Published:Updated:

``எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அண்ணாமலை எதிர்கொள்வார்!'' - வானதி சீனிவாசன் ஓப்பன் டாக்

''கஷ்டப்பட்டு, கடன்பட்டு ஒப்பந்தப் பணிகளை செய்துவரும் ஒப்பந்ததாரர்கள், 'கமிஷன் கொடுத்தால்தான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது' என்ற உண்மையை எப்படி வெளிப்படையாக சொல்லமுடியும்?'' என்கிறார் வானதி சீனிவாசன்.

தேசியத்தையும் மதத்தையும் முன்னிலைப்படுத்தி அரசியல் செய்துவரும் தமிழக பா.ஜ.க., அண்மைக்காலமாக தமிழ் மண் சார்ந்த அரசியலை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் 'தமிழ்நாடு தின'த்துக்கு வாழ்த்து கூறிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசனிடம் பேசினேன்.

''தமிழ்நாட்டில், தேசியம், தெய்வீகம் கொள்கைகளை விட்டுவிட்டு மண் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கான முடிவுக்கு தமிழக பா.ஜ.க வந்திருப்பதாகத் தெரிகிறதே?''

''மண் சார்ந்த அரசியலை பா.ஜ.க எப்போதுமே முன்னெடுத்து வருகிறது. எனவே இது புதிய விஷயம் அல்ல. தமிழக மண்ணையும் அதன் தலைவர்களையும் இந்திய தேசியத்திலிருந்து பிரிக்கமுடியாத கூறுகளாகத்தான் நாங்கள் பார்த்துவருகிறோம். அந்தவகையில், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் ஒரேவிதமாக பார்ப்பதுதான் உண்மையான தேசியம் என்று நாங்கள் கருதுகிறோம்.''

கமலாலயம்
கமலாலயம்

''தமிழ்நாடு தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தமிழக பா.ஜ.க உள்ளாகியிருக்கிறது என்கிறார்களே...?''

''இதைக் கட்டாயம் என்றே நாங்கள் பார்க்கவில்லை. ஏனெனில், எப்போதுமே எங்களுடைய அக்கறையென்பது, 'தேசியப் பார்வை கொண்ட மாநிலத்தின் நலன்தான். இதெல்லாம் உங்களுக்கு வேண்டுமானால் புதியதாகத் தோன்றலாமே தவிர... எங்களுடைய செயல்பாடுகளில் ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் நலன் என்பதே மாநில நலனை உள்ளடக்கியதுதான்.''

''தமிழ்நாடு தினம் எப்போது கொண்டாடுவது என்பதில் அ.தி.மு.க - தி.மு.க அரசுகளிடையே மாறுபட்ட கருத்து தோன்றியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''நவம்பர் முதல் தேதிதான் 'தமிழ்நாடு தினம்' என்று கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டபோது, இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினேன், வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது இந்த விஷயத்தில் 'ஒருசிலர் அப்படி கூறுகிறார்கள் இப்படி கூறுகிறார்கள்' என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாடு தினம் தேதியை தி.மு.க அரசு மாற்ற முயற்சிப்பது சரியான நடைமுறை அல்ல.''

கோயில்
கோயில்

"கோயில் நகை மூலமாக கிடைக்கக்கூடிய வட்டி வருமானம் மறுபடியும் கோவில் நலப் பணிகளுக்கு செலவிடப்படும் என்கிறது தமிழக அரசு. ஆனால், 'இதனால் பக்தர் உணர்வு பாதிக்கப்படும்' என்று பா.ஜ.க அரசியல் செய்கிறது' என்கிறார்களே?"

" 'சாமிக்கு பால் அபிஷேகம் தேவையா, அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாமே' என்றெல்லாம்கூட கேள்விகள், விவாதங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளது.

இந்து மத நம்பிக்கைகளில் இப்படி குற்றம் கண்டு வந்து கேள்வி கேட்பவர்கள் ஏன் மற்ற மதத்தினர் நம்பிக்கை குறித்து கேள்வி கேட்க முன்வருவது இல்லை? இதன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன?

அடுத்து, இந்துகளுக்காக மட்டுமே பா.ஜ.க குரல் கொடுத்து வருகிறது என்று தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்துகிறார்கள். ஏன் நீங்களும் கூட இந்து மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கலாமே... 'சரி எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள்' என நாங்களும் 'கம்'முனு இருந்து விடுகிறோம்."

சம்பா பயிர் காப்பீடு: `டிசம்பர் 15 வரை அவகாசம் வேண்டும்! - டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சரிவர ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?''

''ஒரு கட்சியின் தலைவருக்கு அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களே ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றிருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைவர்களே வெளிப்படையாக சொல்லும்போது அதுகுறித்த கேள்வியையும் நீங்கள் எழுப்பினால் சரியாக இருக்கும். பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி பதில் கேட்பது சரியானது அல்ல. ஏனெனில், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவருமே மாநில தலைவரோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். மாநில தலைவரும் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார்.''

