Published:Updated:

`இ-பாஸ் பெற என்னென்ன செய்ய வேண்டும்.. எது தவறு?' - தேர்வுக் குழு ஆலோசகர் விளக்கம்

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

முழு ஊரடங்கு நெருங்கும் இந்நேரத்தில், `இ-பாஸ்' கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில், இ-பாஸ் பெறுவதற்கான சரியான வழிமுறைகளை சுட்டிக்காட்டுகிறது இந்தக் கட்டுரை.

கொரோனா நோய்த் தொற்றின் தலைநகரமாக உருமாறி நின்று மிரட்டுகிறது சென்னை. ஊரடங்கு தளர்த்தப்பட்டு, போக்குவரத்து ஆரம்பித்ததும் `இ-பாஸ்' வாங்கியாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்ற எண்ணியிருந்தவர்களுக்கு, இடியாக வந்திறங்கியிருக்கிறது `மீண்டும் 12-நாள் முழு ஊரடங்கு' அறிவிப்பு.

தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும், பிழைப்புதேடி சென்னை வந்திறங்கிய மக்களையெல்லாம் வாழவைத்த சென்னை, இப்போது வந்தோரையெல்லாம் வழியனுப்பி வைக்கும் சென்னையாக மாறியிருக்கிறது. கோடியை நெருங்கும் சென்னையின் மக்கள் தொகையும் அதன் அடர்த்தியும், கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பணியில் மிகுந்த சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தின் பிற மாவட்டங்கள் எல்லாம், நோய்த் தொற்றிலிருந்து மீண்டு பச்சை மண்டலமாக மாறிவரும் நேரத்தில், சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என புறநகர்ப் பகுதிகளும் சிவப்பு மண்டலமாகவே அச்சமூட்டி வருகின்றன. இதையடுத்தே, `வருகிற 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலாக 12 நாள்களும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.

சென்னை - சிவப்பு மண்டலம்
சென்னை - சிவப்பு மண்டலம்

இதற்கிடையில், `தோ கிலோமீட்டர்' பாணியில், தொடர்ந்துகொண்டே செல்லும் ஊரடங்கில், வருமானமின்றி வறுமையில் வாடிவரும் வெளியூர்வாசிகள் சொந்த ஊர் செல்லமுடியாமல் திண்டாடி வருகின்றனர். பைக், ஆட்டோ, கார் என கிடைத்த வாகனத்தில் தொற்றிக்கொண்டு தப்பித்தால் போதும் என சென்னையைவிட்டு சொந்த ஊர் கிளம்பிச் செல்பவர்களையும், வழியிலேயே தடுத்து நிறுத்தி திரும்பவும் சென்னைக்குள்ளேயே அனுப்பிவைக்கிறது காவல்துறை.

இந்த நிலையில், `இ-பாஸ்' பெற்று, ஊர் திரும்பலாம் என இணையத்தில் விண்ணப்பிப்போருக்கும்கூட பாஸ் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அவசர மருத்துவ உதவி, திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மற்றும் வெளியூரில் சிக்கித் தவிப்போர் என அத்தியாவசியத் தேவைகளுக்காக ஊர் திரும்புவோருக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா எனும் கொடிய நோய்ப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக அரசு விதித்திருக்கும் இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் வரவேற்கத்தக்கது. அதேசமயம், வேலைவாய்ப்புக்காகவும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் `இ-பாஸ்' பெற நினைக்கும் எளிய மக்களுக்கு அரசின் விதிமுறைகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

மேலும், இணைய வழியில் `இ-பாஸ்' அனுமதி பெறும் வழிமுறைகளை அறிந்திராத எளிய மக்களும்-மூத்த குடிமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மின்னனு சேவை மையங்களை நாடும் இவர்கள், `இ-பாஸ்' இணையதள சேவையைப் பெறும் முயற்சியில், சரியான விவரங்களைக் கொடுப்பதில் ஏற்படும் தவறுகளால்தான் பாஸ் கிடைப்பதில் பல்வேறு தடங்கல்களும் காலதாமதமும் ஏற்படுகின்றன என்கிறது அரசுத் தரப்பு.

