Published:Updated:

மாநில வளர்ச்சி கொள்கைக் குழு எப்படி செயல்படும்? விளக்கும் முன்னாள் திட்டக் குழு துணைத்தலைவர்!

Tamilnadu Chief minister MK Stalin
Tamilnadu Chief minister MK Stalin

முதலமைச்சர் இரண்டு கூட்டங்களுக்குத்தான் தலைமை தாங்குவார். ஒன்று அமைச்சரவைக் கூட்டம். இன்னொன்று இந்தக் கூட்டம். இதிலிருந்தே இந்த அமைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சனையும், முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசனையும், பகுதி நேர உறுப்பினர்களாக பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து ஐ.ஏ.எஸ் (ஓய்வு), டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோரை நியமனம் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஜெயரஞ்சன்
ஜெயரஞ்சன்

1971-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் தலைமையின் கீழ் இது செயல்பட்டது. மாநிலத்தின் வளர்ச்சி குறித்த பரிந்துரைகளை வழங்கிவந்த இந்த அமைப்பு 2020-ம் ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது.

இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த அமைப்பு செயல்பாட்டில் இருந்தாலும் அண்மையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதும் மிகவும் கவனம் பெற்றதாக மாறியிருக்கிறது. இந்த அமைப்பு எவ்வாறு செயல்படும், இதற்கான அதிகாரங்கள் என்ன என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அறிந்துகொள்வதற்காக 2011-2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த சாந்த ஷீலா நாயரிடம் பேசினோம், ``திட்டக் குழுதான் இப்போது மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மாறியிருக்கிறது. இந்த மாற்றம் முந்தைய ஆட்சியிலே நிகழ்ந்ததுதான். மத்திய திட்டக் குழுவை நிதி ஆயோக் (NITI - National Institution for Transforming India) என்று மாற்றும்போது மாநிலத்தில் திட்டக் குழு, மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மாற்றமடைந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் மிக முக்கியமான அங்கமாகச் செயல்படும் இந்த அமைப்பின் தலைவராக முதலமைச்சர் இருப்பதால் இந்த அமைப்பின் ஒவ்வொரு முடிவும் வல்லமை மிக்கதாக இருக்கும்.

ராம.சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்
ராம.சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்

இதன் செயல்பாட்டை பொறுத்தவரை இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தீர்மானமும் வரையறுக்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களையும் தீட்டலாம், பத்து ஆண்டுகளுக்கான திட்டங்களையும் தீட்டலாம், ஓராண்டுக்கான திட்டங்களையும் தீட்டலாம், தொலைநோக்கு திட்டங்களையும் தயாரிக்கலாம். அது முதலமைச்சரின் ஆலோசனைப்படி நடக்கும்.

உதாரணமாக, திட்டக் குழுவில் நான் துணைத் தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய 100 பிளாக்குகளைத் தேர்வு செய்து, அவற்றை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர முடிவெடுத்தோம். அதற்குத் தனியாக நிதி ஒதுக்கித் தந்தார்கள், அதேபோல புதிய திட்டங்களுக்கான பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடும் செய்து தந்தார்கள். அதற்கு முன்பு அப்படிச் செய்தது இல்லை. ஒவ்வோர் ஆட்சியிலும் தேவைக்கேற்ப இந்த அமைப்பின் செயல்பாடு மாறிக்கொண்டே இருக்கும்.

துணைத் தலைவருக்கும், முழுநேர உறுப்பினருக்கும் ஊதியம் வழங்கப்படும். ஊதியத் தொகை என்பது அவர்கள் எந்த அந்தஸ்தில் நியமிக்கப்படுகின்றனர் என்பதைப் பொறுத்தது. நான் தலைமைச் செயலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டதால் அதற்குத் தகுந்தாற்போல் ஊதியம் வழங்கினார்கள். அதுவே அமைச்சர் அந்தஸ்தில் நியமித்தால் அதற்குத் தகுந்தாற்போல் வழங்குவார்கள். இதை மாத ஊதியமாகவும் வழங்கலாம் அல்லது மொத்தமாக ஒரே தொகையாகக் கொடுத்தாலும் கொடுக்கலாம், அதுவும் அரசாங்கத்தின் முடிவுதான்.

பகுதிநேர உறுப்பினர்களுக்கு ஊதியம் கிடையாது. ஆலோசனைக் கூட்டத்துக்கு இவ்வளவு என்று சிறிய தொகை அளிப்பார்கள். இப்போது எப்படி எனத் தெரியவில்லை. இந்த முறை மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் திறமையான நபர்களாக இருக்கின்றனர். அவர்கள் சிறப்பாகச் செயலாற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

டி.ஆர்.பி.ராஜா, ஜோ.அமலோற்பவநாதன்,கு.சிவராமன்
டி.ஆர்.பி.ராஜா, ஜோ.அமலோற்பவநாதன்,கு.சிவராமன்

முந்தைய தி.மு.க ஆட்சியின்போது திட்டக் குழுவில் பகுதிநேர உறுப்பினராக இருந்த தமிழருவி மணியனிடம் பேசியபோது, ``கலைஞர் கருணாநிதி மிகவும் சிந்தித்து மாநில திட்டக் குழுவை உருவாக்கினார். இப்போது மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மாறியிருக்கிறது. `நீங்கள் திட்டக் குழுவில் பகுதிநேர உறுப்பினராக இருக்க வேண்டும்’ என்று கலைஞர் என்னைக் கேட்டபோது, நீங்கள் ஏதாவதொரு வாரியத் தலைவர் பதவி கொடுத்திருந்தால் நிச்சயம் நான் ஏற்றிருக்க மாட்டேன். ஏனெனில், அதில் கரை வேட்டிக்காரர்களுக்கும் கதர் வேட்டிக்காரர்களுக்கும் காரியமாற்ற வேண்டியிருக்கும். அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். ஆனால், இதில் யாருக்கும் சிபாரிசோ, வேறு வகையான விஷயங்களோ செய்ய முடியாது. என் மனம் அறிந்து இந்தப் பொறுப்பைக் கொடுப்பதால் நான் இதை ஏற்றுக்கொள்கிறேன் என்றேன்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் முதலமைச்சரே தலைவராக இருந்தாலும் கூட இந்த அமைப்பின் வாயிலாகத் தனிப்பட்ட வகையில் எந்த ஆதாயமும் அடைய முடியாது. ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு இது. முதலமைச்சர் இரண்டு கூட்டங்களுக்குத்தான் தலைமை தாங்குவார். ஒன்று அமைச்சரவைக் கூட்டம். இன்னொன்று இந்தக் கூட்டம். இதிலிருந்தே இந்த அமைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

தலைவரும் துணைத் தலைவரும் அனைத்து துறை ரீதியாகவும் சிந்தித்துச் செயல்படுவார்கள். உறுப்பினர்களுக்கு அவர்களுக்கு புலமை வாய்ந்த துறைகளை ஒதுக்கி அந்தத் துறை சார்ந்த புதுமையான திட்டங்களை உருவாக்கச் சொல்வார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறை சார்ந்து என்ன புதுமையான விஷயங்களைச் செய்யலாம், என்ன செய்தால் அதை மேம்படுத்த முடியும் எனச் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கக் கூடியவர்களைத்தான் அந்த அமைப்பில் நியமிப்பார்கள். திட்டக்குழுவில் நான் பகுதிநேர உறுப்பினராக இருந்தபோது ஊரகத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உணவுப் பங்கீட்டுத்துறை உள்ளிட்ட துறைகளை நான் கவனித்தேன்.

சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ்
சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ்

எழிலகத்தில் ஐந்தாவது மாடியில் இந்த அமைப்புக்கென தனி அலுவலகம் இருக்கிறது. துணைத்தலைவர், முழு நேர உறுப்பினர், பகுதிநேர உறுப்பினர்களுக்குத் தனித் தனி அறைகள் இருக்கின்றன. அங்கிருந்துதான் திட்டங்களைத் தீட்டுவார்கள். நான் திட்டக் குழுவில் இருந்தபோது துணைத் தலைவராக இருந்த நாகநாதன் இந்த அமைப்பில் புரட்சி செய்தார். `மாநில அளவிலான மக்கள் பிரச்னைகளுக்கு இந்த நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு திட்டமிடுவது எந்த வகையில் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்?’ என்று கேள்வி எழுப்பி வேறொரு முடிவெடுத்தார்.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்துக்கும் சென்று அங்குள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், நகராட்சித் தலைவர், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களிடம் பேசி, அவர்களிடமிருந்து பல்வேறு பரிந்துரைகளைப் பெற்று அந்தப் பரிந்துரைகளையெல்லாம் கொண்டு வந்து பரிசீலனை செய்து அதனடிப்படையில் நாம் திட்டமிட வேண்டும் என முடிவெடுத்து அதை முதன்முறையாக நடைமுறைப்படுத்தியும் காட்டினோம். அதற்கு மிக முக்கிய காரணம் நாகநாதன்தான்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

இப்போது உள்ளவர்கள் அப்படிச் செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம.சீனுவாசன், நாகநாதன் காலத்திலும் திட்டக் குழுவில் இருந்தவர். அவருடைய மாணவர். திறமைசாலி, அற்புதமான மனிதர். அவர் இதில் இருப்பதால் அதேபோல செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இது பொறுப்பான பதவி. ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தால் நாம் மக்களுக்காகப் பல விஷயங்களைச் செய்யலாம். இப்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அனைவரும் திறமையானவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு