அருப்புக்கோட்டையைச்சேர்ந்த நிர்மலா தேவி, அங்கிருந்த தனியார் கல்லூரியில் படித்த மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நிர்மலாதேவி பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.

ஒரு கட்டத்தில் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியது. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 11 மாத சிறைவாசத்துக்குப் பிறகு மார்ச் 20-ஆம்தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி. அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
கடந்த முறை சுடிதார் அணிந்து ஆஜரான அவர், இன்று மீண்டும் பக்தியான தோற்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் 22- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்திலிருந்து வெகு நேரமாக அவர் வெளியேறவில்லை. நீதிமன்றத்தின் வாசற்படி மற்றும் வளாகத்தில் ஆங்காங்கே உள்ள இடங்களில் அமர்ந்து தனக்கு சாமி வந்தது போல அமர்ந்திருந்தார்.

அப்போது தனக்கு சாமி வந்ததாகக் கூறிய அவர் தனது கணவர் மற்றும் தனது உறவினர்கள் வந்து அழைத்துச்செல்வர் எனக் கூறி தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது போல் கண்களை மூடிக்கொண்டு, ``எனக்கு காலையிலேயே தீர்ப்பு கிடைத்து, நான் விடுதலையாகி விட்டேன். பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராகக் குற்றம் சாட்டிய மாணவிகள் தூக்குப்போட்டு இறந்து விட்டனர். என் உறவினர்களோடு மனரீதியாக பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். இது வெளியுலகுக்கு தெரியாது” என்றார். நீதிமன்றத்திற்கு வருகையில் தனது முடிகளை தானே வெட்டி அதை தன் மீது போட்டுக்கொண்டு வந்தார். கடந்த வாய்தாக்களில் அமைதியாக வந்து சென்ற நிர்மலாதேவி இம்முறை அவர் செய்த செயல்கள் நீதிமன்ற வளாகத்தை பரபரப்பில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.