Published:Updated:

பழங்குடி பெண்கள் பாலியல் வழக்கு; காக்கிகளைக் காப்பாற்றிய ஜெயலலிதா... சாட்டை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்!

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்

ஒரு வழக்கு... காக்கிகள் மீதே குற்றச்சாட்டு. ஆரம்பத்தில் முதலமைச்சரே அதை மறுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான காக்கிகளுக்கு துணை நின்றிருக்கிறார். தனி நபர்களாக சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கி போராடிய பிறகுதான் வழக்கே பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெரிதாக முன்னேற்றமும் இல்லை.

பழங்குடி பெண்கள் பாலியல் வழக்கு; காக்கிகளைக் காப்பாற்றிய ஜெயலலிதா... சாட்டை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்!

ஒரு வழக்கு... காக்கிகள் மீதே குற்றச்சாட்டு. ஆரம்பத்தில் முதலமைச்சரே அதை மறுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான காக்கிகளுக்கு துணை நின்றிருக்கிறார். தனி நபர்களாக சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கி போராடிய பிறகுதான் வழக்கே பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெரிதாக முன்னேற்றமும் இல்லை.

Published:Updated:
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஏழை எளியவராக இருந்தால், அடுத்த நிமிடமே என்கவுன்டர்கூட செய்து பொதுமக்களிடம் லைக்ஸ்களை அள்ளத் தவறுவதில்லை தமிழகக் காவல்துறை. அதேசமயம், காக்கிகளே குற்றவாளிகள் என்றால், பொத்திப்பொத்திப் பாதுகாத்து, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக காவல்துறையின் மொத்த பலத்தையும் பயன்படுத்தவும் தவறுவதில்லை.

அப்படிப்பட்ட கொடுமையான வழக்குகளில் ஒன்று, சமீப நாட்களாக பொதுவெளியில் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், `அப்படி பாலியல் பலாத்காரம் ஏதும் நடக்கவில்லை' என்று முதலமைச்சரே சட்டசபையில் அறிவித்த வழக்கு இது. ஆம், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் இந்தக் கொடுமை பற்றிக்கேட்டபோது, தான் ஒரு பெண்ணாக இருந்தும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் காக்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் வகையில், சம்பவத்தையே மூடிமறைக்கப் பார்த்தார் ஜெயலலிதா. ஆனால், சமூகநீதி பேசும்போராளிகள் விடாமல் போராடியதன் விளைவாகவே இன்றளவிலும் இந்த வழக்கு உயிரோடு இருக்கிறது.

மண்டபம் கிராம பழங்குடிகள்
மண்டபம் கிராம பழங்குடிகள்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2011-ம் ஆண்டு, திருக்கோவிலூர் அருகேயுள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் சமுதாயத்தினர் சிலரை, திருட்டு வழக்கில் திருக்கோவிலூர் போலீஸார் நள்ளிரவு நேரத்தில் கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் தாங்கள் கைது செய்த ஆண்களை தனி வாகனத்தில் ஏற்றிக்கொண்ட போலீஸார், பெண்களை மற்றொரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பெண்கள் வாகனத்தை மறைவான காட்டுப்பகுதிக்கு செலுத்தி 17 வயது சிறுமி, கர்ப்பிணி பெண் உட்பட 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்போது பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையோ.... அன்றைய ஆட்சியாளர்களோ துளியும் பதறவில்லை. மொத்தத்தையும் மூடி மறைக்கவே பார்த்தனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள சார்பில் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட, அதன்பிறகு மீடியாக்களிலும் இந்த விஷயம் பெரிதாக பேசப்பட, திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமை காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் பக்தவச்சலம் ஆகிய ஐவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சீனிவாசன்
கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சீனிவாசன்

இந்நிலையில், இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ``22.11.2011 அன்று இரவு 4 பழங்குடி பெண்களை தைலமர தோப்புக்கு கொண்டு சென்ற போலீஸ், பாலியல் வன்முறை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்துடன் நேரடி தொடர்பு கிடையாது. பூபதி எனும் பெண் மூலமாக ஒருங்கிணைப்பாளர் ரமேஷை 25-ம் தேதி சந்தித்தனர். அவர் எனக்கு தகவலளித்ததை தொடர்ந்து, அவர்களிடம் தீர விசாரித்து புகார் எழுதினோம். 26-ம் தேதி காலையில் கலெக்டரிடம் கொடுக்கச் சென்றோம்.

அப்போது, அந்த புகாரின் நகலை அப்போதைய டி.ஜி.பி-யான ராமானுஜத்துக்கும் அனுப்பி வைத்தோம். உடனே எஃப்.ஐ.ஆர் போட சொல்லிவிட்டார் ராமானுஜம். இந்த விஷயத்தில் அவருக்கு நாங்கள் இன்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த எஃப்.ஐ.ஆர் மட்டும் அன்று போடப்படவில்லையென்றால், வழக்கின் நிலை வேறுமாதிரியாக இருந்திருக்கும். அப்போது பத்திரிகைகளும் இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

மறுநாள், மண்டபம் கிராமத்திலேயே நீதிபதி நேரில் விசாரித்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. 30-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, தங்கமணி என்பவர் மூலமாக அந்தப் பெண்களை கடத்துவதற்கான முயற்சியும் நடந்தது. இது தொடர்பாக நான் ஒரு புகார் அளித்தேன். உடனே, எஸ்.பி அலுவலகத்தில் தங்கமணி ஒரு புகார் அளித்தார். நாங்கள் அவரைத் தாக்கியதாகவும், பழங்குடி பெண்கள் வன்கொடுமை செய்யப்படவில்லை, போலீஸ் விசாரிக்கத் தான் அழைத்துச் சென்றுள்ளனர் என்றெல்லாம் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பொய்யான புகாரை வைத்து, எங்கள் மீதே எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்தனர். அந்த 4 பெண்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான புகாரிலும், அவர்களைக் கடத்த முயற்சி நடந்தது தொடர்பான புகாரிலும், இதுவரையில் காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. அதேசமயம், தங்கமணி கொடுத்த பொய்யான புகாருக்கு மட்டும் 2016-ம் ஆண்டிலேயே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

புகழேந்தி என்பவரின் பொதுநல வழக்கு, ரமேஷ் மற்றும் நான் தொடுத்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றன. இதில் நான் தொடுத்த வழக்கு சம்பந்தமாக இன்று நீதிமன்ற விசாரணை நடக்கவுள்ளது. 4 பழங்குடி பெண்களின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 போலீஸாரில், ஏற்கெனவே 4 பேர் பிணையில் வெளியில் உள்ளனர். ஒருவர் மட்டும் வாங்கவில்லை.

பேராசிரியர் பிரபா கல்விமணி
பேராசிரியர் பிரபா கல்விமணி

எங்களுடைய கோரிக்கை, 2011-ல் பதியப்பட்ட 4 பழங்குடி பெண்களின் பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனடியாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, விசாரணையை ஆரம்பிக்கவேண்டும். இத்தனை ஆண்டு தாமதத்தத்துக்கு காரணம் என்ன என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து பொங்கலுக்குப் பிறகு முதலமைச்சரைச் சந்திக்க, பிரசார நடை பயணம் மேற்கொள்ள உள்ளோம்“ என்று சொன்னார் பிரபா கல்விமணி.

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ரமேஷிடம் பேசினோம். ``இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ஐந்து லட்சம் நஷ்ட ஈடு ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. சமீபத்தில் மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 75 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 11 பேருக்கு இந்தத் தொகையை பிரித்தும் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் ஜாமீன் வாங்கிவிட்டபோதும், மற்றொரு நபரான சீனிவாசன் ஜாமீன் வாங்கவே இல்லை. 2017-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் ஜாமீன் கோரினார். `கீழமை நீதிமன்றம் ஜாமீன் கொடுக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யட்டும்’ என அப்போது சொல்லப்படவே, விழுப்புரம் நீதிமன்றத்துக்கு அவர் வரவேயில்லை. இந்நிலையில்தான் கடந்த மே மாதம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான சீனிவாசன், ஜாமீன் மறுக்கப்படவே தப்பியோடினார். பிறகு, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், மெடிக்கல் விடுப்பு எடுத்துவிட்டார்.

பி.வி.ரமேஷ்
பி.வி.ரமேஷ்

இந்த சீனிவாசன் விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து ஓடியதால், ரிஜிஸ்டிரார் மூலமாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த தகவலும் வெளியில் வரவில்லை. மொத்தத்தில் அவரை போலீஸ் பாதுகாக்கிறது. தற்போது நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டபோதும், `நெஞ்சுவலி' என்று சொல்லி மருத்துவமனையில் படுக்கவைத்து விட்டார்கள். குற்றம்சாட்டப்பட்டிருக்கும் காக்கிகளை காவல்துறை காப்பாற்றும் நோக்கத்திலேயே செயல்படும்போது, யாரைக் குற்றம்சொல்வது” என்று வேதனையுடன் சொன்னார்.

ஒரு வழக்கு... காக்கிகள் மீதே குற்றச்சாட்டு. ஆரம்பத்தில் முதலமைச்சரே அதை மறுத்து, குற்றச்சாட்டுக்கு ஆளான காக்கிகளுக்கு துணை நின்றிருக்கிறார். தனி நபர்களாக சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கி போராடிய பிறகுதான் வழக்கே பதிவு செய்துள்ளனர். ஆனால், பதினோரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த நிமிடம் வரையில் வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மற்றொரு வழக்கில் இருளர் இன மக்களுக்கு காக்கிகள் கொடுத்த பெருங்கொடுமையை 'ஜெய்பீம்' என்று திரைமொழியில் பேசி, தமிழகத்தையே அதிர வைத்திருந்தார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டியதோடு, `எளியவர்களுக்கு இந்த அரசு துணை நிற்கும்' என்றும் உறுதி கொடுத்தார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒருவேளை முன்னாள் முதல்வரால் பாதுகாக்கப்பட்ட இந்த காக்கிகள் பற்றிய விஷயம் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், கடந்த சில நாள்களாக இந்த வழக்கு பரபரப்பாக பேசப்படும் நிலையில், அது அவருடைய கவனத்துக்கும் போயிருக்கும். பாதிக்கப்பட்ட மக்கள், பொங்கலுக்குப் பிறகு போர்ப்பரணி பாடியபடி தன்னைத் தேடிவரும் வரை காத்திருக்காமல், உடனடியாக உண்மையான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிடுவார் என்று நம்புவோம்.!