`புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது; தென் தமிழகம் நோக்கி நகரும்!’ - வானிலை ஆய்வு மையம் #LiveUpdates

நிவர் புயல் குறித்த செய்திகளின் தொகுப்பு..!
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிவர் புயலாக வலுப்பெற்று நேற்று இரவு கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்தது. இந்தநிலையில், வரும் 29-ம் தேதி தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்தடுத்த நாள்களில் அது மேலும் தீவிரமடைந்து தென் தமிழகம் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது!
கடலூரில் முதல்வர் ஆய்வு!
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுவருகிறார். புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை பார்வையிட்ட முதல்வர், சேதாரங்கள் குறித்து விவசாயிகளிடமும் அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாதுகாப்பு முகாமிலிருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களிடமும் கலந்துரையாடினார் முதல்வர். பின்னர் புயல் நிவாரண பொருள்கள் வழங்கினார். தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறார் முதல்வர்!
நிவர் புயல் மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கும்!
நிவர் புயல் காரணமாக அதிகபட்சமாக சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரத்தில் 31.4 செ.மீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, விழுப்புரத்தில் 28 செ.மீ மழையும், கடலூரில் 27 செ.மீ மழையும் பதிவாகியிருக்கின்றன.
தற்போதைய நிலையில், நிவர் புயல் புதுச்சேரியிலிருந்து வடமேற்கே 50 கி.மீ தொலைவில் நிலப்பகுதியில் நிலைகொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் நிவர் புயல் மேலும் வலுவிழக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நிவர் புயலால் மரக்காணம் பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. படங்கள்: அ.குரூஸ்தனம்
புதுச்சேரியில் தேங்கியிருக்கும் மழைநீர் - படங்கள்:தே.அசோக்குமார்
`நிவர்' புயல் கரையைக் கடந்தது
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புதுச்சேரி அருகே நேற்றிரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2:30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது. அதி தீவிர நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே வலுவிழந்து தீவிரப் புயலாக மாறி கரையைக் கடந்தது. தீவிரப் புயல் கரையைக் கடந்தநிலையில், அடுத்த ஐந்து மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 5,000 கன அடியாகக் குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து 9,000 கன அடியாக 25-11-2020 இரவு அதிகரிக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 24 அடியில், நீர்மட்டம் 22.03 அடியாக உயர்ந்திருக்கிறது. இந்தநிலையில் மழைப் பொழிவு குறைந்திருப்பதால், உபரிநீர் திறப்பு 5,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
கடலூரில் 24.6 செ.மீ மழை!
கடலூரில் 25-ம் தேதி காலை 8:30 மணி முதல் நள்ளிரவு 2:30 மணி வரை 24.6 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரியிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை பெய்யும். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுச்சேரி!
புதுச்சேரி: நிரம்பி வழியும் பெரிய வாய்க்கால். ஆம்பூர்-செஞ்சி சாலைகளில் மழை வெள்ளம். புதுச்சேரியின் முக்கிய வாய்க்காலான பெரிய வாய்க்கால் முழுமையாக நிரம்பி சாலையின் இருபுறமும் வெள்ளம்போல் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
புதுச்சேரி நகரின் மையத்திலுள்ள செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை ஆகியவற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கு இடைப்பட்ட பெரிய வாய்க்காலில் நீர் முழுமையாக நிரம்பி இருபுறமும் கரைக்கு வெளியே மழை நீர் வெள்ளம்போல் இரண்டு சாலைகளிலும் மழை வெள்ளம் ஓடியது. இதனால் அவ்வழியே வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் கார்களும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
புதுச்சேரி நகர் முழுவதும் சாலைகளில் மழை வெள்ளம். முழங்கால் அளவுக்கு மழை நீர் நிற்பதால், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் பாதி அளவு மூழ்கி, பழுதாகி நிற்கின்றன.
உப்பளம் உழவர் சந்தை, அரசு மருத்துவமனை அருகே பழைய மரங்கள் வேறோடு சாய்ந்தன. பில்லுக்கடை பகுதியில் வீடு இடிந்து விழுந்திருக்கிறது. கனமழை தொடங்கியது. நிவர் புயல் கரையைக் கடந்தபோது புதுச்சேரியில் பலத்த காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- ஜெ.முருகன்
புதுவை அருகே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கத் தொடங்கிய நிவர் புயல்!
புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அதி தீவிரப் புயலாக நிவர் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயலின் மையப் பகுதி மூன்று மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் இடங்களில் மணிக்கு 120 கி.மீ முதல் 140 கி.மீ வரை சூறைக்காற்று வீசத் தொடங்கியது. அதிகாலை 3 மணியளவில் புயல் முழுவதுமாகக் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரி, கடலூர் பகுதியில் அதீத கனமழை பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
செம்பரம்பாக்கத்திலிருந்து 9,000 கன அடி நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 7,000 கன அடியிலிருந்து 9,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 7,000 கன அடி நீர் திறப்பு!

தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நீர்வரத்து சுமார் 6,500 கன அடியாக இருக்கும் நிலையில், ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 5,000 கன அடியிலிருந்து 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (26-ம் தேதி) பொதுவிடுமுறை!
நிகர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (26-ம் தேதி) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நிகர் புயல் காரணமாக இன்று அரசு பொதுவிடுமுறை அறிவித்திருந்தது. புயல் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளையும் பொதுவிடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி நாளாக வரும் டிசம்பர் 19-ம் தேதி பணிபுரிய வேண்டும். அத்தியாவசியப் பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை, கொரோனா பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. ஆளுநர் கிரண் பேடி உத்தரவின் பேரில் இதற்கான ஆணையை சார்பு செயலர் ஹிரண் பிறப்பித்திருக்கிறார்.
பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள நாகரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மீட்புப் பணியில் கடற்படை கப்பல்கள்!

நிவர் புயல் மீட்புப் பணியில் கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா, ஐ.என்.எஸ் ஜோதி கப்பல்கள் ஈடுபட இருப்ப்பதாக கிழக்கு கடற்படை தலைமையகம் அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முதற்கட்டமாக ஐ.என்.எஸ் ஜோதி தமிழகம் வந்திருக்கிறது. ஐந்து வெள்ள மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கிறார்கள்.
நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம்!
நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை மாநகரின் முக்கியச் சாலைகள் மூடப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும்.

அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை நிவர் புயல் காரணமாக மூடப்படுகிறது.
கரம்கோர்ப்போம் வாருங்கள்

நிவர் புயல் வலுப்பெற்று வரும் நிலையில், நம்முடைய பாதுகாப்பு அவசியமாகிறது. இந்த ஆபத்தான காலகட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக #NivarVikatanHelp என்ற ஹேஷ்டேகுடன் ‘விகடனை’ மென்ஷன் செய்து பதிவிடுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அதை உடனடியாக எடுத்துச் செல்கிறோம். #Staysafe
கரையை தொட்டது நிவர்!

நிவர் புயலின் வெளிச்சுற்று கடலூரில் கரையை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் முக்கிய பகுதி கரையைத் தொட இன்னும் 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது!
20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது. மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது!
எட்டு மாவட்டங்களில் மூன்று மணி நேரத்துக்கு இடியுடன்கூடிய கனமழை!

நிவர் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என மாநிலப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்திருக்கிறது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
16 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை
நிவர் புயல் காரணமாக நாளை 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக செம்பரம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தநிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 16-ஆக அதிகரிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற நிவர்!
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்துவரும் நிவர் புயல் கடலூரிலிருந்து 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

கனமழையால் சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவந்தது. மொத்தக் கொள்ளளவான 24 அடியில் நீர்மட்டம் 22 அடியை நெருங்கிய நிலையில், நண்பகல் சுமார் 12 மணியளவில் 1,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 2 மணியளவில் அது 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில், தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஏரிக்கு 4,000 கன அடிக்கு மேல் நீர் வந்துகொண்டிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீர் வெளியேற்றம் 4,000 கன அடிவரை அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சாலைகள் மூடல்!
நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் பிரதான சாலைகள் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்கும்படியும் போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.
நிவர் புயல்: புதுச்சேரி நிலவரம்!
13 மாவட்டங்களில் நவம்பர் 26-ம் தேதி பொதுவிடுமுறை!
நிவர் புயல் இன்று இரவு அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 26) பொதுவிடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அதேபோல், சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாளையும் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை...!
நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி!
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கன அடி அளவுக்கு உபரிநீர் இன்று நண்பகல் 12 மணியளவில் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.
மொத்தம் 24 அடி கொள்ளளவுகொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியிருக்கும் நிலையில், நீர்வரத்து 4,027 கன அடியாக இருக்கிறது. இதனால், ஏரியிலிருந்து உபரிநீர் 1,000 கன அடி இன்று மதியம் 12 மணி முதல் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நீர்வரத்துக்கு ஏற்றபடி படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது.

இதனால், செம்பரம்பாக்கம் உபரிநீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் வழியிலுள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நெருங்கும் நிவர் புயல்!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றிருக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது அதி தீவிரப் புயலாக மாறும். நேற்று இரவு 11:30 மணி நிலவரப்படி நிவர் புயல் கடலூருக்கு 310 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 380 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்து நகர்ந்துவருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நாகை மற்றும் காரைக்காலில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல கடலூர் மற்றும் புதுச்சேரியில் 10-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னையில் விடிய விடிய பலத்த மழை பெய்துவருகிறது. நேற்று இரவு 8:30 முதல் இன்று காலை 5:30 மணிக்கு இடையே சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 120 மி.மீ மழை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல்: 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும்!
நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்துவருகிறது. இந்தநிலையில் அடுத்த ஆறு மணி நேரத்தில் நிவர் புயல் தீவிரப் புயலாக மாறி, பின்னர் அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புதுச்சேரியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 410 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருக்கிறது. புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், தற்போது மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வலுவடைந்து நாளை மாலை கரையைக் கடக்கும்!

`` `நிவர்' நாளை மாலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசும். மணிக்கு 120-130 கி.மீ வேகத்திலும், சமயங்களில் 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், நிவர் புயல் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியிருக்கிறது என்றும், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் எனவும், அதி தீவிரப் புயலாக வலுவடைந்து நாளை மாலை கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது!
தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை!
நிவர் புயல் காரணமாக முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முழுவேகம் பெற்றிருக்கின்றன. `நிவர்’ புயல், அதிதீவிரப் புயலாக மாறி, கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதிலிருந்து 24 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அபோது அவர், ``நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை வழங்கப்படும். அத்தியாவசியப் பணிகளிலுள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். நிவர் புயலின் பாதிப்பைப் பொறுத்து விடுமுறை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று அறிவித்தார்.
`நிவர்’ அதிதீவிரப் புயலாக மாறி, கரையைக் கடக்கும்!
' நிவர் ' புயல், அதிதீவிரப் புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தற்போது சென்னையிலிருந்து 430 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 380 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் நிலைகொண்டிருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதிலிருந்து 24 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை, சென்னை மெரினா கடற்கரை, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
இன்று மூன்று மாவட்டங்கள்; நாளை எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!
நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடலில் புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது. இந்தப் புயல் நாளை தீவிரமடைந்து மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கலாம். புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நாளை (நவம்பர் 25) அதீத கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி வரை மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏழு மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவையும் ரத்து!
நிவர் புயல் தாக்கத்தால், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து இன்று (நவம்பர் 24) நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இந்த ஏழு மாவட்டங்களைக் கடந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளும் சென்னையிலிருந்து இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் பேருந்துகள் விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும். புயல் காரணமாக அந்த ஏழு மாவட்டங்களைக் கடந்து செல்லும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவையும் நிறுத்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாகப் பேசிய அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், ``இந்த ஏழு மாவட்டங்களுக்கான ஆம்னி பேருந்து சேவையும் இன்று மதியம் 1 மணி முதல் நிறுத்தப்படும்’’ என்று தெரிவித்தார். ``டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அதற்கான பணம் திரும்ப அளிக்கப்படும்’’ என்றும் அவர் கூறினார்.
சென்னைக்கு அருகே 450 கி.மீ தொலைவில் நிவர் புயல்!
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல், நாளை மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகத் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதலே விட்டுவிட்டு இடியுடன்கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளில் தேங்கிய மழைநீரால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
நான்குமாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறுகிறது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் வேகம் மணிக்கு 15 கி.மீ-லிருந்து 4 கி.மீ-ஆகக் குறைந்திருக்கிறது. புதுச்சேரியிலிருந்து 440 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் நிலைகொண்டிருக்கிறது.

சென்னையிலிருந்து 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலைகொண்டிருக்கிறது.
இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ந்துகொண்டிருக்கிறது. இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
டெல்டா, வடகடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!
நிவர் புயல் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், ``தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை தீவிரப் புயலாக நிலைபெறும். தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 26-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும். 24, 25 ஆகிய தேதிகளில் டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் ஏனைய இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

அந்த இரண்டு நாள்களில் கடலோர மாவட்டங்களில் 50-55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் கரையைக் கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாள்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.
24-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், காரைக்கால் மாவட்டங்கள்.
25-ம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், விழுப்புரம், காரைக்கால் மாவட்டங்கள்.
கனமழை - 6-13 செ.மீ (ஒரு நாள் மழைப்பொழிவு) | மிக கனமழை - 13-20 செ.மீ | அதீத கனமழை -20 செ.மீ-க்கு மேல்.
ஆறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையிலிருந்து 590 கி.மீ தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து 550 கி.மீ தூரத்திலும் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதி தீவிரப் புயலாக நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 25 கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தேசியப் பேரிடர் மேலாண்மையைச் சேர்ந்த, தலா 20 பேர்கொண்ட ஆறு குழுவினர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்கள்.

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு எண்.3 ஏற்றப்பட்டிருக்கிறது!
கொந்தளிப்புடன் காணப்படும் புதுச்சேரிக் கடல்!
சென்னையை நெருங்கும் தீவிரப் புயல் நிவர்!
சென்னையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தீவிரப் புயலாக நாளை மறுநாள் பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இதனால், அடுத்த அறிவிப்பு வரும் வரை வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதலே கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. காரைக்கால் கடல் பகுதி கொந்தளிப்போடு காணப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 89 முதல் 117 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இதனால், நாகப்பட்டினம், கடலூர், பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.