Published:Updated:

`9 ரூபாய்க்கு மினி பாக்கெட் பால்!’ - இன்ப அதிர்ச்சி கொடுத்த வேலூர் ஆவின் நிறுவனம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

ஆவின் பால் விலையை உயர்த்திய நிலையில், 9 ரூபாய்க்கு மினி பாக்கெட் பாலை அறிமுகம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது, வேலூர் ஆவின் நிறுவனம்.

ஆவின் நிறுவனம்
ஆவின் நிறுவனம்

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான `ஆவின்’ தலைமை அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கிவருகிறது. இங்கு தினமும் இரண்டு மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, சுமார் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஆவின் தலைமை அலுவலகம்
ஆவின் தலைமை அலுவலகம்

இவற்றில் இரண்டு லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மீதமுள்ள பாலில் இங்கேயே 72 ஆயிரம் லிட்டரில் பால் பாக்கெட்டாகவும், நெய், பால்கோவா, மோர், லஸ்ஸி, குல்ஃபி உள்ளிட்ட பால் உப பொருள்களாகவும் தயாரிக்கப்படுகின்றன.

வேலூர் ஆவினில் நீலம், பச்சை, ஆரஞ்சு நிறத்தில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஆவின் பாலின் கொள்முதல் விலையை நான்கு ரூபாய்க்கும், விற்பனை விலையை ஆறு ரூபாய்க்கும் தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியது.

பாக்கெட் பால்
பாக்கெட் பால்

இதனால், ஏழை எளிய பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பலத் தரப்பில் விலை ஏற்றத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே, ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வேலூர் ஆவின் நிறுவனம் 9 ரூபாயில் மினி பாக்கெட் பாலை அறிமுகம் செய்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இதுபற்றி நம்மிடம் பேசிய வேலூர் ஆவின் நிறுவன அதிகாரிகள், ‘‘ஆவின் பால் விலை ஏற்றத்தால் வெகுஜன மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கால் லிட்டர் பால் 11 ரூபாய்க்கு மேல் போயிடுச்சு. இதைக் கருத்தில் கொண்டுதான் 9 ரூபாயில் பால் பாக்கெட் அறிமுகம் செய்திருக்கிறோம். 167 மில்லி லிட்டர் கொண்ட இந்த மினி பாக்கெட் பாலில் முழுக் கொழுப்புச் சத்து நிறைந்திருக்கிறது.

பாக்கெட் பால்
பாக்கெட் பால்

ஆரோக்கியா நிறுவனம் 165 மில்லி லிட்டர் பால் பாக்கெட்டை 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. நாங்கள், அவர்களைவிடக் கூடுதலாக 2 மில்லி அதிகமாகவும், ஒரு ரூபாய் விலையைக் குறைத்தும் விற்கப் போகிறோம். வரும் 1-ம் தேதியிலிருந்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 9 ரூபாய் பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படும்’’ என்றனர்.