''அண்மையில், தமிழக மின் துறையில் முறைகேடு என்று குற்றம் சாட்டிய அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை அளிக்காதது, சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே?''

''மின்துறை வாரிய ஒப்பந்தத்தாரர்கள் ஆட்சியாளர்களுக்கு 4% கமிஷன் கொடுத்தப் பிறகுதான் அவர்களுக்கான பில் தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அண்ணாமலை வெளியிடுகிறார். ஆக, அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் பேசுகிற ஆட்சியாளர்கள் எந்த இடத்திலும் 'நாங்கள் இப்படிச் செய்யவில்லை' என்று சொல்லவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் துறை மட்டுமல்லாது மற்றத் துறைகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களும்கூட, முந்தைய அ.தி.மு.க அரசிடம் ஒப்பந்தம் பெற்ற பணிகளைச் செய்துமுடித்துவிட்டு, இப்போதைய தி.மு.க அரசிடமிருந்து பணம் பெறுவதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால், இப்போதைய ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கொடுத்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்ற நிலைதான் நிலவிவருகிறது. இந்த நடமுறையெல்லாம் முதல்வருக்குத் தெரியுமா, தெரியாதா?

ஆக, இந்த முறைகேடுகளை எல்லாம், எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் எடுத்துச்சொல்கிறோம். பொறுப்பில் இருப்பவர்கள்தான், 'நாங்கள் இப்படியெல்லாம் செய்யவில்லை. நேர்மையான முறையில்தான் பட்டுவாடா நடந்துள்ளது' என்ற விவரத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். ஆனால், பொத்தாம் பொதுவாக, 'ஆதாரத்தைக் காட்டுங்கள்' என்றுதான் ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கஷ்டப்பட்டு, கடன்பட்டு ஒப்பந்தப் பணிகளை செய்துவரும் ஒப்பந்ததாரர்கள், 'கமிஷன் கொடுத்தால்தான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது' என்ற உண்மையை எப்படி வெளிப்படையாக சொல்லமுடியும்? ஆக, எந்த ஒப்பந்ததாரருமே ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள். ஆனாலும்கூட நடைமுறையில் இருந்துவரும் இந்த முறைகேட்டை ஓர் எதிர்க்கட்சியாக நாங்கள் வெளிக்கொண்டு வருகிறோம்.''

கோவை: பள்ளியைவிட்டு விலகியும் டார்ச்சர்; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த  ஆசிரியர் கைது!

''ஆதாரம் இல்லாமல், குற்றச்சாட்டுகளை மட்டுமே அடுக்கினால் அது பொய்க் குற்றச்சாட்டாகவும் இருக்கலாம்தானே?''

''உண்மைதான். ஆனால், இம்மாதிரியான விவகாரங்களில் லஞ்சத்தை நேரடியாகக் கொடுத்தவரோ அல்லது லஞ்சம் வாங்கியவரோ வெளிப்படையாக தங்களைத் தெரிவித்துக்கொள்ளாதவரை, நடைபெற்றுக்கொண்டிருக்கிற முறைகேடுகளை இப்படித்தான் ஓர் அரசியல் கட்சி சொல்லமுடியும்.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்தெல்லாம் வெள்ளை அறிக்கை கொடுக்கிற இந்த அரசாங்கம், ஒப்பந்தப் பணிகள் இந்தக் குறிப்பிட்ட தேதியில் முடிக்கப்பட்டது, இத்தனை நாட்களுக்குள் ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது என்ற விவரங்களை எல்லாம் வெளியிடலாம்தானே!

தமிழக அரசியலில், இன்னொரு நிழல் அரசாங்கம் செயல்படத் தொடங்கிவிட்டது. இதில் முதல்வரது குடும்ப உறுப்பினர்களுக்குப் பங்கு இருக்கிறதா அல்லது அமைச்சர்களுக்கு வேண்டிய நிழலானவர்களுக்கு பங்கு இருக்கிறதா, ஒப்பந்ததாரர்களுக்கு யார் மூலமாக ஒப்பந்தம் கிடைக்கிறது, யார் மூலமாக பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது என்ற உண்மைகளெல்லாம் இப்போதுதான் சிறிது சிறிதாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

எனவே, வரப்போகிற காலங்களில் இன்னும் தீவிரமாக எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் இயங்குவார். லஞ்சம், ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக பா.ஜ.க தொடர்ந்து குரல் கொடுக்கும். இதற்காக எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அதனையெல்லாம் சந்திக்க மாநில தலைவர் அண்ணாமலை தயாராக இருக்கிறார்.''

''ஒப்பந்ததாரர்கள் யாரும் உண்மையை வெளிப்படையாக சொல்லத் தயங்குகிற சூழலில், நீதிமன்ற விசாரணையில் இந்தக் குற்றச்சாட்டை எப்படி தமிழக பா.ஜ.க தலைவர் மெய்ப்பிக்கப்போகிறார்?''

''கோர்ட் விசாரணை ஆரம்பிக்கட்டும்... நாங்கள் எப்படி ஆதாரங்களைக் கொடுக்கப்போகிறோம் என்பதையும் நீங்களே பாருங்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு