Published:Updated:

ஒரே ஆண்டில் சிக்கிய 2 உயர் அதிகாரிகள்! - அதிரடி காட்டிய வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை

வேலூரில், வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்துக் கைதுசெய்தனர்.

துணை இயக்குநர் ஞானமணி
துணை இயக்குநர் ஞானமணி

வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில், நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்குக் கட்டட வரைபட ஒப்புதல் வழங்குவது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. துணை இயக்குநராக ஞானமணி என்பவர் உள்ளார். 

துணை இயக்குநராக இருந்த சுப்பிரமணியன் என்பவர் லஞ்சம் வாங்குவதற்காகவே சத்துவாச்சாரி வள்ளலார் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தனி அலுவலகம் நடத்திவந்தார்.
நகர ஊரமைப்புத்துறை அலுவலர்கள்

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த கணேஷ் என்பவர் அரக்கோணம் தணிகை போளூரில் வாங்கிய வீட்டு மனைக்கு அங்கீகாரம் கேட்டு துணை இயக்குநர் ஞானமணியை தொடர்புகொண்டார். வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றால், 2 லட்சம் ரூபாயைக் கொடுக்க வேண்டும் என துணை இயக்குநர் கேட்டுள்ளார். இடைத்தரகராக, இதே அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜசேகர் என்பவர் செயல்பட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேஷ், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரும் ரசாயனம் தடவிய 2 லட்ச ரூபாய் நோட்டுகளை கணேஷிடம் கொடுத்தனுப்பினர். துணை இயக்குநர் ஞானமணியை அலுவலகத்திலேயே சந்தித்து அவர் லஞ்சப் பணத்தைக் கொடுத்தார். அவரும் சிரித்த முகத்துடன் லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டார்.

இடைத்தரகர் ராஜசேகர்
இடைத்தரகர் ராஜசேகர்

அந்தநேரத்தில், அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், துணை இயக்குநர் ஞானமணியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இடைத்தரகராகச் செயல்பட்ட ஓய்வுபெற்ற அலுவலர் ராஜசேகரனையும் மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். இதற்கு முன்பும், முறையற்ற பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. இதுதொடர்பாகவும், துணை இயக்குநர் ஞானமணியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதே அலுவலகம், முன்னர் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்தாண்டு செயல்பட்டுவந்தது. அப்போது, துணை இயக்குநராக இருந்த சுப்பிரமணியன் என்பவர் லஞ்சம் வாங்குவதற்காகவே சத்துவாச்சாரி வள்ளலார் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தனி அலுவலகம் நடத்திவந்தார். மாதச் சம்பளத்துக்கு 38 ஊழியர்களையும் நியமித்தும் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் குவித்தார்.

விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்
விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்

முறைகேடாக நடத்தப்பட்டுவந்த இந்த அலுவலகத்தைக் கடந்தாண்டு செப்டம்பர் 7-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்தனர். அப்போதைய துணை இயக்குநர் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், சுப்பிரமணியனுக்குப் பதிலாக அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட ஞானமணியும் லஞ்சம் வாங்கிச் சிக்கியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.