Published:Updated:

யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள் ( Mohammad Asif Khan )

உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க ராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இத்தனையும் இருந்தும் தாலிபன் படையை வீழ்த்த முடியாமல் அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாலிபன்கள் மீண்டும் தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார்கள். கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையில் கூட்டமாக தாலிபன் வீரர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம், அந்த நாடு இனி என்ன கதிக்கு ஆளாகும் என்பதை உணர்த்துகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் படைகளால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட தாலிபன்கள், வெறும் இருபதே நாட்களில் மீண்டும் தேசத்தைக் கைப்பற்றிவிட்டனர்.
20 ஆண்டுகள் அமெரிக்கா பணத்தைக் கொட்டி பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்த ஆப்கன் ராணுவமும் போலீஸ் படையும் சின்ன எதிர்ப்புகூட காட்டாமல் சரணடைந்துவிட்டன. ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி பதவி விலகி தாஜிகிஸ்தான் நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். ''போரால் காபூல் அழிவதை விரும்பவில்லை. எண்ணற்ற தேசபக்தர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவே இந்த முடிவெடுத்தேன்'' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர்.

அஷ்ரப் கனி
அஷ்ரப் கனி
Rahmat Gul

தலைநகர் காபூலின் எல்லையில் தாலிபன்கள் தடம் பதித்த விஷயம் அறிந்ததும், பல நாடுகளின் தூதரகங்கள் பதற்றமாகிவிட்டன. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் பறந்துவந்து தங்கள் தேசத்தவரையும் தூதரக அதிகாரிகளையும் மீட்டுச் சென்றன.
அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அதிகாரிகளை மீட்டுச் செல்வதற்காக ராணுவ ஹெலிகாப்டர் பறந்த காட்சி, வியட்நாம் போரில் ஏற்பட்ட தோல்வியில் தலைகுனிந்து கடைசி ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க விமானங்கள் திரும்பிய காட்சியை நினைவூட்டின.


ஆம், உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க ராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இத்தனையும் இருந்தும் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தாலிபன் படையை வீழ்த்த முடியாமல் சமாதானம் செய்துகொண்டு அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது.

''ஆப்கானிஸ்தான் மண்ணில் அல்-கொய்தா அமைப்புக்கோ, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கோ புகலிடம் தர மாட்டோம்'' என தாலிபன் அமைப்பு கொடுத்த ஒற்றை உறுதிமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.


ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை வேரறுக்க நடத்தியதே, அமெரிக்கா இதுவரை நடத்தியதில் மிக நீண்ட போர். இதற்காக அவர்கள் செலவழித்தது சுமார் 164 லட்சம் கோடி ரூபாய். கிட்டத்தட்ட இந்தியாவின் ஓராண்டு பட்ஜெட் போல நான்கு மடங்கு தொகை. அமெரிக்கப் படையினர், ஆப்கன் ராணுவத்தினர், அப்பாவி மக்கள் என 20 ஆண்டுகளில் சுமார் இரண்டு லட்சம் உயிரிழப்புகள். இப்போது முன்பைவிட பலம் பெற்று ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். 'இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்' என்று நாட்டுக்குப் பெயரும் கொடுத்துவிட்டனர்.

தாலிபான்
தாலிபான்

ஒரு தேசத்தில் சில தீவிரவாதிகள் இருந்தாலே அது உலகத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறும். ஒரு தேசத்தையே தீவிரவாத அமைப்பு ஒன்று ஆட்சி செய்தால் உலகம் என்ன ஆகும் என்பதற்குப் பாடம் ஆப்கானிஸ்தான். வெறும் ஐந்து ஆண்டுகள்தான் அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர். ஆனால், ஆப்கன் மக்களுக்கும் உலகத்துக்கும் அது கொடுந்துயர் காலமாக இருந்தது. ஆண்களுக்கு தாடியைக் கட்டாயமாக்கி, பெண் கல்வியை ஒழித்து, பெண்கள் பணிக்குச் செல்வதை மறுத்து, டெலிவிஷன் உள்ளிட்ட பொழுதுபோக்குகளைத் தடை செய்து நாட்டை இன்னும் பின்னோக்கிச் செலுத்தியது அந்த ஆட்சி.


கடந்த 20 ஆண்டுகளில் டெக்னாலஜி வளர்ச்சி உலகையே அசுரப் பாய்ச்சலை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இனி தாலிபன்கள் ஆப்கனை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திச் செல்லக்கூடும். இப்போதே அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

தாலிபன்கள்
தாலிபன்கள்
Mohammad Asif Khan

ஆப்கன் கிராமப்புறங்களில் இதுவரை அரசுக்காக வேலை பார்த்த பலரையும் வீடு வீடாகச் சென்று இழுத்துவந்து தண்டிக்கின்றனர் தாலிபன் வீரர்கள். வங்கிகள் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களை, 'இனி நீங்கள் வேலைக்கு வரக்கூடாது' என்று துரத்துகின்றனர். பலர் இளம் பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்வதாகவும் புகார்கள் வருகின்றன. பத்திரிகையாளர்கள், பெண் பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று பலரும் தாக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் தங்கள் ஜீன்ஸைக் கழற்றிப் போட்டுவிட்டு ஆப்கன் பாரம்பரிய உடைக்கு மாறிவருகிறார்கள். ஆம், அங்கே ஜீன்ஸ் அணிவதும் குற்றம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்புக்குப் புகலிடம் தந்து, ஆயுதங்களும் தந்து வளர்த்தது தாலிபன்கள்தான். 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டட கோபுரங்களை விமானங்கள் மூலம் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது அல்-கொய்தா அமைப்பு. வெகுண்டெழுந்தது அமெரிக்கா. தீவிரவாதத்தை வேரறுக்க அமெரிக்கப் படைகள் ஆப்கன் வந்தன. தாலிபன் அரசு வீழ்ந்தது. ஆனால், பின் லேடனும், தாலிபன் தலைவர் முல்லா முகமது ஓமரும் பாதுகாப்பாக பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர்.

தாலிபன்கள்
தாலிபன்கள்
Sidiqullah Khan

தாலிபன் தலைவர் முல்லா முகமது ஓமர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பாகிஸ்தானின் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததையே அந்த அமைப்பு இரண்டு ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்தது. அதன்பின் தலைவரான முல்லா அக்தர் மன்சூரை அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்திக் கொன்றது. இப்போது தலைவராக இருப்பவர், மௌல்வி ஹிபதுல்லா அகுன்ஸடா.


அமெரிக்கா தூவிய விஷ விதை விருட்சமாகி, அவர்களையே பதம் பார்த்ததுதான் தாலிபன் வரலாறு. அமெரிக்காவுக்குத் தோழனாக ஒரு பக்கம் தாலிபனுக்கு எதிரான போரில் உதவிக்கொண்டே, இன்னொரு பக்கம் தாலிபன் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நண்பனாகவும் இருந்தது பாகிஸ்தான்.
தாலிபன்கள் யார்? எப்படி உருவானார்கள்? ஒரு தேசமே அவர்களின் ஆளுமைப் பிரதேசமாக மாறியது எப்படி?

தாலிபான்கள் உருவான வரலாறு நாளை வெளியாகும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு