Published:Updated:

ஐ.நா-விடம் கதறிய நித்தி!

நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
நித்யானந்தா

ப்ளூ ஃபிலிம்... வயாகரா ஊசி... ஆண்மைப் பரிசோதனை

`நான் ஒரு புறம்போக்கு. நான் ஒரு பரதேசி. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று வீடியோ வழியாகச் சவால்விட்டுள்ளார் நித்யானந்தா. சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், `எனக்கு எதிராக சர்வதேச அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் வேலை செய்துவருகிறது. பணம் பெருமளவில் செலவழிக்கப் பட்டுள்ளது. அவை அனைத்தையும் நான் ஆவணப்படுத்தி யுள்ளேன்’ எனக் குறிப்பிட்டார். எதற்காக இவற்றை ஆவணப்படுத்துகிறார் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. ஐ.நா-விடம் தனிநாடு கோரிக்கைக்காகவே அவற்றை நித்தி ஆவணப்படுத்தியதாகத் தெரிகிறது.

தனது தனிநாட்டுக் கனவை நிறைவேற்ற ஐ.நா-வுக்குக் கடிதம் ஒன்றை நித்தி கொடுத்திருந்ததை ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கடிதத்துடன் இதற்கு முன்பு தன்மீதான புகார்களை மீடியாக்கள் எப்படியெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன என்பதற்கான ஆவணங்களையும் இணைத்துள்ளார். இப்போது அவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாகத் திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் நித்தி. இதற்காக ஐ.நா-வுக்கு அவர் அனுப்பியதாகக் கூறப்படும் 46 பக்கக் கடிதத்தில் பல்வேறு பகீர் தகவல்களை கிட்டத்தட்ட கதறலாகவே வெளிப்படுத்தி யிருக்கிறது நித்தி தரப்பு.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஆபத்து!

நித்தி தரப்பின் முதல் குற்றச்சாட்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக உள்ளது. நித்யானந்தா, ஆதிசைவ மதமே தனது மதம் எனக் குறிப்பிடுகிறார். `அந்த மதத்தை சுமார் மூன்று கோடி பேர் பின்பற்றிவருகிறார்கள்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக் கிறது. `தென்னிந்தியாவில் ஆதிசைவ மதம் சிறுபான்மை மதமாக இருக்கிறது. இந்த மதத்துக்கு ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ.க ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. இந்த இந்து பயங்கரவாதிகள் ‘இந்து மதம் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். எங்களுடைய கலாசாரத்தை மட்டுமே அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும்’ என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்காக ஆதிசைவ மதத்தின் தலைவராக இருக்கும் என்மீது பல்வேறு தாக்குதல்களை நடத்துகிறார்கள்’ என்று பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள்மீது குற்றம்சாட்டியிருக்கிறார் நித்தி.

நித்யானந்தா
நித்யானந்தா

அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள் மாஃபியாக்கள்!

திராவிடக் கட்சிகளையும் விடவில்லை அவர். `தென்னிந்தியாவில்... குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே மாஃபியா போன்று செயல்படும் நாத்திகக் கட்சிகள். திராவிடக் கட்சிகளின் மூத்த தலைவராக இருந்த பெரியார், ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததே இதற்குச் சாட்சி. இவர்கள் எங்கள் மதத்தைப் பின்பற்றும் மக்களை மனரீதியாகத் துன்புறுத்தினார்கள். அந்தப் பிராந்தியத்தில் பெரும்பாலான மீடியாக்கள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. நீண்டகாலமாகவே தி.மு.க ஆதிசைவ மதத்துக்கு எதிரான கோட்பாட்டைப் பின்பற்றிவருகிறது.

அதேபோல், கர்நாடகத்திலும் பா.ஜ.க அரசு ஆதிசைவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள எங்கள் ஆசிரமத்தில் தமிழ் பேசும் சந்நியாசிகள் இருக்கிறார்கள். அவர்கள்மீது மொழி காழ்ப்புணர்வுகொண்டு தாக்குதல்கள் நடத்தினார்கள். கர்நாடக ரக்‌ஷண வேதிகே என்கிற அமைப்பு தமிழ் பேசும் ஆதிசைவர்களை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. கர்நாடக காவல்துறையும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்களும், பெரியார் திராவிட கழகத்தினரும் எங்கள்மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களால் நெருக்கடி!

இந்து பயங்கரவாதிகளால் ஒருபுறம் நெருக்கடி என்றால், மறுபுறம் இஸ்லாமியர்கள் எங்களை ‘காபிர்’ எனப் புறக்கணிக்கிறார்கள். இந்து வழிபாட்டுத்தலங்களைத் தகர்க்கின்றனர். கிறிஸ்துவ மிஷனரிகளும் இதே வேலையைத்தான் செய்துவருகின்றன’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா-விடம் கதறிய நித்தி!

மதுரை குருமகா சந்நிதானமே நான்தான்!

நித்யானந்தா சொல்லும் ஆதிசைவ மதம், மதுரையில் உருவானது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆதிசைவ மதம் மதுரையில்தான் உருவானது. மதுரை ஆதினமே அந்த மதத்தின் தலைமை பீடம். சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் இந்த மதத்தைத்தான் பின்பற்றினார்கள். தற்போது மதுரை ஆதினத்தின் 293-வது மகா சந்நிதானமும் நான்தான். ஆதிசைவ மதத்தின் கடவுள் அவதாரமும் நானே’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், நமது நாட்டின் சட்டரீதியான கலாசாரக் கட்டுப்பாடுகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்பாலின உறவுக்கு ஆதரவு!

`இந்தியா முழுவதுமே பெண்கள், திருநங்கைகள், தன் பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோருக்கு பல்வேறு சமூகப் பிரச்னைகள் இருக்கின்றன. ஆதிசைவம் மதம் பெண்களுக்கு சந்நியாசம் தருகிறது. தன்பாலின உறவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அவர்களுக்கு இந்துமதச் சடங்குகளுடன் திருமணம் நடத்துவதையும் அது அங்கீகரிக்கிறது. இப்படி 11 பாலின அடையாளங்களை எங்களுடைய ஆதிசைவ மதம் அங்கீகாரம் செய்துள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளும், கிறிஸ்துவ அடிப்படைவாத அமைப்புகளும் இவற்றை எதிர்க்கின்றன.

ஆதிசைவ மடத்தின் தலைவராக இருக்கும் என்னை இயற்கைக்கு மீறிய உறவுவைத்திருந்தாகக் கூறி 377 சட்டப்பிரிவில் கைதுசெய்தனர். பத்து ஆண்டுகளில் மட்டும் என்மீது 150 சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2010-ம் ஆண்டு கர்நாடக அரசும், தமிழகத்தின் தி.மு.க அரசும் இயற்கைக்கு மீறிய உறவை நான் வைத்திருந்ததாகச் சொல்லி கைதுசெய்தன.

இந்தியா, பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறிவருகிறது. பெரும்பான்மை இந்துத்துவ அமைப்புகள் ஆண்கள் மட்டுமே சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும் என்கின்றன. இதனால், ஆதிசைவ பெண் சந்நியாசிகள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்துதுவ தீவிரவாதிகள் கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சந்நியாசிகள்மீது உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்’என்றும் சொல்லப் பட்டுள்ளது.

ப்ளூ ஃபிலிம்... ஆண்மைப் பரிசோதனை!

நித்யானந்தா - ரஞ்சிதா பாலியல் சர்ச்சை வெடித்தபோது, அவருக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்தும் கடித்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. `என்னைக் கைதுசெய்த பிறகு என்னை மருத்துவமனையில் 48 மணி நேரம் வைத்திருந்து சோதனை செய்தார்கள். முதலில் எனக்கு பாலியல் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வயாகரா ஊசிகளை பலமுறை போட்டனர். பிறகு, என் ஆண்மையைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி சில மருத்துவர்களின் முன்னிலையில் ப்ளூ ஃபிலிம் (ஆபாச படம்) பார்க்கக் கட்டாயப்படுத்தினர். என் ஆண்மையின் உச்சத்தை அதிகரிக்க, பெண் ஊழியர் ஒருவரைவைத்து சில்மிஷங்கள் செய்தனர். இப்படி, பலவந்தமான முறையில் எனக்கு பலமுறை பரிசோதனைகள் நடந்தன. மாரடைப்பு ஏற்படுத்தும் ஊசியும் எனக்குச் செலுத்தினார்கள். காவல்துறை விசாரணையில் குளிர்ந்த நீரை ஊற்றி என்னைத் தூங்கவிடாமல் செய்தனர். என்னை என்கவுன்ட்டரில் கொல்லப்போவதாகவும் மிரட்டினார்கள்’ என்று சொல்லும் கடிதம், தொடர்ந்து நித்திமீதான கொலை முயற்சிகளையும் விவரிக்கிறது.

‘கடந்த பத்து ஆண்டுகளில் இந்து தீவிரவாத அமைப்புகள், பலமுறை என்னைக் கொல்ல முயன்றன. 2018-ம் ஆண்டில் மட்டும் மூன்று கொலை முயற்சிகள் நடந்தன. உணவில் விஷம் வைத்தார்கள். காரில் செல்லும்போது தாக்கினார்கள். இதில் என் சீடர்கள் படுகாயம் அடைந்தார்கள். 2018, ஜூன் மாதம் எனது ஆசிரம அறைக்குள் மூன்று பேர் ஆயுதங்களுடன் நுழைந்தார்கள். நான் குளியலறையில் ஒளிந்துகொண்டு தப்பினேன். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தால், புகாரை ஏற்கவில்லை. இந்தியாவில் காவல்துறை, நீதித்துறை, மீடியா அனைத்துமே பா.ஜ.க அரசின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன. எனவே, எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா-விடம் நித்தி எதிர்பார்ப்பது என்ன?

`இந்தியாவில் இந்துத்துவத் தீவிரவாத அமைப்புகள் இந்திய ஆட்சிப் பீடத்தின் உச்ச பொறுப்பில் உள்ளதால், எங்களைப் போன்ற ஆன்மிக சிறுபான்மை அமைப்புகள் தாக்கப்படுவதையும், இனப்படுகொலை செய்யப்படுவதையும் சர்வதேசச் சமூகத்தின் முன்பாக நாங்கள் கொண்டுவந்துள்ளோம். ஐ.நா சபை இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று இறுதியாக அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தாவைப் பிடிக்க, இன்டர்போல் அமைப்பின் உதவியை மத்திய அரசு ஏற்கெனவே நாடியிருக்கும் நிலையில், இந்தக் கடிதம் மத்திய அரசுத் தரப்பை குறிப்பாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கொதிப்படையச் செய்துள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகளின்மீதும் கடிதத்தில் கடுமையான குற்றசாட்டுகள் வைக்கப் பட்டிருப்பதால், அந்தத் தரப்பினரும் நித்யானந்தா தரப்பினர்மீது கடும் கொதிப்பில் உள்ளனர்.

இந்தக் கடிதம் குறித்து நித்யானந்தா தரப்பு கருத்தறிய அவரின் webmaster@nithyananda.org இ-மெயில் முகவரிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறோம். வழக்கம்போல் பதில் இல்லை.

- லியானா

அட்டை மற்றும் படங்கள்: www.nithyananda.org

இருள் சூழ்ந்த திருவண்ணாமலை நித்தி ஆசிரமம்!

நித்தியின் சொந்த ஊர் திருவண்ணாமலை. அங்கு உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது அவரது ஆசிரமம். கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாகவே இந்த ஆசிரமம் மூடப்பட்டிருக்கிறது. ``உள்ளே சுமார் 10 சீடர்கள் இருக்கலாம்’’ என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். ``உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவுக்கு பத்து அடி உயரத்துக்கு இரும்பு கேட் போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பது கிடையாது. இரவு நேரத்தில் மட்டுமே சீடர்கள் வெளியே வந்து செல்கிறார்கள்’’ என்கிறார்கள் அந்த ஏரியாவில் உள்ள சாதுக்கள். ஆசிரமத்தில் முன்பெல்லாம் சந்நியாசிகளுக்கு அன்னதானம் செய்வார்கள். அதையெல்லாம் இப்போது நிறுத்திவிட்டார்கள்.

திருவண்ணாமலையில் டிசம்பர் 1-ம் தேதி முதலே கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கிவிட்டது. டிசம்பர் 10-ம் தேதி பெருதீபத்திருவிழா. அண்ணாமலையார் கோயிலில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுபோலவே நித்தியின் ஆசிரமத்திலும் பத்து நாள்கள் பூஜைகள் நடைபெறும். அந்தப் பத்து நாள்களும் நித்தியின் உருவச் சிலையை வைத்து, அவருடைய சீடர்கள் ஆராதனை செய்வார்கள். நித்தியின் தலைமறைவு வாழ்க்கையால் இந்த ஆண்டு இருள் சூழ்ந்துகிடக்கிறது ஆசிரமம்!