Published:Updated:

தண்ணீர்… தண்ணீர்: செயற்கையாக வரவிருக்கும் பஞ்சம்! - ஓர் எச்சரிக்கை | மர்மங்களின் கதை | பகுதி 4

செயற்கையாக வரவிருக்கும் பஞ்சம்

``தோழர்களே... இது டேவிட்டுக்கும் கோலியாத்துக்குமான போராட்டமாக மாறியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனத்துக்கும் ஏழை மக்களுக்கும் இடையேயான போர். அவர்கள் கோலியாத். நாம்தான் டேவிட்.” - ஆர்.எஸ்.ஜெ

தண்ணீர்… தண்ணீர்: செயற்கையாக வரவிருக்கும் பஞ்சம்! - ஓர் எச்சரிக்கை | மர்மங்களின் கதை | பகுதி 4

``தோழர்களே... இது டேவிட்டுக்கும் கோலியாத்துக்குமான போராட்டமாக மாறியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனத்துக்கும் ஏழை மக்களுக்கும் இடையேயான போர். அவர்கள் கோலியாத். நாம்தான் டேவிட்.” - ஆர்.எஸ்.ஜெ

Published:Updated:
செயற்கையாக வரவிருக்கும் பஞ்சம்

ஏப்ரல் 9, 2000-ம் ஆண்டு.

பொலிவிய நாட்டின் கொச்சபாம்பா நகரம் அமைதியிழந்திருந்தது. கொச்சபாம்பா சில மாதங்களாகவே அமைதியில்லாமல்தான் இருக்கிறது. அன்றைய தினம் அந்த நகரத்தின் சென்ட்ரல் பிளாஸா பகுதியில் மக்கள் திரள் போலீஸுக்கு எதிராகத் திமிரிக்கொண்டிருந்தது. விக்டர் ஹ்யூகோ டாசா என்னும் 17 வயது இளைஞன் முகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான். அவன் உடலை வைத்துக்கொண்டுதான் மக்கள் போராட்டம் நடைபெற்றது.

கொச்சபாம்பாவில் குடிநீரின் விலையை அரசு எக்கச்சக்கத்துக்கு ஏற்றியிருந்தது. குடிநீருக்கு விலை நிர்ணயம் செய்து தனியாருக்குத் தாரை வார்த்திருந்த அரசை எதிர்த்ததால் உயிர் துறந்தவர்தான் விக்டர் ஹ்யூகோ. கொச்சபம்பாவின் மக்கள் எழுச்சியை ஒடுக்க நெருக்கடிநிலையை அறிவித்திருந்தது அரசு.

தண்ணீர் பற்றாக்குறை / Representational Image
தண்ணீர் பற்றாக்குறை / Representational Image
Pixabay

பொலிவியாவின் மூன்றாம் பெரிய நகரம் கொச்சபாம்பா. சுமாராக எட்டு லட்சம் பேர் வசித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தெருவில் இறங்கி தண்ணீரை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்துப் போராடினர். 2000-ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் போராட்டம் தொடங்கியது. பொலிவிய அரசு அமெரிக்காவின் பெக்டல் கார்ப்பரெஷனுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஒப்பந்தப்படி ஆறு, குளம், கிணறு தொடங்கி மழைநீர் வரை அந்த நகரத்தில் கிடைக்கும் அனைத்து நீரும் அந்த நிறுவனத்துக்கே சொந்தம்; தன் வீட்டின் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரைப் பிடித்துப் பயன்படுத்தும் உரிமை மக்களுக்குக் கிடையாது. அந்த அளவுக்கு கெடுபிடி. மனிதர்களுக்கே இதுதான் நிலைமை என்றால், ஆடு, மாடு உள்ளிட்ட பிற உயிரினங்களின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை.

நன்னீரை இழக்கும் உலகம்:

உலகம் நல்ல தண்ணீரை இழந்துகொண்டிருக்கிறது. உலகின் மூன்று சதவிகிதம்தான் நல்ல தண்ணீர். `பூமியின் உயிர்கள் எல்லாவற்றுக்கும் இயற்கை வழங்கியிருக்கும் நல்ல தண்ணீரை உலகம் யாரிடம் இழந்துகொண்டிருக்கிறது?’ என்ற கேள்விக்கு, `கார்ப்பரேட்களிடம்...’ என்பதே பதில். 3% நல்ல தண்ணீரிலும்கூட, கணிசமான அளவு உறைந்த பனிக்கட்டிகளில் அடைபட்டிருக்கிறது. மீதமுள்ள அளவு மட்டுமே மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துக்கும். அதிலும் நதிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளிலுள்ள தண்ணீர் ஒரு சதவிகிதம். அந்த ஒரு சதவிகித தண்ணீரும் தற்போது இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது. இந்த மொத்த தண்ணீரையும் மனிதர்கள் மட்டுமே குடித்துத் தீர்க்கவில்லை. அதையும் தாண்டிய பெருநிறுவனங்களின் அடங்கா தாகமே பூமியின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.

பொலிவியாவின் தனி நபர் வருமானம் மாதத்துக்கு 60 டாலர்கள். தண்ணீரைக் கட்டுப்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், தண்ணீருக்கு விலையாக 9 மாத வருமானத்தைக் கொடுக்கச் சொல்கிறார்கள்.

தண்ணீர்
தண்ணீர்

தண்ணீர் தனியார்மயப்படுத்தப்படுவதன் அடிப்படைக் காரணம் உலக வங்கி என்ற அமைப்பு. ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் தண்ணீர் தனியார்மயப்படுத்தப்பட காரணம் உலக வங்கிதான்.

உலக வங்கியும் தண்ணீரும்..!

`உலக வங்கிக்கு என்ன அதிகாரம்? அது எப்படி நம்மூரில் இருக்கும் தண்ணீரைக் கட்டுப்படுத்தலாம்?’ என நீங்கள் கேட்கலாம். உலக வங்கியில் பணிபுரிந்த ஜான் பெர்கின்ஸ் என்பவர், தான் எழுதிய `ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார்.

``உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகிலுள்ள பெரு நிறுவனங்கள் பங்கிட்டுக்கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று `உலகமயமாக்கல்’ என்ற ஒரு கோட்பாட்டின்படி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது அல்லவா…

ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்திருக்கும் நிறுவனங்களா எங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா… அங்கேதான் அந்த நிறுவனங்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.

முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துகொண்டு உலாவும் அவற்றின் உண்மையான முகங்களைக் காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விஷயம் அல்ல.”

உலக நாடுகள் பலவற்றில் உலக வங்கி நுழைவது இப்படித்தான். நாடுகளுக்குத் தேவைப்படும் நிதியைக் கடனாக அளித்துவிட்டு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறுகையில் உள்ளே நுழையும். தனக்கான கடனைத் திரும்பப் பெறும் வழிகளாக, தான் கைகாட்டும் நிறுவனங்களுக்கு அந்தந்த நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கும் உரிமையை வழங்க அரசுகளைக் கட்டாயப்படுத்தும். அரசுகளும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும். பின்னர், மக்களுக்கென இருக்கும் அடிப்படை உரிமைகள் பறிபோகும். அவற்றை உலக வங்கி பறித்துக்கொள்ள அரசுகளே துணை நின்று வேலை செய்து கொடுக்கும். எதிர்ப்பவர்களைச் சுட்டுத் தள்ளும்.

நீர்ப் பற்றாக்குறை
நீர்ப் பற்றாக்குறை

கொச்சபம்பா நகரில் விக்டர் ஹ்யூகோவை சுட்டுக் கொன்ற தோட்டாவுக்குப் பின் இருப்பதும் உலக வங்கிதான். பொலிவிய நாடு வாங்கிய உலக வங்கிக் கடனுக்கு விளைவாகவே பெக்டெல் நிறுவனத்துக்கு கொச்சபம்பாவின் தண்ணீர் தாரைவார்க்கப்பட்டது.

1999-ம் ஆண்டு அரசு கொச்சபம்பா குடிநீர் வாரியத்தை ஏலம்விட்டது. அதில் கலந்துகொண்ட நிறுவனம் ஒன்றே ஒன்றுதான். பெக்டெல் நிறுவனம். ஏலத்தை வென்ற பெக்டெல் நிறுவனம் போட்ட ஒப்பந்தத்துக்கு எந்தவித எதிர்ப்பும் அரசு தெரிவிக்கவில்லை. மக்களின் கருத்தும் கேட்கப்படவில்லை. நாற்பது வருட குத்தகைக்கு கொச்சபம்பாவின் குடிநீர் வாரியம் பெக்டெல் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. மொத்த நகராட்சியின் குடிநீர் விநியோகத்தையும் அரசு கைகழுவியது.

கொச்சபம்பா நகரத்திலுள்ள எல்லா நீர்நிலைகளுக்குமான உரிமையும், நிலத்தடி நீருக்குமான உரிமையும் தனியார் நிறுவனத்துக்கு சென்றது. வீடுகளுக்குப் பின்னே சொந்த முயற்சியில் உருவாக்கிய கிணறுகளில் நிறுவனம் வந்து மீட்டர்களைப் பொருத்தியது. கிணற்றிலிருந்து இறைக்கப்படும் தண்ணீருக்குக் கட்டணம்! மீட்டரைப் பொருத்துவதற்கும் கட்டணம்! பொலிவியாவின் சட்டப்படி இந்த அநியாயங்கள் எல்லாமும் நியாயமாக்கப்பட்டிருந்தன.

வாழ்க்கைக்கும் தண்ணீருக்குமான கூட்டமைப்பு

கொச்சபம்பாவின் தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிராக முதலில் உள்ளூர் பொறியாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். பயிர்த்தொழிலைச் சார்ந்திருந்த விவசாயிகளும் பின்னர் அணி சேர்ந்தனர். கூட்டங்கள் கூட்டப்பட்டன. கேள்விகள் எழுப்பப்பட்டன. அரசு பொருட்படுத்தவே இல்லை. ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜனாதிபதியும் நகர மேயரும் உயர்ரக மது குடித்தபடி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தனர். குடிநீருக்கான விலை பெருமளவுக்கு உயர்த்தப்படவிருக்கும் தகவல்கள் பரவின. தொழிலாளர் சங்கங்கள், நீர் கூட்டுறவு சங்கங்களெல்லாம் போராட்டத்தில் குதித்தன. `வாழ்க்கைக்கும் தண்ணீருக்குமான கூட்டமைப்பு’ உருவானது.

தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்

கூட்டமைப்பின் தலைவர் ஆஸ்கர் ஒலிவெரா 46 வயதானவர். ஒரு தலைவருக்கான எந்த கம்பீரமும் தென்படாதவர். மிக இயல்பாகத் தெரிவார். ஆலைத் தொழிலாளர்களின் சங்க கூட்டமைப்புக்கு தலைவராக இருந்தவர். மக்களைச் சந்திக்கும் கூட்டத்தில் அவர் பேசும் ஒற்றைவரி மொத்தக் கூட்டத்துக்கும் வலு சேர்க்கும். ``தோழர்களே... இது டேவிட்டுக்கும் கோலியாத்துக்குமான போராட்டமாக மாறியிருக்கிறது. இது, பன்னாட்டு நிறுவனத்துக்கும் ஏழை மக்களுக்கும் இடையேயான போர். அவர்கள் கோலியாத். நாம்தான் டேவிட்.”