Published:Updated:

`இங்கு யாரும் பசியுடன் உறங்கக் கூடாது!’- அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி அறிவிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா வைரஸ் நெருக்கடியால் தொழிலாளர்களும் தினக்கூலிகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே அறியும் வசதியோ அதற்கு மருந்தோ இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கடந்த சில தினங்களுக்கு முன்பு உரை நிகழ்த்தினார் பிரதமர் மோடி. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸானது இந்தியப் பொருளாதாரத்தை பலமாகத் தாக்கும் என்கின்றனர் எதிர்க்கட்சிகள். இதனால் தினக்கூலி பணிக்குச் செல்பவர்களும் நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று சொல்கிறீர்கள். வீடில்லாத மக்கள் எங்கே செல்வார்கள். கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்துள்ளது எனச் சாடுகின்றனர் எதிர்க்கட்சிகள். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியைப் பூட்டிவைக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. அப்படியான நிலை ஏற்பட்டால் அதைச் செய்யவேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் நெருக்கடியால் தொழிலாளர்களும் தினக்கூலிப்பணிக்கு செல்பவர்களும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளோம். இங்கு யாரும் பசியுடன் உறங்கச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. நைட் ஷெல்டர்களில் தங்கியுள்ளவர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவுகள் வழங்கப்படும். கொரோனா நெருக்கடியால் ஏழைகளுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்க விரும்புகிறோம்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மட்டும் 72 லட்சம் பேர் நியாய விலைக் கடையிலிருந்து பொருள்களை வாங்குகிறார்கள். அது நபர் ஒருவருக்கு 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும். இது இலவசமாக வழங்கப்படும். இந்த மாதத்திற்கான முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது. இதனால் 8.5 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள். நாடு முழுவதும் ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவசரத் தேவைக்காகச் சிலர் பயணங்களை மேற்கொள்ளலாம். அதைக் கருத்தில் கொண்டு டெல்லியில் நாளை 50 சதவிகிதப் பேருந்துகள் இயங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு