Published:Updated:

அதிகரிக்கும் எண்ணிக்கை... மூடப்படும் கோயம்பேடு சந்தை! சென்னையின் தேவை என்ன? #ChennaiUpdate

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே தலைநகர் சென்னையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றும் புதிய உச்சத்தைத் தொட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் மாவட்டங்களின் பட்டியலில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. நேற்றைக்கு முன்தினமான மே 3-ம் தேதி வரை சென்னையில் 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டடிருந்தது. நேற்றைக்கு (மே 4) மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் மூலமாக, சென்னையின் எண்ணிக்கை தற்போது 1,724 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

சென்னையைப் பற்றி சொல்லும்போது, கடலூரையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து சென்றவர்கள் மூலமாக கடலூரிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு, நேற்று முந்தைய தினம் (மே 3) வரை வெறும் 39 ஆக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இருந்தது. நேற்று (மே 4) மட்டுமே, ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், கடலூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 161 ஆக அதிகரித்தது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து சென்றவர்கள்.

சென்னையில், ஒரு வாரத்தில் மட்டுமே 935 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில், ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் என இருந்த எண்ணிக்கை, கடந்த இரண்டு நாள்களாக 200-ஐத் தாண்டியிருக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் நிர்வாக ஆணையரான ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஎஸ், ``சென்னையில், வரும் நாள்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்காக அச்சப்பட வேண்டாம். ஏனென்றால், பரிசோதனையை அதிகரித்திருப்பதால், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயரத்தான் செய்யும்” என்று கூறியிருந்தார்.

காவல்துறையினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
காவல்துறையினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அவர் சொன்னபடியே தற்போது எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பரிசோதனைகளை அதிகரித்துள்ளார்களே தவிர, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இன்னும் அதிகாரிகள் கோட்டைவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னணி செயல்வீரர்களாக இருக்கும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோரின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்துவருகிறது. சென்னையில் காவல்துறை துணை ஆணையர் ஒருவர் உள்பட காவல்துறையினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. தூய்மைப்பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவுதான் கத்தினாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாகவே இருக்கிறார்கள். `கன்டெய்ன்மென்ட் ஏரியா’ என்று குறிப்பிடப்படும் திரு.வி.க நகர் பகுதியில், குப்பை அள்ளும் வாகனங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் தூய்மைப்பணியாளர்கள் அழைத்துவரப்படும் காட்சியை இப்போதும் பார்க்கமுடிகிறது. கையுறைகளும், முகக்கவசங்களும் இல்லாமல் தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றுவதை திரு.வி.க நகர் பகுதியில் சர்வ சாதாரணமாகப் பார்க்கமுடிகிறது.

இதுகுறித்து தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``சென்னை நகரில், கடந்த நான்கு நாள்களாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல இருக்கிறது. திரு.வி.க நகர், ராயபுரம் மண்டலங்களில் உள்ள 30 வட்டங்கள் மற்றும் கோயம்பேடு வட்டம் ஆகியவற்றை மிக ஆபத்தான வட்டங்களாக அறிவித்து, அவற்றுக்கு தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்காதது ஏன்?

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

காரணம், இந்த வட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சில மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். உதாரணமாக, 77-வது வார்டில் மட்டும் 149 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில், மண்டல வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று பிரிப்பதை, வட்ட வாரியாகச் செய்தால், மைக்ரோ பிளானிங் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருக்கும்” என்றார் மா.சுப்பிரமணியன்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ``தமிழகத்தில் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுக்க ஆரம்பித்துவிட்டது. அதனால்தான், அகில இந்திய அளவில் கொரோனா தாக்கத்தில் 2-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இப்போது 7-வது இடத்துக்குப் போயுள்ளது. சென்னையில், கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்கு சில காரணங்கள் உள்ளன.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இங்கு, 22 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஐந்து மாவட்டங்களில் வசிக்கக்கூடிய அளவுக்கான மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். பல பகுதிகளில் மக்கள் அடர்த்தியாக வசிக்கிறார்கள். ஆரம்பத்திலேயே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளோம். இப்போது ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன் உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது” என்றார்.

கோயம்பேடு காய்கறிச் சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆவடியை அடுத்த திருமழிசையில் காய்கறிச் சந்தை திறக்கப்படும் என்கிறார்கள். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில், வரும் 7-ம் தேதியிலிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.

டாஸ்மாக் மதுபானக் கடை
டாஸ்மாக் மதுபானக் கடை

இதுகுறித்து உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, ``அரசால் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படியே எடுக்கப்படுகின்றன. ஊரடங்கைத் தளர்த்தியுள்ள அதே நேரத்தில், சிவப்பு மண்டலங்களில் எந்தவொரு தளர்வும் இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்” என்றனர்.

என்னவோ போங்க சார்!

அடுத்த கட்டுரைக்கு