Published:Updated:

`மகன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!’ - பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உருக்கம்

பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக ஒரு மாத பரோல் வழங்கியிருக்கிறது, தமிழக அரசு. இன்னும் ஓரிரு நாளில் சிறையிலிருந்து அவர் வெளியே வர உள்ளார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்களை விடுதலை செய்ய ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியது. இதுதொடர்பாக, ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதால், ஏழு பேரும் மன உளைச்சலில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. வேலூர் மத்தியச் சிறையில் இருந்த பேரறிவாளன் சிறுநீரகப் பிரச்னை, மூட்டு வலியால் கடுமையாக அவதிப்பட்டார். 

மகன் விடுதலைக்காக அழுத அற்புதம்மாள்
மகன் விடுதலைக்காக அழுத அற்புதம்மாள்

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். உடல் பிரச்னை குணமாகாததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறப் பரிந்துரை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்தபடி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே, 2017-ம் ஆண்டு தந்தை குயில்தாசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பேரறிவாளனை பரோலில் விடுவிக்கத் தாய் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கிடைத்தது. சிறகடித்த பறவையைப் போல் வெளியில் வந்த அவர் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் தங்கினார். இத்தனை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த முதல் பரோலும் அதுதான். உடல்நிலை பாதித்த தந்தையை அருகிலிருந்து பார்த்துக்கொண்டார். எப்போதும், ‘அறிவு அறிவு’ என்று நினைத்துக்கொண்டே உருகும் தாயை விட்டு நகரவில்லை. ‘அறிவுக்கு இந்த இனிப்புதான் பிடிக்கும்; அதைத்தான் அவன் விரும்பிச் சாப்பிடுவான்’ என்று பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டார், தாய் அற்புதம்மாள்.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவில் பேரறிவாளன்
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவில் பேரறிவாளன்

பரோல் முடிந்து மீண்டும் பேரறிவாளன் சிறைக்குத் திரும்பியபோது, குடும்பமே சோகத்தில் மூழ்கியது. ``19 வயதில் சிறைக்குச் சென்ற தன் மகன் இளமைக் காலம் முடிந்து 47 வயதில் வெளியில் வந்தான்; அவனுக்குத் திருமணம் செய்துவைத்து அழகு பார்க்க என்னால் முடியவில்லையே’’ என்று தாய் அற்புதம்மாள் கதறி அழுதார். வெளி உலகுக்குப் பேரறிவாளன் மீதான பார்வை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அற்புதம்மாளுக்கு அவர் என்றும் சின்னஞ்சிறு குழந்தைதான். இந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் பரோல் கேட்டு பேரறிவாளனே விண்ணப்பித்திருந்தார்.

இதற்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, புழல் மத்திய சிறை நிர்வாகம் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் வெளியில் அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் அவர் வெளியில் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. இந்த முறையும் ஜோலார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் தங்குவதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது. ‘‘ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது; அமைப்பு சார்ந்த நிர்வாகிகளைச் சந்திக்கக் கூடாது; பொது இடங்களுக்குச் செல்லக் கூடாது’ போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனின் வீடு
ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனின் வீடு

மகன் வருகையையொட்டி, பேரறிவாளனின் தந்தை குயில்தாசனிடம் பேசினோம். ``எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னைப் பார்க்க மகன் விரும்புகிறார். என் மகள் வழி பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது. தாய்மாமன் என்ற முறையில் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் அறிவு பரோலுக்கு விண்ணப்பித்தார். என் மகன் நிரபராதி என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் விமர்சனங்களையும் விடுதலைக்கான எதிர்ப்புகளைப் பற்றியும் நான் கண்டுகொள்வதில்லை. மகனைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என்றார் மகிழ்ச்சி பொங்க.