Published:Updated:

`அவதூறு பரப்புறாங்க; எங்க அம்மா தாங்கிக்கொண்டு இருக்காங்க!'- விஜயகாந்த்தை நினைத்து கலங்கிய மகன்

லோகேஸ்வரன்.கோ

``விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். விரைவில் சிங்க நடைபோட்டு மக்கள் முன் வந்துநிற்பார்’’ என்று அவரின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர்விட்டு உருக்கமாகக் கூறினார்.

vijayakanth
vijayakanth

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளையொட்டி, வேலூர் மாவட்டம், ஆம்பூரில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகையில், ``தே.மு.தி.க மக்களுக்கான கழகம். கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்று எல்லோரும் சொல்றாங்க. 

vijaya prabhakaran
vijaya prabhakaran

பிறந்த நாளில் 10,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களை சிங்கம் மாதிரி `சிங்கிளா’ உட்கார்ந்து கடைசிவரைக்கும் ஒருவரைக்கூட விடாமல் பார்த்துவிட்டுத்தான் சென்றார். தே.மு.தி.க ஓய்ந்துவிட்டது என்று சொல்பவர்கள் முட்டாள்கள். குகைக்குள் இருந்தாலும் `சிங்கம்’ சிங்கம்தான். கேப்டனின் உடல்நிலை சீராகவும் சூப்பராகவும் இருக்கிறது. 

அவ்வளவு பேர் அவ்வளவு அவதூறைப் பரப்புகிறார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொண்டு எங்கள் அம்மா போராடிக் கொண்டிருக்கிறார். 2020-ம் ஆண்டு தை மாதத்துக்குப் பிறகு மீண்டும் எப்படி வரப்போகிறார் என்று பார்க்கத்தான் போகிறீர்கள். மக்களைக் காப்பாற்றும் ஒரே கட்சி தே.மு.தி.க தான். கேப்டன் எதிர்பார்ப்பே இல்லாமல் 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைக்கிறார். 

vijaykanth
vijaykanth

மக்கள் எவ்வளவுதான் தூக்கிப்போட்டாலும் சுவரில் அடித்த பந்து மாதிரி மீண்டும் திருப்பிவந்து மக்கள் முன்பு நிற்கிறார். வெற்றியோ... தோல்வியோ அவருக்கு முக்கியமில்லை. தன்னால் முடிந்தவற்றை மக்களுக்காகச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறார். இதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்’’ எனப் பேசியபடியே அழுதார். இதனைப் பார்த்த தொண்டர்களும் கலங்கினர்.

தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், ``இந்த சந்தோஷமான நாளில் நான் கொஞ்சம் `எமோஷனல்’ ஆகிவிட்டேன். யாரும் வருத்தப்பட வேண்டாம். கேப்டன் விரைவில் சிங்க நடைபோட்டு உங்கள் முன்வந்து நிற்பார். ஆணித்தரமாகச் சொல்கிறேன். கேப்டனை நாங்கள் கண் இமைகளில் வைத்துப் பார்த்துக்கொள்கிறோம். எங்களுக்காக இல்லை. உங்களுக்காகத் தான்.

பிரேமலதா
பிரேமலதா

நான் கலங்கவில்லை. ஆனந்தக் கண்ணீராக நினைத்துக்கொள்ளுங்கள். பக்கத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதைச் செய்கிறார்கள். அதைச் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். பக்கத்திலிருக்கும் நம் ஆளைப் பற்றியே உங்களுக்குத் தெரியவில்லை. எல்லா வளமும் பெற்ற ஒரு தலைவராக கேப்டன் இருக்கிறார். நீங்கள்தான் அவரைத் தேர்வு செய்ய வேண்டும்’’ என்றார் நிறைவாக.