Published:Updated:

‘இங்கு ஏதோ நடக்கிறது; ஆனால் யாருக்கும் தெரியாது’- காஷ்மீரின் நிலையால் கொதிக்கும் ஒமர் அப்துல்லா

ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லா ( ANI )

‘அமர்நாத் யாத்திரைக்காக பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்றுள்ள பக்தர்கள் எவ்வளவு விரைவில் திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவில் திரும்ப வேண்டும்’ என மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சிறப்புச் சட்டப் பிரிவு 35A-வை நீக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவுள்ளது. காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள்’ போன்ற பல்வேறு தகவல்கள் சில நாள்களாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

இந்திய ராணுவப் படை
இந்திய ராணுவப் படை
ANI

இதற்கு ஏற்றாற்போல் காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதிகளில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு புறம் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றுள்ள பயணிகள், அமர்நாத்துக்குச் சென்றுள்ள பக்தர்கள் விரைவாக மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொது மக்களும், அரசியல் தலைவர்களும் குழப்பத்தின் உச்சியில் உள்ளனர்.

தங்கள் மாநிலத்தில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்த காஷ்மீர் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புதல், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களை வாங்குதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் திரும்பி வர டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அமர்நாத் யாத்திரை
அமர்நாத் யாத்திரை
ANI

ஜம்மு- காஷ்மீரை ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது பற்றிப் பேசியுள்ள அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், “ பொதுமக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள். அமர்நாத் யாத்திரையைச் சீர்குலைக்க அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதால் அங்கு அதிக பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க பாதுகாப்பு நடைமுறை மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இன்று பிற்பகல் காஷ்மீர் ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ காஷ்மீரில் என்ன நடக்கிறது? இந்தக் கேள்விக்கான உண்மையான பதில், இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆளுநர் நேற்று என்ன கூறினாரோ அதை இன்றும் அப்படியே மாறாமல் கூறுகிறார். அமர்நாத் யாத்திரை வந்துள்ள மக்கள் ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தொடர்பாக நிச்சயம் மத்திய அரசு அறிக்கை அளித்திருக்கும், அதையும் கூற மறுக்கிறார்கள். ஜம்முவில் என்ன நடக்கிறது என்பதற்கான பதில் எங்களுக்குக் கிடைக்கவேண்டும். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ‘ இங்கு ஏதோ நடக்கிறது. ஆனால் அது பற்றி யாருக்கும் தெரியாது’ எனப் பதில் கூறுகின்றனர்.

ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லா
Twitter/@OmarAbdullah

மத்திய அரசு மௌனம் காத்தது போதும். ஜம்மு நிலைகொள்ளாமல் இருப்பது மாற வேண்டும். அமர்நாத் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதற்கான விளக்கத்தை நிச்சயம் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் பயப்படத் தேவையில்லை என்பதை நாடாளுமன்றம் கூறிக் கேட்க விரும்புகிறோம். 35A சட்டப் பிரிவு தடை தொடர்பாக ஆளுநரிடம் ஆலோசனை நடத்தினேன். அது போன்ற எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என அவர் தெரிவித்துவிட்டார். எதுவும் இல்லை என்ற ஆளுநரின் வார்த்தையை எங்களால் ஏற்க முடியாது. எதுவும் இல்லை என இந்திய அரசு சொல்ல வேண்டும்” எனப் பேசியுள்ளார் ஒமர்.

அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கே காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று முழுதாக தெரியவில்லை என்றால், பொதுமக்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள்!

 ‘இங்கு ஏதோ நடக்கிறது; ஆனால் யாருக்கும் தெரியாது’- காஷ்மீரின் நிலையால் கொதிக்கும் ஒமர் அப்துல்லா

எப்போதோ மவுன்ட் பேட்டன் சொன்னது இன்றும் பொருந்துகிறது -> "ஆகஸ்டு பதினைந்துவரை பாகிஸ்தானே இல்லை. மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதாகக் கையெழுத்திட்டிருந்தால் அதை மறுப்பதற்குக் கூட யாரும் இல்லை. அவர் அப்படிச் செய்யாததே பின்னால் தோன்றிய பிரச்னைகளுக்கு இடம் தந்தது" 1972ல் எழுதப்பட்ட ஒரு ஆனந்த விகடன் மினி கட்டுரையில் காஷ்மீருடன் 'கை கோர்த்த கதை' பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இங்கே க்ளிக் செய்து APPAPPO ஆப்பில் படிக்கலாம்! -> http://bit.ly/HariSingh1972

அடுத்த கட்டுரைக்கு