பொதுப் போக்குவரத்து இல்லாத சூழலில், அதிக கட்டணம் கொடுத்து தனியாக வாகன வசதியை ஏற்படுத்திக்கொண்டு ஊர் திரும்ப நினைப்பவர்களுக்கு இந்த பாஸ் நடைமுறை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியைத் தவிர்க்கும்பொருட்டு, போலியான `இ-பாஸ்'களைப் பெற்றாவது ஊர் திரும்பிவிடலாம் என்ற முடிவில், ஆங்காங்கே சிலர் முறைகேடுகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, அதிக கட்டணம் வசூலித்துவரும் வாடகைக் கார் நிறுவனங்கள், பயணம் செய்ய விரும்பும் நபர்களுக்கான `இ-பாஸ்'களை பெற்றுத்தரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில், வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர் `சென்னையிலிருந்து நோயாளி ஒருவரை அழைத்துவர வேண்டும்' என போலியான மருத்துவ சான்றிதழைக் கொடுத்து இ-பாஸ் பெற முயற்சி செய்துள்ளார். இந்த முறைகேடு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

இதேபோல், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், `கடலூரில் தனக்குத் திருமணம் நடைபெறவிருப்பதால், இ-பாஸ் தரவேண்டும்' எனக்கோரி விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் குறிப்பிட்டுள்ள கடலூர் முகவரிக்குச் சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், அப்படியொரு திருமண விழா ஏற்பாடுகளுக்கான எந்தவித அறிகுறியும் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண் கொடுத்துள்ள ஆவணங்களைப் பரிசோதித்ததில், அந்த திருமண அழைப்பிதழே போலியாகத் தயார் செய்யப்பட்டிருக்கிறது என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இ-பாஸ் விண்ணப்பிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன, எளிமையான முறையில் இ-பாஸ் கிடைக்க அரசுத்தரப்பில் என்னென்ன வழிமுறைகள் கையாளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுகின்றன.

இதையடுத்து, தமிழக அரசின் இ-பாஸ் விண்ணப்பத்துக்கான இணையதள மென்பொருளை வடிவமைத்தவரும், விண்ணப்பங்களைத் தேர்வு செய்யும் குழுவினருக்குத் தேவையான ஆலோசனை உதவிகள் அளித்துவருபவருமான வெர்டேஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வசந்த்திடம் பேசினோம்...

``இ-பாஸ் விண்ணப்பிப்பதில், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ரொம்பவும் எளிமையான முறையில் இந்த இணையதள பக்கத்தை வடிவமைத்திருக்கிறோம். விண்ணப்பத்தில் எல்லா கேள்விகளுமே ஆங்கிலம் மற்றும் தமிழில் இருப்பதால், எளிதாகப் புரிந்துகொண்டு விண்ணப்பிக்க முடியும். அதனால்தான், இதுவரையிலும் தமிழ்நாடு முழுக்க 25 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு இ-பாஸ் இணையதளத்துக்கு வந்து, பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. இதில், குறைந்தபட்சம் 10 லட்சம் பாஸ் வரையிலும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்திய அளவில் ஒப்பிடும்போது இது அதிகப்படியான எண்ணிக்கை.

ஏனெனில், மத்திய அரசு உருவாக்கியுள்ள இ-பாஸ் இணையதளத்தை தமிழ்நாடு தவிர்த்து 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பயன்படுத்திவருகின்றன. ஆனால், இத்தனை மாநிலங்கள் ஒன்றுசேர்ந்து பயன்படுத்தியும்கூட, இதுவரையில் அந்த இணையதளம் வழியே மொத்தம் 32 லட்சம் விண்ணப்பங்கள்தான் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தமிழ்நாடு அரசு தரப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இ-பாஸ் இணையதள பக்கம், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் எளிமையாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறதுதான்.

`நள்ளிரவுவரை நீடித்த கைகலப்பு; கற்களால் தாக்குதல்!’- #GalwanValley-யில் என்ன நடந்தது?
வசந்த்
வசந்த்

ஆனாலும்கூட, `இ-பாஸ் கிடைப்பது இல்லை' என்று பொதுமக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள் என்றால், அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அவசியத் தேவையின்றி வெளியூர் பயணங்களை மேற்கொள்வோருக்கு, பாஸ் வழங்கப்படமாட்டாது. அடுத்தததாக, பயணிப்பதற்கான அவசியம் இருப்பவர்களும்கூட, அதற்கான உரிய சான்றிதழை இணைக்காவிட்டாலும் அவர்களுக்கும்கூட பாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

அதாவது, விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை அறிந்து, அனுமதி வழங்குவதற்காகவே மிகப்பெரிய அளவிலான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக ஒரு நாளில் ஒரு மாவட்டத்திலிருந்து மட்டும் 2,000 விண்ணப்பங்கள் வந்து சேருகின்றன. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 50,000 விண்ணப்பங்கள் வரையிலும் வருகின்றன. இந்த விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை மாவட்டம்தோறும் உள்ள குழுக்கள் பரிசீலித்து உறுதி செய்தபிறகே, அரசின் அனுமதி அளிக்கப்படுகிறது.

எனவே, விண்ணப்பத்தில் கேட்டுள்ளபடி முறையாக பூர்த்திசெய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பித்தால், உடனடியாக இ-பாஸ் கிடைத்துவிடும். உண்மையிலேயே ஒருவர் நோயுற்றிருந்து அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால், அவரும்கூட தான் வெளியூர் சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியத்தைக் குறிப்பிடுகிற உரிய மருத்துவப் பரிந்துரைக்கான சான்றிதழை இணைக்க வேண்டும். மாறாக, வேறு ஏதேனும் ஒரு மருத்துவச் சீட்டை இணைத்திருந்தால் அந்த விண்ணப்பத்துக்கான அனுமதி மறுக்கப்படுகிற சூழல் ஏற்படலாம். எனவே, விண்ணப்பிப்போர்தான் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

திருமணம் மற்றும் இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்ல அனுமதி கேட்டு வரும் விண்ணப்பங்களையும் தொடர் கண்காணிப்புடன் அதிகாரிகள் பரிசோதிக்கிறார்கள். அண்மையில் போலியான சான்றிதழ்களை இணைத்து இ-பாஸ் பெற முயன்றவர்களைக் கண்டுபிடித்து, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு, இந்தளவு உறுதிகாட்டுவதால்தான் நோய்த்தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. எனவே, சூழலைப் புரிந்து அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

எனவே, மீண்டும் சொல்கிறேன்... இ-பாஸ் பெறுவதற்கு உரிய தகுதியுடையோர் முறையாக விண்ணப்பித்தாலே போதும்... பாஸ் கிடைத்துவிடும். மாறாக, `பணம் கொடுங்கள்... நாங்கள் பாஸ் ஏற்பாடு செய்துதருகிறோம்' என்று கூறுபவர்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம்'' என்கிறார் எச்சரிக்கையோடு.

இந்த நிலையில், முழு ஊரடங்கு காலகட்டம் நெருங்கிவரும் இந்நேரத்தில், `இ-பாஸ்' வழங்குவதில் உள்ள நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்படுமா என்ற கேள்வியை வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது,

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

``ஊரடங்கு என்பதே மக்கள் வெளியே வரக் கூடாது என்பதற்காகத்தான் பிறப்பிக்கப்படுகிறது. ஆனாலும்கூட, அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் சரிவர கடைப்பிடிக்காததால்தான் இப்போது மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

இந்தச் சூழலிலும்கூட அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிப்பவர்களுக்கென அரசு சில தளர்வுகளை அறிவித்திருக்கிறது. ஆனால், இந்த அனுமதியையே தவறாகப் பயன்படுத்திக்கொண்டு வெளியூர் பயணம் மேற்கொள்வோருக்குத்தான் இ-பாஸ் மறுக்கப்படுகிறது.

சென்னையில் மொத்தம் 85 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இவர்களில் தினம்தோறும் சென்னையை விட்டு வெளியே சென்றுவருவதற்காக ஒரு லட்சம் பேர் வரையிலும் முயற்சி செய்கிறார்கள். அதாவது வேலை, வியாபாரம் மற்றும் அத்தியாவசிய தேவை என அவரவருக்கான காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால், இவற்றில் அவசர மருத்துவச் சிகிச்சை போன்ற தகுந்த காரணங்களைச் சொல்வோருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுவருகிறது. கேட்கிற அனைவருக்குமே பாஸ் வழங்கிவிட்டால், முழு ஊரடங்கு என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

தற்போது, முழு ஊரடங்கை முன்னிட்டு நமது முதல்வர் சில தளர்வுகளை அறிவித்து விளக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றைத் தவிர்த்து வேறு எதற்கும் அனுமதி கிடையாது!'' என்கிறார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு