Published:Updated:

`உறவுகள் மீதான ஏக்கம்.. வெளிமாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள்!’ -உ.பி அரசின் அடுத்த முயற்சி

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

வெளிமாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்து வர உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

‘கொரோனா வைரஸ்’ இந்தப்பெயர் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா சமூகப்பரவலைத் தடுப்பதற்கு இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு சாமானிய மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளர்களின் கண்ணீர்க் கதைகளோ ஏராளம். ரேஷன் கார்டுகள் இருப்பவர்களுக்கு அரசின் நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பும் சென்றடைகிறது என்பது ஆறுதலே. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாடு திண்டாட்டம்தான்.

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

பசிக்கு அழும் குழந்தைக்கு சமாதானம் சொல்ல வழியில்லாமல் அதட்டிக்கொண்டிருக்கிறார் ஒரு வடமாநிலத் தொழிலாளி. தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்து கொடுக்கும் உணவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது ஒரு கூட்டம். இந்தியா முழுவதும் இப்படியான நிலைதான் நீடிக்கிறது. மாநில அரசுகள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறது. இந்த உதவிகள் எல்லாத் தரப்பினரையும் சென்றடைந்ததா என்பது சந்தேகம்தான்.

`ஞாயிறு முதல் 5 மாநகராட்சிகளில் முழுஊரடங்கு..!’ -யாருக்கெல்லாம் அனுமதி..? #LockDown

கையில் இருந்த காசுகளை வைத்து முதல் 21 நாள் ஊரடங்கை சமாளித்துவிட்டார்கள். இப்போது அத்தியாவசியப் பொருள்களை வாங்க கையில் பணம் இல்லை. ஊரில் இருக்கும் உறவுகள் மீதான ஏக்கம் அவர்களை சூழ்ந்துகொண்டது. இன்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ரயில் பாதைகளில் நடந்து சென்றுகொண்டிருப்பவர்கள் ஏராளம். இந்த இக்கட்டான சூழலில் வெளிமாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்
நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்

அரசு அதிகாரிகளுடன் இன்று நடந்த கூட்டத்தில் இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விவாதித்துள்ளார். வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை அழைத்து வருவது தொடர்பான அறிக்கையை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து அவர்களை அழைத்து வருவது அவர்களை உத்தரப்பிரதேசத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்துவது அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்துள்ளார். மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முதல்வர் யோகி இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

`அவர்கள் குழந்தைகள்..!’ -மாணவர்களுக்காக   ராஜஸ்தானுக்கு 300 பேருந்துகளை அனுப்பிய உ.பி

மகாராஷ்டிராவில் ஏராளமான உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் அனைவரும் வேலையின்றி முடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் இங்கே உள்ளனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்ததாக ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

“மாநிலத்தில் சுமார் 6.5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. நீண்ட காலமாக அவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பதால் உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்” என ட்விட்டரில் உத்தவ் தாக்கரே பதிவிட்டிருந்தார்.

மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ``மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் யாரையும் வெளியே விடமுடியாது” என்றார். இந்நிலையில்தான் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இதுகுறித்து பேசிய அம்மாநில அதிகாரிகள், ” மற்ற மாநிலங்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த தொழிலாளர்களை அழைத்து வருவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதற்கான திட்டத்தைக் கேட்டுள்ளார். இதுவரை எத்தனை தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலைக் கேட்டுள்ளார். அந்தந்த மாநிலங்களில் சோதனை செய்யப்பட்ட தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவார்கள். அவ்வாறு அழைத்துவரப்படும் தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு