Published:Updated:

`தீபாவளி சிறப்புக்காட்சிக்கு வசூலித்த பணத்தை திரும்பக் கொடுங்கள்!'-`ஸ்ட்ரிக்ட்' கடம்பூர் ராஜு

``தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து உரியவரிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

``தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எந்தப் திரைப்படத்துக்கும் சிறப்புக்காட்சிக்கு அனுமதியில்லை. `பிகில்' பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கும், தற்போது சிறப்புக்காட்சி அனுமதியை ரத்து செய்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திரைப்படத்துறையில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறினார். இது, விஜய் நடித்த `பிகில்' திரைப்படத்தைக் காண ஆர்வத்துடன் இருந்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

இதனால் சிறப்புக்காட்சிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், உமறுப்புலவர் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில், அரசு விழா நடைபெற்றது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் நடிகர் விஜய் நடித்த `பிகில்' திரைப்படம் மட்டுமல்ல, எந்தத் திரைப்படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், ஊடகங்கள் பிகில் திரைப்படத்தை மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் விடுமுறை தினத்தை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதுவரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

உமறுப்புலவர்  மணி மண்டபத்தில் மரியாதை
உமறுப்புலவர் மணி மண்டபத்தில் மரியாதை

ஆனால், திரையரங்குகளின் உரிமையாளர்கள் அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்துவருவதாக விமர்சனமும் புகார்களும் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில்தான், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

ரசிகர்களும் முதல் காட்சியைப் பார்க்க ரூ.2,000 வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக புகார் கூறுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே சிறப்புக் காட்சிகளுக்குப் பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவற்றை, மீண்டும் உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.

அரசு நலத்திட்ட விழா
அரசு நலத்திட்ட விழா

`அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம்’ என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருத்து கூறியுள்ளனர். அவர்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வது குறித்து முடிவு செய்யப்படவில்லை. அவ்வாறு சிறப்புக் காட்சிகளை திரையிட அரசு அனுமதி வழங்கினாலும், அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டும் அரசு அனுமதி வழங்கும்” என்றார்.