விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, மன அழுத்தம் காரணமாக அசாதாரணமாக நடந்துகொண்டார். தனக்கு விடுதலை கிடைத்துவிட்டதாகத் தெரிவித்த அவர், தியானம் செய்வதுபோல நீதிமன்ற வாயிலில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், உறவினருடன் நிர்மலா தேவி பேசும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில், `எனக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் என்னால் சரிவர செயல்பட முடியவில்லை. அதனால், மன அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நெல்லை அல்லது மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். உடனடியாக அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ எனக் கேட்டுகொண்டார்.
அதனால், அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவுசெய்தனர். வழக்கறிஞரின் ஒத்துழைப்புடன் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக உள்நோயாளிகாக அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஏற்கெனவே மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த அவருக்கு, கடந்த மூன்று தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனிமையான இடத்தில் ஓய்வு எடுத்துவருகிறார். அங்கும் மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங், யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் இணைந்த சிகிச்சை அளித்துவருகின்றனர். பேராசிரியை நிர்மலா தேவி, மேலும் சில தினங்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று சொந்த ஊர் திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர் .