Published:Updated:

`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்

எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்

எளிமை, மனிதநேயம், நிர்வாகத்திறன், துணிச்சலான செயல்பாடுகளால் தஞ்சை மக்களின் இதயங்களில் நிலையான இடம் பிடித்தவர் இந்த சண்முகம்.

`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்

எளிமை, மனிதநேயம், நிர்வாகத்திறன், துணிச்சலான செயல்பாடுகளால் தஞ்சை மக்களின் இதயங்களில் நிலையான இடம் பிடித்தவர் இந்த சண்முகம்.

Published:Updated:
எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ்

தமிழக முதலமைச்சரின் செயாளர்களில் ஒருவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.எஸ்.சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு பல தரப்பிலிருந்தும் நெகிழ்ச்சியான பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இவர் மிகவும் நேர்மையான அதிகாரி, பாரத் நெட் டெண்டரில் முறைகேடு இருப்பதாக, அந்தக் கோப்பில் கையெழுத்திட மறுத்து திருப்பி அனுப்பினார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இவரைப் பற்றி வெளியுலகுக்கு அதிகம் தெரியாத, நெகிழவைக்கும் சம்பவங்கள் ஏராளம். எளிமை, மனிதநேயம், நிர்வாகத்திறன், துணிச்சலான செயல்பாடுகளால் தஞ்சை மக்களின் இதயங்களில் நிலையான இடம் பிடித்தவர்.

`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்

பத்தாண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், தனது சிறப்பான செயல்பாடுகளாலும் பன்முகத்தன்மையாலும் இப்பகுதி மக்களை வெகுவாக ஈர்த்தவர். அரசு அதிகாரிகள் பெரும்பாலும், தங்களுக்கு உடல்நிலை பிரச்னை என்றால் அரசு மருத்துவமனையின் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால் இவரோ, தன் மனைவிக்கு தஞ்சை அரசு பொது மருத்துவமனையில்தான் பிரசவம் பார்த்தார். அப்போது அவள் விகடன் சார்பில் நேரில் வாழ்த்துச் சொல்லி கட்டுரை வெளியிடப்பட்டது. ``அரசு அலுவலர்கள், கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பயன்படுத்தினால்தான், அங்க வரக்கூடிய மக்களுக்கு என்னென்ன சிரமங்கள் இருக்கு, வேற என்னவெல்லாம் வசதிகள் தேவைங்கிறதை அனுபவபூர்வமாக உணர முடியும். அதிகாரிகள் அங்க சிகிச்சைக்குப் போனால்தான், மருத்துவர்களும் ஊழியர்கள் மேலும் சிறப்பாகப் பணியாற்றுவாங்க’’ என அப்போது தெரிவித்து நெகிழ வைத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கும், ஜெனரல் வார்டுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். பிரசவமான தாய்மார்களை, திறந்தவெளியில்தான் வீல் சேரில் அழைத்துச் செல்வார்கள். வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் அதுதான் நிலை. அதைக் கண்டு நொந்துபோன எம்.எஸ்.சண்முகம், உடனடியாக 14 லட்சம் ரூபாய் செலவில், மேற்கூரையுடன் கூடிய கேரிடார் அமைத்தார்.

அந்தக் காலகட்டத்தில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் கவுன்டரில் மக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் நின்றுதான் மனு கொடுக்க வேண்டிய அவலநிலை. மேற்கூரை கிடையாது. குடிநீர், நாற்காலி வசதிகளும் கிடையாது. எம்.எஸ்.சண்முகம் இங்கு ஆட்சியராக வந்தவுடன், இதற்கான வசதிகளை ஏற்படுத்தியதோடு, கவுன்டர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார்.

`திறமை, துணிச்சல், அன்பு; இந்த மூன்றும் சேர்ந்தால் சண்முகம்!' - முதல்வர் செயலாளரின் அறியா பக்கங்கள்

தஞ்சை வல்லம் பகுதியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த இல்லத்தை நடத்தியவர், மாற்றுத்திறனாளிகளை விரட்டி அடித்துவிட்டு, வெளியில் நன்கொடை மற்றும் பல்வேறு உதவிகளைப் பெற்று அனுபவித்து வந்தார். விரட்டியடிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தஞ்சை கீழவாசல் பகுதியில் கழிவறை சுத்தம் செய்து வாழ்க்கையை நகர்த்தினார்கள். அதில் சிறுமிகளும் இருந்ததுதான் வேதனையின் உச்சம். இந்தத் தகவலை அப்போது எம்.எஸ்.சண்முகத்தின் கவனத்துக்கு ஜூனியர் விகடன் கொண்டு சென்றது. உடனடியாக அந்த இல்லம் சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த மாற்றுத்திறனாளிகள், மூன்று சக்கர சைக்கிள்கூட இல்லாமல் சிரமப்பட்டு வந்தார்கள். உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ததோடு, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக, பைண்டிங் செய்யும் தொழிற்கூடம் அமைத்துக் கொடுத்தார் எம்.எஸ்.சண்முகம். அந்த நிறுவனத்தை இவரே திறந்து வைத்ததோடு, பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு ஆர்டர்களும் பெற்றுத் தந்தார். புத்தாண்டு, பொங்கல், தீபாவளியின்போது பலரும் தனக்கு அளிக்கும் அன்பளிப்புகளை, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிடுவார்.

பாபநாசம் அருகில் உள்ள தேனாம்படுகை கிராமத்தில் ஓர் அணை சிதிலமடைந்து கிடந்தது. ஊர்மக்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும், அந்த அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இதை அப்போதைய ஆட்சியர் எம்.எஸ்.சண்முகத்தின் கவனத்துக்கு பசுமை விகடன் கொண்டு சென்றது. அந்த அணையை நேரில் பார்வையிட்டதோடு, பல லட்சம் ரூபாய் செலவில், உடனடியாக அதைச் சீரமைத்துக் கொடுத்து, அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் எம்.எஸ்.சண்முகம். விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். தஞ்சைக்கு எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் ஆட்சியராக வந்தவுடன், ``விவசாயிகளுக்கான கூட்டத்துல போலீஸ் எதுக்கு? உங்களோட நேரமும் வீணடிக்கப்படுது. நீங்க சட்டம் ஒழுங்கு பணிகளை கவனிக்கப் போகலாம்’’ என அன்பாகக் கூறி காவல்துறையினரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

குறைதீர்க்கும் கூட்டங்களின்போது, விவசாயிகளிடம் அன்பாகப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்தார். ``கலெக்டர் ஆபீஸுக்கு வந்து உங்களோட நேரத்தை வீணடிக்காதீங்க. எதுவாக இருந்தாலும் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க. உங்களோட பிரச்னைகள் கண்டிப்பாகத் தீர்க்கப்படும்'’ என விவசாயிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். விவசாயிகளில் சிலர் பயிர் இன்ஷூரன்ஸுக்கு காப்பீடு செலுத்த முடியாத நிலையில் இருந்தார்கள். ``இந்த வருஷம் கண்டிப்பா மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்க வாய்ப்புகள் அதிகம். இப்போதைக்கு உடனடியா, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள், உங்க பணத்தைப் போட்டு ப்ரீமியத்தைக் கட்டிடுங்க. பின்னாடி இந்தப் பணத்தை விவசாயிகள் கொடுத்துடுவாங்க’’ என விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டினார்.

மனிதநேயத்தால் மட்டுமல்ல... அதிரடியான செயல்பாடுகளாலும் விவசாயிகளைப் பெரிதும் ஈர்த்தவர். மழை, வறட்சி நிவாரணம் வழங்குவதில் முறைகேடுகள் செய்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். நெல் கொள்முதல் நிலையங்களில் நடந்த முறைகேடுகளை, தன்னால் இயன்றவரை கட்டுப்படுத்தினார். பட்டுக்கோட்டை பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மணல் திருட்டுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்.

பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள், அந்தப் பகுதியில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகரை அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், எம்.எஸ்.சண்முகமோ, தனது பதவிக்கேற்ற கண்ணியத்தோடு நடந்துகொண்டார். 2010-ம் தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற எம்.எஸ்.சண்முகத்தின் கடுமையான உழைப்பும் நிர்வாகத்திறணும் முக்கியக் காரணங்கள். இதனால் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பாராட்டு பெற்றார். தஞ்சை பெரியகோயில் முன்பு தலையாட்டி பொம்மைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள், சாலையில்தான் கடை அமைத்திருந்தார்கள். இதனால் பலவித இன்னல்களுக்கு ஆளானார்கள். இவர்களுக்காக கோயிலின் எதிரில் நிரந்தமாக இடம் அமைத்துக் கொடுத்து, வியாபாரிகளை நிம்மதி அடையச் செய்தார்.

2011-ம் ஆண்டு தானே புயலில் கடலூர் மாவட்ட கிராமங்களுக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான சிறப்பு அதிகாரிகளாக ககன்தீப் சிங் பேடியும், எம்.எஸ்.சண்முகமும் நியமிக்கப்பட்டார்கள். படகில் பயணம் மேற்கொண்டு, அப்பணிகளை வெற்றிகரமாகச் செய்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

பெரியகோயில்
பெரியகோயில்

2018-ம் ஆண்டு கஜா புயல் பாதிப்பு... புதுக்கோட்டை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அதிகாரியாகச் சென்ற எம்.எஸ்.சண்முகம், வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து தன்னம்பிக்கை வார்த்தைகளால், அவர்களுக்கு தெம்பூட்டினார். கடந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம், தனித்துவமான, துடிப்பான செயல்பாடுகளால் பலதரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றார். தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவர்களுக்கு உரிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் அளித்தார்.

திருவாரூர் மாவட்ட அரசுப் பொதுமருத்துவமனையில் ஒரே கட்டடத்தில் கொரோனா வார்டும், பிரசவ வார்டும் அடுத்தடுத்த தளங்களில் இருந்ததைக் கண்டு எம்.எஸ்.சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். ``வேற இடமில்லை’’ என கல்லூரி முதல்வர் சொன்னதும், மருத்துவக்கல்லூரி முழுவதும் சுற்றி வந்தவர், ``செமினார் ஹால் சும்மாதானே கிடக்குது’’ எனச் சொல்லி அதை உடனடியாக கொரோனா வார்டாக மாற்றினார்.

இதுபோல் நெகிழவைக்கும் சம்பவங்கள் இன்னும் ஏராளம். மக்களின் நெஞ்சில் நிறைந்த இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்போது முதலமைச்சரின் செயலாளராக உயர்ந்திருப்பதில், தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகிறார்கள் அவரால் பயன்பெற்ற மக்கள்.