அரசியல்
Published:Updated:

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை: மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்... - அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்

மத்திய அரசின் வருவாய் குறைந்துவிட்டது. அதனால், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகையைத் தருவதற்கு மத்திய அரசிடம் பணமில்லை

உங்களுக்கு ஒரு லட்ச ரூபாயை ஒருவர் தர வேண்டும். அந்தப் பணத்தை நீங்கள் திருப்பிக் கேட்கும்போது, ‘இப்போது என்னிடம் பணமில்லை. வேண்டுமென்றால், அந்தத் தொகையை என் மகனைக் கடனாகத் தரச் சொல்கிறேன். அதற்கு நீங்கள் வட்டி கட்ட வேண்டும்’ என்று சொன்னால் அதிர்ச்சியடைவீர்களா... மாட்டீர்களா? மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகையைக் கேட்டபோது, நிர்மலா சீதாராமன் சொன்ன பதில் அத்தகைய அதிர்ச்சியைத்தான் தந்திருக்கிறது.

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது தமிழக அரசு. இந்தக் காலகட்டத்தில் வரி வருவாயும் பெரிதாகக் கிடைக்கவில்லை. இதனால், 4,00,000 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து தனக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவைகள் வரி) நிலுவையைத்தான் தமிழக அரசு பெரிதாக நம்பியிருக்கிறது. மற்ற மாநிலங்களின் நிலையும் இதுவே!

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

இந்த நிலையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகை குறித்து விவாதிப்பதற்காக, ‘ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்ட’த்தைக் கூடியது. ஆகஸ்ட் 27-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாகத்தான் மயிலுக்கு உணவு வழங்கும் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ‘மயிலுக்கே உணவிட்ட பிரதமர், நம் சிரமத்தைப் புரிந்துகொள்ளாமலா போய்விடுவார்’ என்ற நம்பிக்கையில் மாநில அமைச்சர்கள் கூடியிருந்தனர்.

தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்களும், ‘‘ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அப்போதுதான் அவர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்தார் நிர்மலா சீதாராமன்.

‘‘மத்திய அரசின் வருவாய் குறைந்துவிட்டது. அதனால், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகையைத் தருவதற்கு மத்திய அரசிடம் பணமில்லை’’ என்று கையை விரித்தார் அவர். அத்துடன்விட்டாரா? ‘‘வருவாய் குறைந்ததற்கு கொரோனா காரணம். கொரோனா வந்தது கடவுளின் செயல்’’ என்றும் திருவாய் மலர்ந்தார்.

‘‘மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகையைத் தர இயலாது’’ என்று கூறிய மத்திய அரசு, அத்துடன் மாநிலங்களின் முன்பாகவைத்துள்ள இரண்டு சிறப்புத் திட்டங்கள்தான் தற்போது விவாதப் பொருளாகியிருக்கின்றன. ஒன்று, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தவுள்ள சிறப்புத் திட்டத்தின்கீழ், குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.97,000 கோடி வரை மாநில அரசுகள் கடன் வாங்கலாம். இரண்டாவது, மாநிலங்கள் சந்திக்கவுள்ள ஜி.எஸ்.டி வருவாய் பற்றாக்குறையான ரூ.2.35 கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். இவைதான் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ள ‘அசத்தல்’ திட்டங்கள். இதை, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்கவில்லை.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை: மத்திய அரசின் ‘அடேங்கப்பா’ திட்டங்கள்... - அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசியபோது, “தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி மற்றும் ஐ.ஜி.எஸ்.டி நிலுவையை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தினேன். ஐ.ஜி.எஸ்.டி பாக்கி ரூ.4,073 கோடி கிடைத்து விடும். ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகைக்காக இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு கூறியிருக்கிறது. அது பற்றி, தமிழக அரசு ஆராய்ந்துதான் முடிவெடுக்கும்’’ என்றார்.

பொருளாதார நிபுணர் அருண்குமார் தவேயிடம் பேசியபோது, “ஒவ்வொரு மாதமும் 2,00,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வருவாய் கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஓரிரு மாதங்களைத் தவிர, மற்ற மாதங்களில் 1,00,000 கோடி ரூபாயைக்கூட ஜி.எஸ்.டி வசூல் தாண்டவில்லை. ஜி.எஸ்.டி-யை ஒரு சர்வரோக நிவாரணிபோல மத்திய அரசு புரொஜெக்ட் செய்தது. ஆனால், அது பெரிய சொதப்பல் ஆகியிருக்கிறது.

ஜி.எஸ்.டி-யில் பிரச்னை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு, அதைச் சரிசெய்ய மத்திய அரசு தயாராக இல்லை’’ என்றார்.

பா.ஜ.க ஆதரவு வலதுசாரிப் பொருளாதார நிபுணரான ஸ்ரீராம் சேஷாத்திரியிடம் பேசியபோது, ‘‘ஜி.எஸ்.டி நிலுவையில் பெரும் பகுதியை மத்திய அரசு கொடுத்துவிட்டது. நிலுவைத் தொகையையும் நிச்சயமாகக் கொடுத்துவிடும். கொரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மத்திய அரசுக்கு வருவாய் குறைந்திருக்கிறது. எனவேதான், நிர்மலா சீதாராமன் இரண்டு கடன் திட்டங்களைக் கூறியிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக உறுதிமொழியளித்து, அதற்கென ஒரு சட்டத்தையும் இயற்றிய மத்திய அரசு, இப்போது தன் பொறுப்பைக் கைகழுவுகிறது. இனி மத்திய அரசின்மீது மாநில அரசுகளுக்கு எப்படி நம்பிக்கை வரும்?