Published:Updated:

கேரளப் பல்கலைக்கழகத்தில் தனி ராஜாங்கம் நடத்தியதா எஸ்.எஃப்.ஐ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம்
கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பாட்டு பாடியவருக்கு கத்திக்குத்து... நிர்வாகி வீட்டில் விடைத்தாள்...

பிரீமியம் ஸ்டோரி

கேரளப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிறது. கத்திக்குத்து தொடங்கி தேர்வுத்தாள் மோசடி வரை பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருப்பதால், பல்கலைக்கழக வட்டாரமே கதிகலங்கியிருக்கிறது.

அகில் சந்திரன்
அகில் சந்திரன்

திருவனந்தபுரத்தில் 1837-ல் தொடங்கப்பட்ட பழைமையான பல்கலைக்கழகம் இது. இங்கு, ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த அகில் சந்திரன் என்பவர் மூன்றாம் ஆண்டு அரசியல் அறிவியல் படிக்கிறார். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யின் ஆற்றுகால் பகுதி கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். ஜூலை 11-ம் தேதி கல்லூரி கேன்டீனில் நண்பர்களுடன் ஜாலியாகப் பாட்டு பாடிக்கொண்டிருந்தார் அகில். அப்போது, பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் எஸ்.எஃப்.ஐ-யின் பெண் நிர்வாகி ஒருவர் அதைக் கண்டிக்க, இதற்கு அகிலும் அவரின் நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் நிர்வாகிக்கு ஆதரவாகக் களம் இறங்கிய பல்கலைக்கழகத்தின் எஸ்.எஃப்.ஐ செயலாளர் நஸீம், தலைவர் சிவரஞ்சித் மற்றும் சிலர் ஜூலை 12-ம் தேதி அகிலை கத்தியால் குத்தியிருக்கிறார்கள். படுகாயம் அடைந்த அகில், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ், பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவந்த எஸ்.எஃப்.ஐ அலுவலகத்தில் சோதனை நடத்தி அங்கிருந்து கம்பு, கம்பி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியது. பல்கலைக்கழக எஸ்.எஃப்.ஐ தலைவர் சிவரஞ்சித் வீட்டில் சோதனை நடத்தியதில், பல்கலைக்கழக முத்திரையுடன்கூடிய விடைத்தாள் கட்டுகள் சிக்கின. இதைத் தொடர்ந்துதான் புதிய விவகாரமாக பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டுகள் வரிசைகட்டுகின்றன. கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில், முதல் ரேங்கில் சிவரஞ்சித்தும், 28-ம் ரேங்கில் நஸீமும் தேர்வாகியிருக்கின்றனர். எனவே, கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்விலும் இவர்கள் மோசடி செய்திருக்கலாம் என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இதுகுறித்து கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எம்.கே.ஸக்கீர், ‘‘போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் ரேங்க் வாங்கியவர்கள் கேரளப் பல்கலைக்கழகச் சம்பவத்தில் குற்றவாளிகள் என்று அறிந்தேன். அவர்களுக்காக, தேர்வாணையம் பிரத்யேகமாக எதுவும் செய்யவில்லை. சந்தேகம் இருப்பவர்கள், எல்லா ஆவணங்களையும் சரிபார்க்கலாம். நன்றாகப் படிப்பவர்களுக்கு உயர்ந்த ரேங்க் வழங்குகிறோம். ஆனால், அவர்கள் கிரிமினல் ஆனதற்கான காரணம் என்னவென்று ஆணையத்துக்குத் தெரியாது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘கேரளப் பல்கலைக்கழகத்தில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் மூலம், எஸ்.எஃப்.ஐ-யின் கோரமுகம் மற்றொரு முறை வெளிப்பட்டிருக்கிறது. கேரளப் பல்கலைக்கழக விடைத்தாள் குறித்த விசாரணைக்காக பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழுவில், சி.பி.எம் அங்கத்தினர் மட்டும் இடம் பெற்றுள்ளனர். எஸ்.எஃப்.ஐ அமைப்பைக் காப்பாற்றும்விதமாக அரசு இப்படிச் செய்துள்ளது’’ என்று குற்றம்சாட்டிய கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து கவர்னருக்கு மனு அளித்திருக்கிறார்.

நஸீம்
நஸீம்

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘‘கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்தக் குறையும் இல்லாமல் தேர்வுகளை நடத்திவருகிறது. பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை முன்வைத்து, அரசு மற்றும் தேர்வாணையத்தின்மீது பழி சுமத்தும் கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆயிரக்கணக்கானோர் நம்பியிருக்கும் நிறுவனத்தின்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவது சரியில்லை. கேரளப் பல்கலைக்கழகத்தில் மாணவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில், அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, ‘பல்கலைக்கழகத்தில் பாட்டு பாடக் கூடாது, ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ளக் கூடாது, சத்தமாகச் சிரிக்கக் கூடாது’ உள்ளிட்ட கட்டுப்பாடு களை எஸ்.எஃப்.ஐ-யினர் விதித்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து 187 மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய எஸ்.எஃப்.ஐ-யின் கேரள மாநிலச் செயலாளர் சச்சின் தேவ், ‘‘எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் செய்யும் தவறுகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால், இதையே காரணம் காட்டி சிலர் அரசியல் செய்கின்றனர். நல்ல பணிகளை நாங்கள் செய்திருந்தும், பல்கலைக்கழக விஷயத்தில் எங்களை வேட்டையாடுவது சரியல்ல. எங்களை பலவீனப்படுத்தும்விதமாக சமூக வலை தளங்களில் பதிவிடுகிறார்கள். சிவரஞ்சித் வீட்டிலிருந்து விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பல்கலைக்கழகம்தான் விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

கேரளப் பல்கலைக்கழகத்தில் தனி ராஜாங்கம் நடத்தியதா எஸ்.எஃப்.ஐ?

விவகாரம் அணைந்தபாடில்லை... பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் தொடர்வதால், கேரளத்தில் தகிப்பு தொடர்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு