Published:Updated:

`உன்னை நேரில் சந்திக்கணும்..!' - பிறந்தநாளன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

பிறந்தநாளில் தன்னைச் சந்திக்க மறுத்த முன்னாள் மனைவியை ஆட்டோவிலிருந்து வெளியில் இழுத்துப் படுகொலை செய்த கணவனை போலீஸார் கைதுசெய்தனர்.

மும்பை, செம்பூர் வாஷி நாக்காவில் வசிப்பவர் அக்‌ஷய் அதாவாலே (25). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் அகான்ஷா (22) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அகான்ஷா தாராவி மருத்துவமனை ஒன்றில் வேலை செய்துவந்தார். காதலித்து திருமணம் செய்த தம்பதி இடையே விரைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். ஆனால், அகான்ஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அக்‌ஷய் சந்தேகப்பட்டார்.

எனவே, அகான்ஷா எங்கு சென்றாலும், அவரைப் பின்தொடர்ந்து கண்காணித்துவந்தார். இந்த நிலையில், அகான்ஷாவின் பிறந்தநாளில் அவரைச் சந்திக்க வேண்டும் என்று அக்‌ஷய் விரும்பினார். இதற்காக அகான்ஷாவிடம், ``உன்னை நீல் சந்திக்க வேண்டும்" என்று மெசேஜ் அனுப்பினார். ஆனால் அதற்கு அகான்ஷா பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பல முறை மெசேஜ் அனுப்பியும் பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த அக்‌ஷய், அகான்ஷா ஆட்டோவில் வேலைக்குச் சென்றபோது அவரை பைக்கில் பின்தொடர்ந்து சென்றார்.

கொலை செய்யப்பட்ட அகான்ஷா
கொலை செய்யப்பட்ட அகான்ஷா

ஆட்டோ ராகுல் நகர் அருகே சென்றபோது, ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினார் அக்‌ஷய். உடனே ஆட்டோவை நோக்கி விரைந்து சென்றவர், ஆட்டோவில் இருந்த அகான்ஷாவை வெளியில் இழுத்து, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து பைக்கில் தப்பித்துச் சென்றுவிட்டார். தகவலறிந்து விரைந்த போலீஸார், அகான்ஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துபோனார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளி அக்‌ஷயை தேடிக் கண்டுபிடித்து கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது

80 வயது மனைவியைக் குத்திக் கொலை செய்து எரித்த 84 வயது கணவர்! - மும்பை பயங்கரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு