Published:Updated:

கனமழையால் மிதந்த சென்னை: `அடுத்த வெள்ளத்துக்கு முன் திமுக அரசு செய்ய வேண்டியது என்ன?' - ஒரு பார்வை!

`அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இதேபோல கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அப்படியானால், மீண்டும் பாதிப்புகள் ஏற்படாதவாறு அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஒரு பார்வை..!'

`சென்னையில் கடந்த ஆண்டுகளைவிட இந்த முறை அதிகளவு மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது' என்கிறது வானிலை ஆய்வு மையம். கனமழை குறித்து முறையாக முன்னெச்சரிக்கை விடுக்கப்படாத சூழலில், அதீத கனமழை பெய்ததை ‘மீசோஸ்கேல் ஃபினோமினா’ (Mesoscale Phenomena) என்கிறது வானிலை ஆய்வு மையம். இந்த மாதிரியான மழையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனக் கூறுகிறது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும், 'சென்னையில் தற்போது பெய்த அதிக கனமழைக்குக் காலநிலை மாற்றமும் மிக முக்கியக் காரணம்' என்கிறார்கள். ``இந்த ஆண்டு அதிக கனமழை பெய்திருக்கிறது என்பது முக்கியமான விஷயமில்லை. இனிமேல் ஒவ்வோர் ஆண்டும் இது சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வாகவே இருக்கும். பத்து ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெய்திருக்கிறது. வடகிழக்கு பருவமழையே தற்போதுதான் தொடங்குகிறது. அதற்குள் ஏரிகள் நிரம்பிவிட்டன" என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

சென்னை கன மழை
சென்னை கன மழை

மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவது தொடர்கதை என்றாலும், ஏன் அதற்கு எந்த அரசும் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் தற்போது மக்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்வி. குறைந்தபட்சம் 2015 வெள்ள பாதிப்புகளுக்குப் பிறகாவது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள். சென்னை உயர் நீதிமன்றமும் இந்தக் கேள்வியை அரசை நோக்கி வீசியிருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இதேபோல கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அப்படியானால், மீண்டும் பாதிப்புகள் ஏற்படாதவாறு அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஒரு பார்வை..!

சென்னை மழை வெள்ள பாதிப்பு; அதிமுகவை கை காட்டி தப்பிக்கப் பார்க்கிறதா திமுக?

சென்னை மாநகருக்குள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

``நான்கு நதிகள், ஐம்பது பெரிய கால்வாய்கள், ஐந்நூற்று நாற்பது சிறிய ஓடைகள் என்பதுதான் சென்னைக்கான வரைபடமாக இருந்தது. இவற்றையெல்லாம் அழித்து நகரமாக ஆக்கியதால்தான் சென்னை ஒவ்வொரு மழைக்காலத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகிறது" என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். மாறி வரும் நகரமயமாதல் சூழலுக்கு ஏற்ப நகரமாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டியதும் தேவைதான் என்றாலும், அதற்கேற்ப மழைநீர் வடிகால்களை வடிவமைக்கப்படுவதில்லை. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. ஆனால், இனிவரும் காலங்களில் சென்னை முழுவதும் முறையாக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். குறைந்த கால இடைவெளியில் அதிக மழைப்பொழிவு இருந்தால், மழைநீர் தேங்கி நிற்கத்தான் செய்யும். ஆனால், அப்படித் தேங்காமல் மழைநீர் வழிந்து போகும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை நகரை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் அரக்கோணம் வரையில் அதை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார்கள். அதை அரசு கைவிட வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகியவற்றைச் சேர்த்தால் நான்காயிரம் நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஆனால், நகரமாக விரிவடையும்போது நீர்நிலைகளையும் நீர் பிடிப்புப் பகுதிகளையும் சேர்த்து ஆக்கிரமிப்பார்கள். நீர் நிலைகளைப் பாதுகாப்பதைப்போல, நீர் பிடிப்புப் பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும். சென்னையில் வேளச்சேரி, மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், புளியந்தோப்பு, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகியிருக்கிறது. அந்த பகுதிகளில் முறையான வடிகால்கள் அமைத்து மழை நீரை கால்வாய்களுக்குள் சென்று சேரும் விதமாகச் சரி செய்யலாம்.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்
Photo: Jerome / Vikatan

சென்னையில் கொசஸ்தலை, அடையாறு, கூவம், கோவளம் உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர் வழித் தடங்களைச் சீரமைக்க வேண்டும். விவசாயப் பகுதிகளில் மேலும் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்காமல் தவிர்க்கலாம். மெரினா கோவளம், பள்ளிக்கரணை, எண்ணூர் எனக் கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவதோடு, நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னைப் புறநகர்ப் பகுதியில் செய்ய வேண்டியவை:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியால் என்றைக்குமே பாதிப்பு வந்ததில்லை. அந்தளவுக்குப் பாசன வாய்க்கால், நீர் பிடிப்புப் பகுதிகள் போன்றவை முறையாக அமைக்கப்பட்டுள்ளதோடு, அவை சரியாகவும் பராமரிக்கப்படுகின்றன. இனிமேலும் அப்படியே பராமரிப்பதோடு, ஆக்கிரமிப்புகள் ஏதும் வராதவாறு நடவடிக்கை எடுக்கலாம். பழைய மாமல்லபுரம் சாலையைப் பொறுத்தவரையில் கொண்டங்கி, தையூர், மதுராந்தகம், களத்தூர் போன்ற ஏரிகளை முறையாகத் தூர்வாரி அதன் முழுக் கொள்ளவை உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். தாம்பரம், வண்டலூர் வழியாக வரக் கூடிய நீர் ஓ.எம்.ஆர் வழியாக பங்கிம்ஹாம் கால்வாய் மூலம் கோவளம், மாமல்லபுரம் ஆகிய முகத்துவாரங்களில் சென்று கடலில் கலக்கின்றன. அதன் நீர்வழித் தடங்களில் இருக்கும் சிறு சிறு ஆக்கிரமிப்புகளை அரசு முறையாக அகற்றலாம். தாம்பரம், சேலையூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகளால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகள்
ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகள்
ஒருநாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! - யார் தவறு... என்ன செய்ய வேண்டும் மாநில அரசு?!

பல கிராமங்களில் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பொதுவாக, ஏரியிலிருந்து தண்ணீர் வர வேண்டும் என்பதற்காகத் தாழ்வான பகுதிகள் தான் விளைநிலங்களாக மாட்டப்பட்டிருக்கும். அதனால், தற்போது அங்கெல்லாம் கட்டப்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. இனி அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பதோடு, கொடுக்கப்பட்டவற்றில் மழைநீர் வடிகால்கள் முறையாக அமைக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டு அதை உறுதி செய்ய வேண்டும்.

மழை பாதிப்பு ஏற்படும் போது மட்டும் அதற்கான தீர்வைத் தேடாமல் வல்லுநர்களோடு ஆராய்ந்து, நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அதை இந்த அரசாவது நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு