Published:Updated:

அச்சுறுத்தும் யுரேனியம் சுரங்கங்கள்!

கிருஷ்ணா நதிக்கு வரப்போகும் ஆபத்து...

பிரீமியம் ஸ்டோரி

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நிலக்கரி சுரங்கங்கள் விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் இயற்கை வளங்களைச் சிதைப்பதில் மும்முரம் காட்டிவருகிறது மத்திய பி.ஜே.பி அரசு. அந்த வரிசையில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ஆந்திரம், தெலங்கானா இடையே உள்ள ‘நல்லமலா’ காடுகளில் யுரேனியம் எடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. இந்தத் திட்டத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஜார்கண்ட் மாநிலம், ஜடுகுடாவில் உள்ள யுரேனிய சுரங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

இதுபற்றிப் பேசும் பூவுலகு நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சூழலியலாளர் சுந்தர்ராஜன், “மிகப் பெரிய காட்டுப் பகுதி, ஜடுகுடா. அங்கு 1951-ம் ஆண்டு யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 1967-ம் ஆண்டில் சுரங்கம் தோண்டப்பட்டது.

அச்சுறுத்தும் யுரேனியம் சுரங்கங்கள்!

அங்கு 2014-ம் ஆண்டு வரை யுரேனியம் எடுக்கப்பட்டது. பின்னர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், யுரேனியம் எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் 2017-ம் ஆண்டிலிருந்து யுரேனியம் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு அணு ஆயுத தடுப்புக்கான பன்னாட்டு மருத்துவ தன்னார்வ அமைப்பு, ‘ஜடுகுடாவில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்ட மண்ணும் மற்ற கனிமங்களும் பரவிக்கிடக்கின்றன. அதில் கலந்துள்ள யுரேனியத் துகள்களிலிருந்து கதிர்வீச்சு பரவிவருகிறது. இதனால், அருகில் வசிக்கும் மக்கள் பாதிப்படைகிறார்கள்’ என்று ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், பணிகள் நிற்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான் ஆந்திரம் மற்றும் தெலங்கானா இடையே உள்ள நல்லமலா காட்டுப் பகுதியைத் தேர்வுசெய்திருக்கிறது, யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். கர்னூல், பிரகாசம், கடப்பா ஆகிய மாவட்டங்களில் இந்த வனம் பரந்து விரிந்துள்ளது. நல்லமலா காடு, புலிகளின் சரணாலயமாகவும் உள்ளது. மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வனவிலங்கு ஆலோசனைக் குழு, கடந்த மே மாதத்தில் தெலங்கானா, ஆந்திர மாநில எல்லையான நல்லமலா காட்டுப் பகுதியில் நான்கு இடங்களில் யுரேனியத்தை ஆய்வுசெய்ய ஒப்புதல் அளித்தது. அதன்படி யுரேனியம் கார்ப்பரேஷன் தற்போது அந்த நான்கு இடங்களிலும் ஆய்வுசெய்வதில் மும்முரமாக இருக்கிறது. அந்த நான்கு இடங்களில் மூன்று இடங்கள் நல்லமலா காடுகளில் உள்ள அமராபாத் புலிகள் காப்பகத்துக்குள் வருகின்றன. தவிர, ஏற்கெனவே அமராபாத் மண்டலத்தில் உள்ள திருமலாப்பூர் பி.கே கிராமத்தில் 18 சுரங்கங்கள் தோண்டப்பட்டு முதற்கட்ட ஆராய்ச்சிப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆந்திரத்தின் ஸ்ரீசைலத்திலும் யுரேனியம் சுரங்கத்துக்காக ஒப்புதலை அணுசக்திக் கழகம் வழங்கியிருக்கிறது” என்றவர், இதன் மூலம் கிருஷ்ணா உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“நல்லமலா காடுகளில் யுரேனியம் எடுக்கப்பட்டால், அருகில் உள்ள நாகார்ஜுனா சாகர், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கங்களும் மாசுபடும். இப்போது யுரேனியம் எடுக்க தேர்வு செய்யப்பட்ட பகுதியிலிருந்து 15 கி. மீட்டர் தொலைவில்தான் கிருஷ்ணா நதி நீர் பாய்கிறது. இந்த நீரானது ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. யுரேனியம் எடுக்கப்படும் போது அதன் கழிவுகள் கிருஷ்ணா நதி நீரில் கலப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் சென்னைக்கு வரும் நீரிலும் கலந்திருக்கும். இதனால், பாதிக்கப்படப்போவது கிருஷ்ணா நீரைப் பருகும் நமது சென்னை மக்களும்தான். எனவே, குரல் கொடுக்கவேண்டிய கடமை தமிழகத்துக்கும் உண்டு” என்றார்.

அணுசக்திக் கழக அதிகாரிகள் தரப்பில் பேசினோம். “யுரேனியத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால், விலை அதிகம். தவிர, அணுசக்திக் கொள்கையில் நாம் தனியாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தால், யுரேனியத்தைக் கொடுக்கும் நாடுகள், கொடுப்பதை நிறுத்திவிடும். அதன் பின்னர் உடனடியாக நமக்கு யுரேனியம் கிடைக்காது. அதனால்தான் யுரேனியத்தை நமது நாட்டிலே எடுக்க வேண்டியிருக்கிறது. ஜடுகுடா பகுதியில் எடுக்கப்பட்டுவரும் யுரேனியம் இரண்டாம் தர யுரேனியம்தான். அதனால்தான் நல்லமலா காடுகளில் முதல் தர யுரேனியம் எடுக்கவேண்டியது அவசியமாகிறது” என்றனர்.

அச்சுறுத்தும் யுரேனியம் சுரங்கங்கள்!

தமிழ்நாடு அறிவியல் இயக்கக் குழு உறுப்பினர் பி.கே.ராஜன் பேசும்போது, “அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. அதில் கையெழுத்திட்டுவிட்டால், இந்தியாவில் கைகள் கட்டப்பட்டுவிடும். கையெழுத்திடாததால் யுரேனியத்தை இறக்குமதி செய்ய முடியாது. அதனால்தான் உள்நாட்டிலேயே யுரேனியம் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யுரேனியத்தை நேர்த்தியாகக் கையாண்டால் எந்தவித கெடுதலும் ஏற்படாது. ஆனால், அதை இந்த அரசாங்கம் எப்படி கையாளப்போகிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு