Published:Updated:

பல்கலைக்கழக மாணவர்களிடம் சிக்கிய மத்திய அமைச்சர்! - போலீஸ் படையுடன் சென்று மீட்ட ஆளுநர்

ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல மாற்ற ஏ.பி.வி.பி முயல்கிறது. நாங்கள் இருக்கும்வரை அது நடக்காது.

பபுல் சுப்ரியோ
பபுல் சுப்ரியோ

கொல்கத்தாவில் ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) சார்பாகக் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருத்தரங்கில் பங்கேற்க மத்திய வனத்துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோ சென்றார். இவர் ஒரு பாடகரும்கூட.

மாணவர்கள் பிடியில் மத்திய அமைச்சர்
மாணவர்கள் பிடியில் மத்திய அமைச்சர்

ஆனால், பல்கலைக்கழகத்தின் வாயிலில் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பபுல் சுப்ரியோவை பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அவர்களை மீறி மதியம் 2.30 மணியளவில் உள்ளே சென்ற சுப்ரியோ, கருத்தரங்கத்தில் உரையாற்றினார். மாலை 5 மணியளவில் வெளியே வந்தபோது அவரை மாணவர்கள் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

பல்கலை வளாகத்திலிருந்து, சுப்ரியோவின் வாகனம் வெளியே செல்ல முடியாத வகையில் தடைகளையும் மாணவர்கள் ஏற்படுத்தினர். சுப்ரியோ மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் மாணவர்கள் கோரினர். மாணவர்களைச் சமாதானப்படுத்த சுப்ரியோ முயன்றார். ஆனால், முடியவில்லை. சுப்ரியோ பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸாரால் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய அமைச்சர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கு எட்டியது.

பபுல் சுப்ரியோ
பபுல் சுப்ரியோ

உடனடியாக, மாநிலத் தலைமைச் செயலரைத் தொடர்பு கொண்ட ஆளுநர் தங்கர், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதோடு, ஆளுநர் நிற்கவில்லை. போலீஸ் படையுடன் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்றார். பல்கலையில், மாணவர்கள் ஆளுநரை காரைவிட்டு இறங்க அனுமதிக்கவில்லை. கடும் போராட்டத்துக்குப் பிறகு, போலீஸார் உதவியுடன் சுப்ரியோ இருந்த காரை நெருங்கிய ஆளுநர், அவரை மீட்டு தன் காருக்குக் கொண்டுவந்தார். தொடர்ந்து இரவு 7 மணியளவில் ஆளுநருடன் மத்திய அமைச்சர் சுப்ரியோ பல்கலை வளாகத்திலிருந்து வெளியேறினார்.

இந்தச் சம்பவம் குறித்து சுப்ரியோ கூறுகையில், ``நான் இங்கே அரசியல் பேச வரவில்லை. பாடகராகவே கருத்தரங்கில் பங்கேற்றேன். இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் என் முடியைப் பிடித்து இழுத்தனர். நான் என்னைத் தொடாதீர்கள் என்று அவர்களை எச்சரித்தேன். மாணவர்கள் மிக ஒழுங்கீனமாக நடந்துகொண்டனர்'' என்றார்.

மாணவர்களை நான் எச்சரித்தும், என்னைத் தொட்டுப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தினர்.
மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ

இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், ``ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல மாற்ற ஏ.பி.வி.பி முயல்கிறது. நாங்கள் இருக்கும்வரை அது நடக்காது'' என்று கொந்தளித்தனர்.