இந்தியர் ஒருவர் நைஜீரியரின் வீட்டுக்குச் சென்ற போது அவருக்கு பெரும் அதிர்ச்சி; அந்த வீட்டில் வாழ்வதற்கு தேவையான பொருள்கள் என எதுவுமில்லை. வீட்டில் பெரிய டிவி மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. சிறு தயக்கத்துடன் அந்த இந்தியர், ”உங்கள் வீட்டில் ஒரு மெத்தை படுக்கை கூட இல்லை, ஆனால், இவ்வளவு பெரிய டிவியை வைத்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே?!” என நைஜீரியரிடம் கேட்க, அந்த நைஜீரியர், ”மெத்தை படுக்கை இந்த வீட்டுக்குள் மட்டும்தான் எங்களை சொகுசாக இருக்க வைக்கும்... ஆனால், டி.வி இந்த உலகத்தையே சுற்றிக் காட்டும்” என்று பதிலளித்தார். ஆம், அவர் கூறியதில் பெரும் புரட்சி கலந்த அர்த்தம் ஒளிந்திருக்கிறது. நாமும் இந்தக் கட்டுரை மூலம் நைஜீரியாவை சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்...

பழங்குடிகளால் பல நூற்றாண்டு காலமாக நைஜீரியா ஆளப்பட்டு வந்தது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் நைஜீரியாவில் முதன்முதலாக கால்பதித்த ஐரோப்பியர்கள் அங்கு வர்த்தக நிலையங்களை நிறுவத்தொடங்கினர். அங்கிருந்த மக்கள் ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் அனுப்பப்பட்டனர். சகோதர பாசம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எல்லோரும் அடிமைகளாக ஏற்றுமதி செய்யப்பட்டனர். மறுபக்கம் இவர்கள் துணி வியாபாரம் செய்தனர்.
ஐரோப்பியர்கள் விற்கும் துணி சிவப்பாக இருப்பதை பார்த்து, அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் ரத்தத்திலிருந்துதான் ஐரோப்பியர்கள் சிவப்பு சாயங்களை தயாரிப்பதாக நினைத்தார்கள் நைஜீரியர்கள். அடிமைகளாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடிகளை கடந்தது. ஒரு காலகட்டத்தில் இளம் உழைப்பாளிகளை அங்கு காண்பதே அரிதாக இருந்தது. இதனால் நாடும் மிகுந்த வீழ்ச்சியைக் கண்டது.
நைஜீரியாவில் கிடைக்கும் பெட்ரோல் சிறப்பு வாய்ந்தது. அதை, 'இனிப்பு பெட்ரோல்' என்று அழைத்தார்கள். காரணம் அங்குள்ள பெட்ரோலியத்தில் சல்பர் இல்லை. பெட்ரோலிய பொருளாதரத்தில் நாட்டின் அதிகாரிகள் கொழித்தபோதிலும் பொது மக்கள் தொடர்ந்து ஏழ்மையில் இருந்தனர்.
நைஜீரியாவில் கால்பதித்த பிரிட்டிஷ் ஒரு காலக்கட்டத்தில் உள்ளூர் தலைவர்களை வைத்து அங்கு ஆட்சி செய்ய ஆரம்பித்தது. பின் தன்னுடைய நேரடி ஆட்சியை அங்கு நடத்தியது. 60 வருடங்கள் ஆட்சியைத் தொடர்ந்தது. அடிமைகளாக இருந்த நைஜீரியர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். 1960-ல் நைஜீரியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. முதல் பிரதமராக அபூபக்கர் பலேவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்திரம் பெற்ற பின்னும், அரசுக்கெதிராக தொடர் போராட்டங்கள். அபூபக்கர் கொலை செய்யப்பட்டார். ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. வெயிலுக்குப் பயந்து, தீயில் விழுந்த கதையாய் உள்ளூர் ஆட்சியாளர்களின் கையில் மாட்டிக்கொண்டு தவித்தது நைஜீரியா.
நைஜீரியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்தான் அதிகம். தெற்குப் பகுதியில் கிறிஸ்தவர்களும், மேற்குப் பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்து வந்தனர். இந்தச் சமயத்தில், முஸ்லிம்களின் கீழ் வாழ விரும்பாத கிறிஸ்தவர்கள் தனி நாடு கோரி போராட்டத்தைத் தொடங்கினர். விளைவு, தனிநாடு அல்ல; பல்வேறு மரணங்களே. தனிநாடு கோரியவர்கள் சரணடைந்தனர்.
2000-ம் ஆண்டு வட நைஜீரிய முஸ்லிம் மாநிலமொன்று ஷரியா சட்டத்தை கொண்டு வந்தது. இதனையடுத்து, நைஜீரியா சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. மேற்கத்திய நாடுகள் இதனை எதிர்த்தது. நைஜீரிய முஸ்லிம்களுக்கு பெரும் குழப்பம். பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு கொண்டு வரும் ஷரியா சட்டத்தை ஏன் இவர்கள் எதிர்க்க வேண்டும்?!
மேற்கத்திய கலாச்சாரத்தால், நைஜீரியாவில் நிகழும் பெரும் குற்றங்களை கட்டுப்படுத்தவே ஷரியா சட்டம் கொண்டு வரப்பட்டது. மேற்கத்திய எதிர்ப்பிற்கு, நைஜீரிய முஸ்லிம்கள் எதிர்வினையாற்றினர். ஒசாமா பின் லேடன் பெயரைச் சொல்லிப் போராடினர். (இப்போதும் ஓசாமாவை கொண்டாடுகின்றனர்)
போகோ ஹராம் (Boko Haram)
இந்தச் சூழ்நிலையில், 2002-ம் ஆண்டில் போகோ ஹராம் (Boko Haram) என்ற அமைப்பை முஹம்மது யூசுப் என்பவர் உருவாக்கினார். அது என்ன போகோ ஹராம்? வித்தியாசமான பெயராக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். இதன் அர்த்தம் ”மேற்கத்திய கல்வி முறை ஒரு பாவம்” என்பதாகும். நீங்கள் நினைப்பது சரி, மேற்கத்திய கலாசாரங்களை ஒழிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியது இந்த அமைப்பு. சிறிய பகுதிகளில் செயல்பட்ட இது, பின்னர் மிகப்பெரிய அளவில் உருப்பெற்றது. ஷரியா சட்டத்தை அமல்படுத்த பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர். பின்பற்றாதவர்களை கட்டாயப்படுத்தி பின்பற்ற வைத்தனர்.

போகோ ஹராம் இயக்கத்தை முகம்மது யூசுப் தொடங்கினாலும், அந்த இயக்கத்தின் தளபதி அபூபக்கர் ஷெக்காவ் (Abubakar Shekau) அளவுக்குப் அவரால் புகழ்பெற முடியவில்லை. 2009-ல் நடைபெற்ற ஒரு தாக்குதலில் முகம்மது யூசுப் இறந்து போக, தலைமைப் பொறுப்பிற்கு அபூபக்கர் ஷெக்காவ் வந்தார்.
2014-ல் ஒரு பள்ளியில் நுழைந்து 300 மாணவிகளை போகோ ஹராம் அமைப்பு கடத்தியது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, இந்த செயல்பாடுகளுக்குப் பின், அமெரிக்கா இருப்பதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தான் ஷெக்காவ் தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் வெளிவந்தது.
எண்ணெய் வளம், மதம் இரண்டும் இருக்கும் இடத்தில் மூன்றாவதாக அமெரிக்கா இருக்கும் என்பது பொதுவான பார்வை.

கால்பந்து சார்ந்த ஒரு படம். வறுமை காரணமாக நைஜீரியாவில் இருந்து ஒரு கால்பந்து வீரர் கேரளாவிற்கு விளையாட வருவார். அவருக்குக் காலில் அடிபட்டு விடும். ஒரு மாதகாலம் ஓய்வு தேவை என்பதால் அந்த லோக்கல் கால்பந்து அணியின் மேனேஜர் வீட்டில் வந்து தங்குவார். அப்போது, தண்ணீர் எவ்வளவு முக்கியம், நைஜீரியா நிலை என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்லி மனதை உருக வைத்திருப்பார்கள்.

இதை, இங்கு சொல்வதன் மற்றொரு நோக்கம், நைஜீரியர்கள் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். பல முறை உலக கால்பந்து போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கின்றனர். ஒலிம்பிக் கால்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அணி இதுதான்.

கடந்த வாரம் அதிபர் முஹம்மது புஹாரி சுதந்திரம் பெற்ற சமயம் நடைபெற்ற போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அந்தப் பதிவு போராட்டம் செய்பவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாக இருக்கிறது எனக் கூறி ட்விட்டர் அந்தப் பதிவை நீக்கியது.
போராட்டம் செய்பவர்களுக்கு தங்களது கோரிக்கைகளை உரக்கச் சொல்ல ட்விட்டர் தளம் ஒரு பயனுள்ள சமூக வலைதளமாக மாறி இருக்கிறது என்றும், தன்னுடைய ட்வீட்டையும் நீக்கியிருக்கிறார்கள் என்ற கோபத்தில் அதிபர் முஹம்மது புஹாரி நைஜீரியாவில் ட்விட்டர் இயங்கத் தடை என்று அறிவித்தார். இந்தத் தடையை பயன்படுத்தி, வலதுசாரிகள் பயன்படுத்தும் கூ (KOO) என்ற சமூக வலைத்தளம் அங்கு தனது சேவையைத் தொடங்கியுள்ளது. அந்நாட்டு அரசும் ’கூ’வில் கணக்கத்தைத் தொடங்கி பயன்படுத்தி வருகிறது.
முதல் பத்தியில் சொன்னது நியாபகம் இருக்கிறதா? டி.வி பற்றிய இந்தியரின் கேள்விக்கு, நைஜீரியர் சொன்ன பதில்... இந்தப் போராட்ட நிலைதான் அவர்களை இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என பார்க்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்தப் போர்க்குணம் நைஜீரியர்களின் வீட்டில் பெரிய டிவியில் செய்தியை ஔிபரப்பச் செய்கிறது.
(பாதுகாப்பாக பயணிப்போம்)