
என் கணவர் ஒரு பிள்ளைப்பூச்சி. யாராவது சின்னப் பையன் அவர்கிட்ட சண்டைபோட்டாலும், ‘நீதான் பெரிய ஆளு’னு சொல்லிட்டு ஒதுங்கி வந்துருவாரு
பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேர வாட்ச்மேனாகப் பணியாற்றிவந்தவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அது தற்கொலைதான்’ என்று உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள் போலீஸார்’ என ‘பகீர்’ குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் வாட்ச்மேனின் உறவினர்கள்!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை அண்ணா காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம். 65 வயதான இவர், பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேரக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 19-ம் தேதி காலையில், பேரூராட்சி வாகனங்களை நிறுத்திவைக்கும் ஷெட்டில் அதிர்ச்சியூட்டும் விதமாகத் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். தொங்கினார் என்றுகூடச் சொல்ல முடியாது. கழுத்து தூக்கில் தொங்கினாலும், அவரது உடலும் கால்களும் இரும்புத்தூணுடன் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. மர்மம் நிறைந்த இந்த மரணத்தைத் தற்கொலை வழக்காகக் காவல்துறையினர் ‘முடித்துவைக்க’ துடிப்பதாக, பரமசிவத்தின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து, நம்மிடம் கண்ணீருடன் பேசிய பரமசிவத்தின் மனைவி சின்னப்பிள்ளை, “என் கணவர் ஒரு பிள்ளைப்பூச்சி. யாராவது சின்னப் பையன் அவர்கிட்ட சண்டைபோட்டாலும், ‘நீதான் பெரிய ஆளு’னு சொல்லிட்டு ஒதுங்கி வந்துருவாரு. அவர் தற்கொலை பண்ணிக்கிறதுக்கு எந்தக் காரணமும் கிடையாது” என்றார் வேதனையோடு.
பரமசிவத்தின் மூத்த மகனான முருகன், “தற்கொலை பண்ணிக்கிறவங்க காலையும் உடம்பையும் இப்படியா கம்பத்தோட சேர்த்து இறுக்கமா கட்டிக்கிட்டு, கழுத்துல தூக்குக்கயிறு மாட்டிக்குவாங்க... அவரோட சாவு கொலைதாங்கறதுக்கு எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கு. கால்ல கட்டியிருந்த கயிறோட இன்னொரு முனை, இன்னொரு இரும்பு பைப்புல கட்டப்பட்டிருக்கு. அதேபோல, அவர் பிணமாகத் தொங்கின பகுதியில விளக்கே எரியலை. `அதிகாலை 3-4 மணிக்குள்ள மரணம் ஏற்பட்டிருக்கும்’னு சொல்றாங்க. லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணிட்டு, அந்த இருட்டுக்குள்ள போய் கயிறைக் கட்டிக்கிட்டு, தூக்குல தொங்கினாரா... ‘மதுபோதையில இப்படிச் செஞ்சுருக்கலாம்’னு போலீஸ் எங்ககிட்டச் சொல்றாங்க. ஆனா, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுல அது பொய்னு வந்திருக்கு. அது மட்டுமில்லை, எங்கப்பாவோட நெஞ்சுல ஒரு பக்கம் வீங்கியிருந்துச்சு. முகத்துல கண்ணுக்குக் கீழ வீக்கமா இருந்துச்சு. இடுப்புல அரைஞாண் கயிறு கட்டுற இடத்துல சிராய்ப்பு இருந்துச்சு. நாங்க விசாரிச்சப்ப, இந்த விஷயத்துல நிறைய சந்தேகத்துக்குரிய காரியங்களும் நடந்திருக்கு” என்றவரிடம் மேலும் விசாரித்தோம்.


“எங்கப்பாவோட இரவு நேரத்துல, கூட தங்கியிருந்த ஜே.சி.பி ஓட்டுநர் ஒருத்தர், எங்கப்பா இறந்த மறுநாள்லருந்து எங்கே போனார்னே தெரியலை. பேரூராட்சி அலுவலகத்துல ஆறு மாசமா சிசிடிவி வேலை செய்யலை. பக்கத்துலேயே மருத்துவமனை, போலீஸ் குவார்ட்டர்ஸ், பேங்க், காவல் நிலையம்னு முக்கியக் கட்டடங்கள் இருக்கு. அங்க இருக்குற எந்த சிசிடிவி கேமராவுலயும் எங்கப்பா தூக்குல தொங்கின காட்சி பதிவாகலைனு போலீஸ் சொல்லுது. சம்பவம் நடந்த அன்னைக்கு அதிகாலை சுமார் நாலரை மணிக்குப் பேரூராட்சி அலுவலகத்துக்குப் பின்னாடி காம்பவுண்டைத் தாண்டிக் குதிச்சு நாலு பேர் ஓடியிருக்காங்க. அங்கிருந்தவங்க, ‘யாரு நீங்க?’னு கேட்டதுக்கு, ‘பேரூராட்சி அலுவலகத்துல வேலை செய்யறவங்க’னு சொல்லிட்டு ஓடுனதா சொல்றாங்க. ஆனா, அவங்களும் விசாரணைக்கு பயந்து அதை மறைக்குறாங்க. நடந்த உண்மை என்னன்னா, ராத்திரி பத்து மணிக்கு மேல ஏதோ ஆவணங்களைக் கொடுத்து, சேந்தமங்கலத்துல இருக்குற ஆபீஸுக்கு எங்க அப்பாவை அனுப்பிவெச்சுருக்காங்க. அங்கேயே இருந்துட்டு, அதிகாலை 4 மணிக்கு அந்த ஆவணங்களைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்துருக்கார். பகல்ல ஒரு வாட்ச்மேன் இருக்கார். அவரை அனுப்பாம ஏன் இரவு நேர வாட்ச்மேன்கிட்ட இப்படி ஃபைல்களைக் கொடுத்தனுப்பணும்... நடந்த ஊழலை மறைக்க, ஆவணங்களைத் திருத்த அனுப்பினாங்களானு எங்களுக்குச் சந்தேகமா இருக்கு. இதன் பின்னணியிலதான் எங்கப்பாவோட கொலை நடந்திருக்கணும்” என்றார் ஆவேசத்துடன்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பழ.மணிமாறன், “ ‘சந்தேக மரணம்’னு வழக்கு போட்டுட்டு, இறப்புச் சான்றிதழில் `தற்கொலை’ என்று போலீஸ் குறிப்பிட்டிருக்கிறது. வழக்கறிஞர் மூலமாக இது பற்றிக் கேள்வி எழுப்பிய பிறகே, ‘சந்தேக மரணம்’ என்று திருத்திக் கொடுத்திருக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த வாட்ச்மேன் பரமசிவத்தின் சாவுக்கு நீதி கேட்டு, எங்கள் தலைவர் திருமாவளவனை அழைத்துவந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதனால், போலீஸாரால் இந்த வழக்கை அவர்கள் நினைத்தபடி முடிக்க முடியவில்லை. கடந்த 30-ம் தேதி ராசிபுரத்தில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முயன்றோம். ஆனால், போலீஸார், ‘போராட்டத்துக்கு அனுமதியில்லை’ என்று சொல்லி தடுத்திருக்கிறார்கள். இந்த மரணத்துக்குப் பின்னால் பெரிய ஆட்கள் யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், போலீஸார் இவ்வளவு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றும்படி, நீதிமன்றத்தில் பெட்டிஷன் போடவிருக்கிறோம்” என்றார்.

இது குறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம் விளக்கம் கேட்டோம். “இதுவரை நாங்கள் 60 பேரை விசாரித்துவிட்டோம். எஸ்.பி சார் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடக்கிறது. தற்கொலையாக இருக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்றுதான் சொன்னோம். ஆனால், காவலாளி பரமசிவத்திடம் ஆவணங்களைக் கொடுத்து அனுப்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் புதிதாக இருக்கின்றன. அது பற்றி மேலும் விவரங்களைத் தெரிவித்தால், அந்தக் கோணத்திலும் விசாரணையைத் தொடர்வோம். மற்றபடி, போலீஸார்மீது சொல்லப்படும் புகார்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள்” என்றார்.

நாமகிரிப்பேட்டை பேரூராட்சியின் செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் பேசும்போது, “அது தற்கொலைதான். நான் புதிதாக இங்கு பணிக்கு வந்திருக்கிறேன். ஆவணங்களைக் கொடுத்து பரமசிவத்தை அனுப்பியதாகச் சொல்கிற தகவல்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றார் சுருக்கமாக.
ஏகப்பட்ட சந்தேகங்களும், குழப்பமும், மர்மமும் நிறைந்திருக்கும் இந்த வழக்கில், காவல்துறை பாரபட்சமற்று உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்!