Published:Updated:

வேலூர்: ``ரூ.5,000 கமிஷன் கொடுத்தால்தான் பில் பாஸ் ஆகும்'' - கறார்காட்டிய ஆவின் அதிகாரி கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால்
ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால்

லஞ்சப் பணத்தை ஆவின் உதவி பொதுமேலாளர் மகேந்திரமால் கைநீட்டி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை அதிரடியாகக் கைதுசெய்தனர்.

வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான `ஆவின்' தலைமை அலுவலகம், சத்துவாச்சாரியில் இருக்கிறது. இங்கு, உற்பத்தித்துறையின்கீழ் இயங்கும் `ப்ரீ-பேக்கிங்' பிரிவில் ஒப்பந்த முறையில் பணியாளர்களைக்கொண்டு வேலை செய்துவருகிறார் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஜெயச்சந்திரன். இவரின் பணி, இயந்திரத்திலிருந்து வரும் பாலை அளவிடுவதும், பேக்கிங்குக்குப் பிறகு சீலிடுவதும்தான். இதற்கான தொகையை மாதந்தோறும் ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரனுக்கு ஆவின் நிர்வாகம் வழங்க வேண்டும்.

வேலூர் ஆவின் அலுவலகம்
வேலூர் ஆவின் அலுவலகம்

இந்த நிலையில், ஆவின் உதவி பொதுமேலாளரான மகேந்திரமால், ஒப்பந்தப் பணியாளர்களுக்கான சம்பளத் தொகையை வழங்க கமிஷன் கேட்டிருக்கிறார். ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன், கமிஷன் கொடுக்க மறுத்ததால், சம்பளத் தொகையை நிலுவையில்வைத்து போக்குக் காட்டியிருக்கிறார் மகேந்திரமால். நிலுவைத் தொகையைக் கேட்டு ஜெயச்சந்திரன் நடையாக நடந்த வேளையில், ``ஐந்தாயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்தால்தான் பில் பாஸாகும்" என்று கறார்காட்டியிருக்கிறார் உதவிப் பொதுமேலாளர் மகேந்திரமால்.

ஆவின் ஊழல் புகார்: முதல்முறையாக 34 அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம்; கந்தசாமி ஐ.ஏ.எஸ் அதிரடி!

கமிஷன் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார். அதையடுத்து, ஆவின் உதவிப் பொதுமேலாளரைக் கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவுசெய்தனர். அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரூபாய் ஐந்தாயிரத்துக்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பினர்.

ஆவின் உதவிப் பொது மேலாளர் மகேந்திரமால்
ஆவின் உதவிப் பொது மேலாளர் மகேந்திரமால்

அதை வாங்கிக்கொண்டு ஜெயச்சந்திரனும் மகேந்திரமாலிடம் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை ஆவின் உதவிப் பொதுமேலாளர் மகேந்திரமால் கைநீட்டி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரை அதிரடியாகக் கைதுசெய்தனர். அலுவலகத்திலிருந்த கோப்புகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆராய்ந்தனர். கைது செய்யப்பட்ட உதவிப் பொதுமேலாளர் மகேந்திரமாலுக்கு 57 வயதாகிறது. வேலூர் ஆவின் அலுவலகத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மகேந்திரமாலுக்குச் சொந்தமான சொத்து விவரங்களையும் சேகரித்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு