Published:Updated:

`மற்ற மாசுக்களைவிட இது மிகப்பெரிய மாசு!'- சோலார் பேனல் வழக்கில் நீதிபதிகள் வேதனை

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டைப் பாதிக்கும் மற்ற மாசுக்களைவிட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசுவாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தமிழகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். இந்த நிலையில், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டமானது மக்களுக்கு உகந்தது இல்லை. இந்தத் திட்டத்தினால் பல்வேறு நோய்கள் பரவும் என சோலார் திட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் வாட்ஸ்அப்பில் பரவத் தொடங்கியது. வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் இத்தகைய தகவல்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கோவையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் இந்த வதந்தியைப் பரப்பியதாக தெரியவந்தது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜாகீர் உசேன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறாக வழிநடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜாகீர் உசேன் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜாகீர் உசேன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜாகீர் உசேன் தரப்பில், ``சோலார் பேனல் திட்டம் தொடர்பாக எந்த உள்நோக்கத்துடனும் தகவல்களை பரப்பவில்லை. எனக்கு வந்த தகவல்களை ஃபார்வேர்டு மட்டுமே செய்தேன்” எனத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``தமிழக அரசுக்கும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல்களைப் பரப்பியுள்ளதால், இந்த விவகாரத்தில் இரக்கம் காட்டக் கூடாது” என வாதிடப்பட்டது.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, ``பேச்சுரிமைக்கான முதல் ஓட்டு என்னுடையதாகத்தான் இருக்கும். ஆனால், பொறுப்பற்ற வகையில் வதந்திகளை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் பரப்பிய அடிப்படை ஆதாரமற்ற தகவல்களால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில், தமிழ்நாட்டை பாதிக்கும் மற்ற மாசுக்களைவிட பொய்யான தகவல்கள் பரப்புவதே மிகப்பெரிய மாசுவாக உள்ளது. சமூக வலைதளங்களில் எந்தவித தார்மீக தகுதியும் இல்லாத நபர்களால் செய்திகள் பரப்பப்படுகிறது. மனுதாரர் தன் தவற்றை உணர்ந்து தான் பரப்பிய தகவல்கள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பரப்பியதாக அதே வாட்ஸ்அப் குரூப்களில் பதிவிட சம்மதித்தால் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” எனக் கூறி இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பின் செல்ல