர்களுடைய எதிர்பார்ப்பு எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று உள்ளதே தவிர, யாருமே இதுவரை எங்களுக்கு சானிடரி நாப்கின் இல்லை. எனவே அதைக்கொடுங்கள் என்றுகூட கேட்கவில்லை. அதற்குக் காரணம் அவர்களை வறுமை வாட்டிக்கொண்டிருக்கிறது. வயிற்றுக்குச் சாப்பாடே இல்லாதபோது, அவர்கள் இதைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை

இன்னொரு கொடுமையும் நடக்கிறது. தற்போதைய இயலாமையை இங்குள்ள பெண் தொழிலாளர்கள் மீது அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சுமத்துகிறார்கள். நிறைய பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். பெண்களும் வேறு வழியில்லை என்று நினைத்து அதைப் பொறுத்துக்கொண்டு வெளியில் சொல்லாமல் வாழ்கிறார்கள். விடுதியில் உள்ள பெண்களின் நிலை வேறு விதமாக உள்ளது.

இந்தப் பெண்களுக்கு, தொழில் நிறுவனங்கள் சாப்பாடும், தங்கும் வசதியும் செய்துகொடுத்துள்ளன. ஆனால், ஒரே அறையில் கடந்த இரண்டு மாதமாக இவர்கள் அடைபட்டு இருப்பது பெரிய அளவில் உளவியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது..." என்கிறார் அவர்.

`ஊருக்குப்போக வழியில்லை; பெண் தொழிலாளியை தாக்கிய கட்டட உரிமையாளர்!’- புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் பாலமுருகன் பேசுகையில், ``கேரளாவில் புலம்பெயர் தொழிலாளர்களை `கெஸ்ட் வொர்க்கர்’ என்று அழைக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் ஒரு மனுசனாக்கூட மதிப்பதில்லை. குறிப்பாக, இவர்களைப் பற்றிய எந்தப் புள்ளிவிவரமும் தமிழக அரசிடம் இல்லை. `புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டம் -1979' சட்டத்தின்படி வெளிமாநிலங்களில் இருந்துவரும் தொழிலாளர்களைப் பதிவு செய்ய வேண்டும்’ என்பது விதி. ஆனால், அவ்வாறு அரசாங்கம் எந்தப் பதிவையும் செய்வதில்லை.

இவர்கள், கான்டராக்டர்களுக்கு கீழ் வருவதால் எங்கேயும் இவர்களைப் பற்றிய பதிவு இல்லை. கட்டுமானத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. அதுவும் முழுமையான புள்ளி விவரங்கள் இல்லை. வெறும் தொழிலாளர்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, பெண் தொழிலாளர்கள் பற்றிய எந்த விவரமும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.

பாலமுருகன். மனித உரிமை ஆர்வலர்
பாலமுருகன். மனித உரிமை ஆர்வலர்
மனித உரிமை ஆர்வலர்

இதுகுறித்து எழுத்தாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான ஜெயராணி பேசுகையில், ``பெண்கள் மீதான குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் ஒரு லட்சத்தைத் தாண்டியதாக புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இதைப்பார்க்கும்போது புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் பிரச்னை எவ்வாறு இருக்கும் என்பதை நம்மால் நன்றாகவே உணரமுடிகிறது. பொதுவாக அடி மாடுகளை அடைத்துவைப்பது போன்றே அடைத்து வைக்கப்படுகிறார்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.

ஜெயராணி  பெண்ணி  செயற்பாட்டளர்
ஜெயராணி பெண்ணி செயற்பாட்டளர்

முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ள நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில், பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது. எந்த ஒரு நிவாரண உதவியிலும் பெண்களுக்குத் தேவையான சானிடரி நாப்கின் பற்றி இடம்பெறவே இல்லை. இதுவும் சுகாதாரத்தில் ஒன்று என்பதைப் புரிந்துகொள்ளாத அரசாங்கம் எவ்வாறு கொரோனாவிலிருந்து இவர்களைப் பாதுகாக்கப் போகிறது?" என்றார்.

கருப்பு சாமி   தொழிலாளர் நலஅமைப்பு
கருப்பு சாமி தொழிலாளர் நலஅமைப்பு

இது குறித்து தொழிலாளர் நல அமைப்பைச் சேர்ந்த கருப்புசாமி பேசுகையில், ``குடும்பத்தைக் காப்பாற்றவே இந்தப் பெண்கள் இடம் பெயர்ந்து வருகிறார்கள். பேரிடர் காலங்களில்கூட அரசாங்கம் எந்த உதவியும் செய்து தருவதில்லை. தற்போது சொந்த ஊருக்குச்செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கும் உரிய முறையில் வழியை ஏற்படுத்தி தரவில்லை. திருப்பூரிலிருந்து வட மாநிலங்களுக்குச் சென்ற ரயிலில் பெண்களுக்கு இடமே ஒதுக்கவில்லை" என்றார் கவலையாக.

இந்தப் பிரச்னைகள் குறித்து, தொழில் நிறுவனங்களின் உணவு மற்றும் பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் ஜெகதீஸ்வரனிடம் பேசியபோது, ``புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகை எதுவும் கொடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் 15 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ ஆயில் ஆகியவற்றை கடந்த இரண்டு மாதமாக கொடுத்து வருகிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. இதில் பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்கள் என்று பிரித்து எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு