அரசியல்
Published:Updated:

அடிச்சு புடுங்கறதுக்கு பேருதான் அரசாங்கமா? - கொதிக்கும் விவசாயிகள்... தகிக்கும் நெய்வேலி!

நெய்வேலி
பிரீமியம் ஸ்டோரி
News
நெய்வேலி

அவங்க தர்ற அடிமாட்டு விலையை ஏத்துக்கலைன்னா, குறிப்பிட்ட தேதியில வீட்டையும் நிலத்தையும் நிரவிட்டு, ‘கோர்ட்டுக்குப் போங்க’னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க.

நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்திருக்கும் என்.எல்.சி நிர்வாகம், அப்பகுதி மக்களிடமும் விவசாயிகளிடமும் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலைக்கு அவர்களது நிலத்தைக் கையகப்படுத்திவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டுவரும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், நிரந்தரத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள், சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனச் சுமார் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். தற்போது சுமார் 12,500 ஏக்கர் நிலத்தில் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த நிறுவனம், அதற்காக 26 கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. காணொலி மூலம் கடந்த 17-ம் தேதி, நெய்வேலித் திட்டங்களுக்கு நிலங்களை வழங்கியவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான புதிய கொள்கையை வெளியிட்டார், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. அதன்படி, ‘நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 23 லட்ச ரூபாயும், வீட்டுமனைகளுக்கு ஊரகப் பகுதிகளில் சென்ட் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும். அதோடு மறுகுடியமர்வுக்காக 2,178 சதுரஅடி மனையில் 1,000 சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும்’ என்று அறிவித்திருக்கிறது என்.எல்.சி நிர்வாகம்.

அடிச்சு புடுங்கறதுக்கு பேருதான் அரசாங்கமா? - கொதிக்கும் விவசாயிகள்... தகிக்கும் நெய்வேலி!

இந்த அறிவிப்பு, நிலக்கரி பூமியில் இருக்கும் விவசாயிகளை உஷ்ணமேற்றியிருக்கும் நிலையில், “ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டித்தரக்கூடிய வளமான நிலங்களின் சந்தை மதிப்பு, 60 முதல் 70 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அடிமாட்டு விலைக்கு வாங்க நினைக்கிறது என்.எல்.சி நிர்வாகம். ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதுடன் வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பும் தரவில்லையென்றால், பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ராமதாஸ். அதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. “பாதிக்கப்பட்ட மக்களிடமோ, விவசாயிகளிடமோ அல்லது அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளிடமோ கருத்துகளைக் கேட்காமல், ஒருதலைப்பட்சமாகப் புதிய மறுவாழ்வு மற்றும் குடியமர்வுத் திட்டத்தை அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. என்.எல்.சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், மக்கள் எழுப்பிய கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்காமல் கூட்டத்தைப் பாதியில் முடித்துக்கொண்டது என்.எல்.சி நிர்வாகம். அதில் கலந்துகொண்ட தி.மு.க அமைச்சர்களும் நிர்வாகத்துடன் இணைந்துகொண்டனர்” என்று கண்டித்திருக்கிறார்.

அடிச்சு புடுங்கறதுக்கு பேருதான் அரசாங்கமா? - கொதிக்கும் விவசாயிகள்... தகிக்கும் நெய்வேலி!

நிலம் கையகப்படுத்தப்படும் கிராமங்களில் ஒன்றான கரிவெட்டி கிராமத்து மக்களிடம் பேசினோம். “அவங்க தர்ற அடிமாட்டு விலையை ஏத்துக்கலைன்னா, குறிப்பிட்ட தேதியில வீட்டையும் நிலத்தையும் நிரவிட்டு, ‘கோர்ட்டுக்குப் போங்க’னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க. நிலத்தையும் வீட்டையும் கொடுத்துட்டு 15 லட்சத்துல என்ன வாழ்வாதாரத்தை எங்களால ரெடி பண்ணிக்க முடியும்? அதனாலதான் வீட்டுக்கு ஒருத்தருக்கு நிரந்தர வேலை கேக்கறோம். ஆனா, நிரந்தர வேலை தர முடியாதுனு கண்டிப்பா சொல்ற என்.எல்.சி., கான்ட்ராக்ட் வேலை தர்றோம்னு சொல்லுது. ஆனா, அதுக்கு பதிலா வாழ்வாதாரத் தொகை 15 லட்சம் தர மாட்டாங்களாம். நிலம் கொடுத்தவங்களுக்கு வேலை தரணும்னு என்.எல்.சியோட விதிமுறை சொல்லுது. ஒவ்வொரு வருஷமும் அந்தத் திட்டத்துல வடமாநிலத்தைச் சேர்ந்தவங்களுக்கு இங்க வேலை கொடுத்துட்டு இருக்காங்க. வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை கொடுக்கலைன்னா, நாங்க அத்தனை பேரும் என்.எல்.சியோட குழியில விழுந்து தற்கொலை பண்ணிக்குவோம்.

எங்ககிட்ட இருந்து பிடுங்கற காட்டுல கோடி கோடியா அரசாங்கம் சம்பாதிக்கப்போகுது. நேரத்துக்குச் சோறு தண்ணி உங்காம, மழை, வெயில், புயல்னு பார்க்காம நாங்க உருவாக்கி வெச்சுருக்கற காட்டை இப்படி அநியாய விலைக்கு அடிச்சுப் புடுங்கறதுக்குப் பேருதான் அரசாங்கமா? ஒரு மனைக்கு 40,000 தர்றோம்னு சொல்றாங்க. அந்தப் பணத்துல அரை சென்ட் இடத்தைக்கூட இப்போ வாங்க முடியாது. காடு இல்லாம வெறும் வீடு மட்டும் இருக்கறவங்க என்ன ஆவாங்க?” என்கின்றனர் கண்ணீருடன்.

விக்ரமன்
விக்ரமன்

இது குறித்து விளக்கம் கேட்க, என்.எல்.சி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் விக்ரமனைத் தொடர்புகொண்டோம். “மூன்றாவது சுரங்கத்துக்காக நில கையகப்படுத்தல் என்பது தவறான தகவல். ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் யூனிட்டுக்குத்தான் நிலங்களைக் கையகப்படுத்துகிறோம். அந்த யூனிட்டில் ஏற்கெனவே 100% பணியாளர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். அதனால், புதிய பணியாளர்களுக்கான தேவை இல்லை. ஆனாலும் நிலங்களைக் கொடுப்பவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதாகக் கூறியிருக்கிறோம். அதேபோல ஆர்.எஃப்.சி.டி (The Right to2 Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) சட்டத்தின்படி, விதிகளுக்கு உட்பட்டுத்தான் நிலங்களைக் கையகப்படுத்துகிறோம்” என்று முடித்துக்கொண்டார்.

நிலம் என்பது ஒரு நிறுவனத்துக்கு வெறும் அளவாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அது வாழ்க்கை!

அடிச்சு புடுங்கறதுக்கு பேருதான் அரசாங்கமா? - கொதிக்கும் விவசாயிகள்... தகிக்கும் நெய்வேலி!

தொல்லை கொடுக்கும் கும்பல்!

தங்கள் நிலங்களை என்.எல்.சி நிர்வாகம் அநியாய விலைக்கு வாங்குகிறது என்று புலம்பிக்கொண்டிருக்கும் விவசாயிகளிடம், “எங்கள் தொடர் நடவடிக்கையால்தான் உங்கள் நிலத்துக்கு 23 லட்சம் ரூபாய் கிடைக்குது. இல்லைன்னா வெறும் 15 லட்சம்தான் கிடைத்திருக்கும். அதனால், ஒரு ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் எங்களுக்குக் கொடுக்க வேண்டும்” என்று இரவும் பகலும் அவர்களுக்குத் தொல்லை கொடுத்துவருகிறதாம், அரசியல் கட்சிகளை பின்னணியாகக்கொண்டிருக்கும் ஒரு கும்பல்!